செவ்வாய், 5 அக்டோபர், 2010

Prof.Parween Sultana:எல்லைக்கோடு போட்டுக்கொள்ளுங்கள் : பெண்களுக்கு அறிவுரை

""பெண்கள், தங்களுக்கு தாங்களே எல்லைக்கோடு போட்டுக் கொள்ள வேண்டும்; அடுத்தவர்களை போட விடக்கூடாது,'' என, பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார்.
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், "சேம்பர் ஷோ வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி கோவை, ஆவராம்பாளையத்தில் நடந்தது. இதையொட்டி, "ஆணிவேர்' என்ற தலைப்பில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில், சென்னை கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசியதாவது:நாட்டில் பற்றி எரியும் பிரச்னைகள் பல இருந்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாவது சினிமா படம் பார்க்க மக்கள் தயாராக உள்ளனர். ஒன்றுமே இல்லாத பொழுதுபோக்கு விஷயங்களில் பங்கெடுத்து, அதற்கும் ஒரு பங்கு தொகையை கொடுப்பதில் அவசரம் காட்டுகிறோம். பெண்ணை தெய்வமாக வழிபடும் பெருமை பெற்றது இந்திய மண். இவ்வளவு ஆண்டுகளாக ஒன்றை மட்டும் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். கோவில்களில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதில்லை; சக்தியாக கருதப்படுகின்றனர். அந்த சக்தி வெளிப்பாடு இருப்பதால், எப்போதும் சாந்தப்படுத்துகின்றனர். அம்மன் வழிபாடு, சக்தியை சாந்தப்படுத்துவதாக உள்ளது. சக்தியின் வடிவமாக பெண் உள்ளதால் தான், ஆண்கள் அவர்களை சமையலறையில் வைத்துள்ளனர். அந்த சக்தியை பயன்படுத்திக் கொள்ள அச்சம் கொண்டுள்ளனர். சக்தி, சமையலறையில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

அக்காலத்தில் பெண்களுக்கு பல விஷயங்கள் மறுக்கப்பட்டன. கல்வி மறுக்கப்பட்டது. பெண் படித்து, கல்வி பெற்று, புத்தி பெற்று விட்டால் ஆண்களால் சமாளிக்க முடியாது என்பதால், கல்வி மறுக்கப்பட்டது. புத்தியுள்ள பெண்ணோடுகுடும்பம் நடத்துவது கடினம். ஆனால், முட்டாள் பெண்ணோடு எளிதாக வாழ்ந்து விடலாம். எந்த தொழிலும் பெண்கள் இல்லாமல் நடந்ததில்லை. இப்போதும் கூட, பெண்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? உழைக்கும் பெண்கள், உழைக்கும் எண்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அப்படி பெண்கள் இல்லை. சம்பளம் வாங்கும்பெண், சம்பளம் வாங்காத பெண் என வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம். வெளியில் சென்று வேலை பார்த்து சம்பாதிக்கும் பெண்கள் எனச் சொல்லலாம்.

ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் "என்ன செய்கிறாய்?' எனக் கோட்டால், "சும்மா தான் இருக்கேன்' எனச் சொல்லி தங்களை தாழ்த்திக் கொள்கின்றனர். எந்த "பைத்தியமும்' கூட, சும்மா இருக்காது. வீட்டில், ஆணுக்கு ஒன்று தெரியவில்லை என்றால், அது அபத்தம்; பெண்ணுக்கு அது தெரியவில்லை என்றால் பெருமை எனக் கருதுகின்றனர். "அவளுக்கு ஒன்றும் தெரியாது' எனச் சொல்லி பெருமை கொள்கின்றனர். பெண்களும் கூட, "எனக்கு ஒன்றும் தெரியாது' எனச் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றனர். இப்போதும் கூட, பெண்களுக்கு சரிநிகர் சுதந்திரம் அளித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், வேலைக்கு செல்லும் பெண்கள், கணவர்களிடம் கணக்கு சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

பெண்களே, உங்களுக்கு நீங்களே எல்லைக் கோடு போட்டுக் கொள்ளுங்கள்; அதுவே பாதுகாப்பு; அது எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அடுத்தவர்களை எல்லைக்கோடு போட விட்டால், அதை தாண்டுவதா, வேண்டாமா என்ற எண்ணம் வந்து விடும்.இவ்வாறு, பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார். நிகழ்ச்சிக்கு சேம்பர் ஷோ தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித் தார். செயலர் நந்தகுமார் நன்றி கூறினார்.
எஸ் குப்புசாமி - சென்னை,இந்தியா
2010-10-05 04:38:10 IST
ஐயோ யாராவது இந்த ஆண்களை காப்பாற்றுங்கள். சென்னை யில் உள்ள நகர பேருந்துகளில் ஆண்கள் சீட் எல்லாம் பெண்கள் தான் உட்காருகிறார்கள். கொஞ்சம் படித்து விட்டால் பெண்கள் தலைக்கு மேல் ஆடுகிறார்கள். பெண்களின் எல்லைகோடு ஆண்களை தொடாமல் இருக்க வேண்டும். தொட்டால், அது கொலை கோடாக மாறிவிடும்....
நெல்லை டவுன் லெனின் துரை - கத்தார்,கத்தார்
2010-10-05 01:28:57 IST
திருமதி பர்வீன் சுல்தானா அவர்களே உங்களது கருத்து முற்றிலும் தவறானது. சமயலரைக்காக பெண்கள் பயன்படுத்தவில்லை. பெண்கள் குடும்பத்தின் குத்துவிளக்கை போன்றவள். குடும்பத்தை பராமரிக்க பெண்ணே சிறந்தவள். அதற்காவே பெண்கள் அந்த காலத்தில் படிக்காமல், வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து எல்லா வேலைகளும் செய்து குடும்பத்தை பராமரித்து வந்தனர். அதனால் அந்த குடும்பமே சிறப்பாக அமைந்தது. காலபோக்கில் அது மாறிவிட்டது. சில குடிகார கணவனாலும், வேலை செய்யாத ஒழுக்கங்கெட்ட சோம்பேறி கணவனாலும் பெண்கள் படித்து குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்லும் நிலை வந்தது. காலபோக்கில் அதுவும் பெண்களை தவறான வழிக்கு கொண்டு சென்றது. பணத்தை பார்த்த பெண்கள் ஆண்களுக்கு சமமாக குற்றத்தை செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்று ஆயிரகணக்கான விவாகரத்துக்கு பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி விவாகரத்தான குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் தான். அன்பே தெய்வம். அந்த தெய்வத்திற்கு பெண்கள்தான் சமம். இப்பொது கூறுங்கள் யார் குடும்பத்தை பாசத்தோடு பராமரிப்பவர் என்று?.....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-05 01:11:39 IST
ஹலோ, என்னங்க இது? சுத்த பிதற்றல்தனமான பேச்சு. ஒரு கோர்வையே இல்லாம எதெதையோ பேசி நீங்க குளம்புறது மட்டும் இல்லாம கேக்கிறவங்களையும் குழப்பி விட்டுக்கிட்டு? இப்போ என்னதான் சொல்லவரீங்கன்னே புரியலையே? உங்க கருத்தோட சாராம்சம் என்ன? ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்? ரெண்டு புத்திசாலிங்க ஒண்ணா சேந்து ஏன் நல்லா குடும்பம் நடத்த முடியாது? எதா இருந்தாலும் ஏட்டிக்கு போட்டி பேசுறதுதான் புத்திசாலித்தனம், பெண் சுதந்திரம் ன்னு நெனச்சுகிட்டு குடும்பம் நடத்தினா நீங்க சொன்னா மாறிதான் நடக்கும். நீங்க மட்டும் இல்ல, உங்களமாறி இப்படிதான் நிறைய பெண்கள் நினைச்சுகிட்டு, நான் படிச்சவ, எனக்கு எல்லாம் தெரியும், நான் ஒன்னும் அடுப்படி இல்ல ன்னு பெரிசா நெனச்சுகிட்டு எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசிகிட்டு திரியுரதுனாலதான் எப்பேர்பட்ட புத்திசாலி, மற்றும் முட்டாள் கணவனால் கூட குடும்பம் நடத்த முடியாம போவுது. அத சொல்லி புரிய வைங்க மொதல்ல. அதை விட்டுட்டு ஒரு பக்கமாவே பேசிட்டு போறீங்களே. தெரியலேன்ன தெரியலேன்னு சொல்றதுல என்ன பெருமை? என்ன கவுரவ குறைச்சல்? தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தா அதற்க்கான முயற்சி எடுத்து தெரிஞ்சுகோங்க, தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க, தெரிந்து கொள்ள உதவுங்க. இப்படி பேசி பேசியே உசிர எடுத்தான் என்ன அர்த்தம். நம்ம ஊர்ல பெண் சுதந்திரம்ங்கிறத ரொம்ப தவறா புரிஞ்சுக்கிட்டு பேசுறாங்கப்பா. சுதந்திரம்ங்கிறது ஆக்கபூர்வத்துக்கு தானே தவிர அடாவடிக்கு இல்ல. அத புரிஞ்சுகோங்க, நல்லா இருப்பீங்க. ஒடனே வெளக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக