வெள்ளி, 29 அக்டோபர், 2010

Rajini பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!

 
எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.
கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:
"ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லிருந்தே சொந்தமாகப் படங்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் அவர், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்.

ஆனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடம் யாருக்கு என்று உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை விழுந்த தலை, நடுத்தர வயது கொண்ட அவர் இந்தியாவின் தமிழ்நாடு  என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த ரஜினிகாந்த் வெறும் நடிகரில்லை. எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒரு இயற்கைச் சக்தி மாதிரி. புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை 'ரஜினிகாந்த்' எனலாம் (If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth!). அதாவது அவரது படங்களில் குறிப்பிடப்படுவது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இதுவரை உங்களுக்கு இவரைத் தெரியவில்லை என்றால், வரும் அக்டோபர் 1-ம் தேதி தெரிந்து கொள்வீர்கள். அன்றுதான் அவரது எந்திரன் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் இதுவரை தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் உருவானது எந்திரன்தான். இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கும் மேல் ஒரே நேரத்தில் வெளியீகிறது. இந்த செலவுக்குக் காரணம்
சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெஷல் எபக்ட்ஸுக்கு ஜார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்த கலைஞர்கள், இவ்வளவு பட்ஜெட் எல்லாவற்றையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பக் காரணம், இது ரஜினிகாந்த் படம் என்பதால் மட்டுமே!"
-இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை, ரஜினியின் சிறப்புகள், அவர் செய்யும் நல்ல காரியங்கள், அவருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கும் உள்ள வேற்றுமைகள், அவரது இயல்பான யதார்த்த வாழ்க்கை, அவர் பெற்றுள்ள வெற்றிகள் என பல அம்சங்களையும் அலசுகிறது. இரண்டு பக்கத்துக்குப் போகிறது.
இந்தக் கட்டுரையில் மேலே நீங்கள் பார்த்த ஆரம்ப வரிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார் இந்தியா டுடே இதழின் எடிட்டர் - இன்- சீஃப் அருண் பூரி.
ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு  என பல மொழிகளிலும் இந்தக் கட்டுரை வெளியாகிவிட்டது. அடுத்த நாளே, இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஸ்லேட் வெளியிட்ட கட்டுரையின் அப்பட்டமான காப்பி என்பது தெரிந்துவிட, உடனடியாக ஸ்லேட் பத்திரிகைக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியிருந்தார் அருண் பூரி. இந்தியா டுடேயின் அடுத்த இதழில் ஒரு விளக்கமும் வெளியிட்டார்.
"தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் டெல்லியில் உள்ள பணியாளர்களிடம் அவரைப்பற்றி சில குறிப்புகள் கேட்டிருந்தேன். அவ்வாறு பெறப்பட்ட குறிப்புகளில் துரதிருஷ்டவசமாக வேறு ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள் என்னுடைய கட்டுரையில் இடம்பெற்றுவிட்டன. எப்படி இருந்தாலும் என் தவறுதான். வருத்தங்கள்", என குறிப்பிட்டிருந்தார்.
ஒரிஜினல் கட்டுரையை எழுதிய ஹென்ட்ரிக்ஸுக்கும் மன்னிப்புக் கடிதம் அனுப்பினார்.
அதில், "உங்கள் கட்டுரையின் ஒரு பகுதி எனது தலையங்க கட்டுரையில் கவனக்குறைவாக இடம்பெற்றுவிட்டதற்கு, எங்கள் வாசகர்களிடம் நாங்கள் வருத்தம் தெரிவித்ததை கட்டாயம் அறிந்திருப்பீர்கள். உங்களிடமும் என் வருத்ததை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆசிரியருக்கும் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த மன்னிப்பை ஏற்காத ஹென்ட்ரிக்ஸ், நடந்த தவறுக்கு வருந்தும் எண்ணம் ஏதும் அருண் பூரிக்கு இல்லை என்றும் தனது தவறை மறைக்க சப்பைக் காரணம் கண்டுபிடித்துச் சொல்கிறார் என்றும் கூறியுள்ளார்.
"இந்தியா டுடே பத்திரிகை ரஜினியைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளதை நான் அறிந்துள்ளேன். இந்தியாவின் முதல் 50 சக்தி மிக்க மனிதர்களின் பட்டியலில் ரஜினிக்கும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இடமளித்து வருகிறது. இப்படிப்பட்டவரைப் பற்றி தெரியாது என இந்தியா டுடேயின் நிறுவனர், முதன்மை ஆசிரியர் என்ற மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள அருண் பூரி கூறுவதை வியப்பை அளிக்கிறது. தனக்கு சரியாகத் தெரியாத ஒருவரையா இந்தியாவின் சக்தி மிக்க மனிதராக அந்தப் பத்திரிகை பட்டியலிட்டது?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்!
- தற்ஸ்தமிழ்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக