புதன், 6 அக்டோபர், 2010

Ragav:'என்னை மாற்றிய எந்திரன்'

Raaghav with Aishwarya Rai
எந்திரனில் இரு சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எனக்கும் கெட்டப் சேஞ்ச் செய்து அழகான அனுபவத்தைக் கொடுத்தார் இயக்குநர் ஷங்கர் என்கிறார் நடிகர் ராகவ்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அண்ணி டிவி சீரியல் மூலம் நடிகரானவர் ராகவ். அதில் அவர் காட்டிய அபார நடிப்புத் திறமை பின்னர் அவரை சினிமாவுக்கும் கூட்டி வந்தது.

நடிகராக மட்டுமல்லாமல் நடனக் கலைஞராக, இசையமைப்பாளராக பல முகம் கொண்ட ஒருதிறமைசாலிதான் ராகவ். இப்போது லேட்டஸ்டாக அவருக்கு வந்துள்ள பெருமை எந்திரனில் நடித்தது.

அதுகுறித்து ராகவ் கூறுவது...

எந்திரனில் நான் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளேன். அந்தக் காட்சியில் இரு பெரும் திரையுலக ஜாம்பவான்களான ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்துள்ளேன். இந்தக் காட்சியை சென்னையிலும் புனேயிலும் வைத்து 18 நாட்கள் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர்.

எனது ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம், நடிப்பு என அனைத்தையுமே படக் குழுவினர் வெகுவாகப் பாராட்டினர். எனக்கு அது ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அங்கு கிடைத்த அங்கீகாரமும், பாராட்டும் சர்ப்ரைஸாக இருந்தது.

படப்பிடிப்பின்போது என்னை ரஜினி சாரும், ஷங்கரும் வெகுவாக பாராட்டி ஊக்குவித்தனர். எனது நடிப்பை வெகுவாக பாராட்டினர். அக்காட்சியில் நான் ஒரு வீட்டில் படு சத்தமாக ஒலிபெருக்கிய ஒலிக்க விட்டிருப்பேன். அந்தக் காட்சியில் நான் நடித்து முடித்ததும் சூப்பர் ஸ்டார் என்னை கட்டி அணைத்துப் பாராட்டினார். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப் பெரிய பரிசு அது.

அதேபோல ஸ்டண்ட் மாஸ்ட்ர் பீட்டர் ஹெய்ன் மற்றும் பிரான்ஸ், வியட்நாமைச் சேர்ந்த சர்வதேச சண்டைக் கலைஞர்களுடன் கலந்து கொண்ட சண்டைக் காட்சியும் மறக்க முடியாதது. புனேவில் மின்சார ரயிலில் வைத்து அதைப் படமாக்கினர். அதுவும் எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாத மிகப் பெரிய சந்தர்ப்பமாக அமைந்தது.

எனக்குப் பாராட்டு சொல்லிச் சொல்லி போன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பேஸ்புக்கிலோ பாராட்டுச்செய்திகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முன்பு சிலம்பாட்டத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தேன். சத்தம் போடாதே படத்திலும் நல்ல கேரக்டர் கிடைத்தது. வட்டாரம், சக்கரவியூகம், ஜெர்ரி, ஏய் நீ ரொம்ப அழகே இருக்கே ஆகிய படங்களிலும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.

சிலம்பாட்டத்தில் நான் முனுக்கென்று மூக்கு நுனியில் கோபம் வரும் கிராமத்து சண்டியராக நடித்திருந்தேன். ஹீரோ சிம்புவுடன் மோதும் கேரக்டர். அதிலும் எனது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. எனது கெட்டப்பும் பேசப்பட்டது.

சத்தம் போடாதே படத்தில் ஹீரோயின் பத்மப்ரியாவின் பாசமிகு அண்ணனாக நடித்திருந்தேன். இதில் எனக்கு வித்தியாசமான ரோல். தனது தங்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு டைவர்ஸ் வாங்க கடுமையாக பாடுபடும் அண்ணனாக, அவருக்கு மறுமணம் புரியத் துடிக்கும் அண்ணனாக நடித்திருந்தேன்.

அந்த ரோலுக்காக இன்றும் கூட எனக்குப் பாராட்டி மெயில்கள் வருகின்றன. உங்களைப் போன்ற ஒரு சகோதரர் எனக்கு இல்லையே என்று கூறுவோரும் உண்டு.

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் வந்துச்சோ பாடலுக்கு நான்தான் இசையமைத்தேன். சங்கர் மகாதேவன் பாடியிருந்தார். அதுதான் நடிப்பிலும் எனக்கு முதல் படம். இயக்குநர் வசந்த்தான் என்னை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது நஞ்சுபுரம் படத்தில் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பல வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். இதில் மோனிகா நாயகியாக நடித்துள்ளார். கிராமத்து திரில்லர்க தை இது. படம் முடிந்து விட்டது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.

ஜோடி நம்பர் 1, ராணி 6 ராஜா யாரு, மானாட மயிலாட ஆகிய நடன ரியாலிட்டி ஷோக்கள் மூலம் எனக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவைதான் எனக்கு சரியான பிளாட்பார்ம் ஆக அமைந்தது. அதன் பிறகுதான் எனக்கு சினிமாவில் பிரேக் கிடைத்தது. எனவே இவற்றை மறக்க மாட்டேன் என்கிறார் ராகவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக