சனி, 9 அக்டோபர், 2010

Jayalalitha: அடக்குமுறைகளைக்கு அஞ்சாமல் பணியாற்றியவர் எஸ்.எஸ்.சந்திரன்

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல் கடமையுடன் செயல்பட்டு அதிமுக கொள்கைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்புச் சகோதரர் எஸ்.எஸ். சந்திரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அதிமுக கொள்கைகளையும், ஆளும் கட்சியினுடைய முறைகேடுகளையும் மக்களுக்குப் புரியும் வகையில், எளிமையான முறையில் பட்டி தொட்டியெங்கும் பரப்பி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன். மக்களை கவர்கின்ற வகையில் மிகவும் ஜனரஞ்சகமாக, நகைச்சுவை உணர்வோடு பேசும் அவருடைய பேச்சுத் திறன் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்; ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் பலமுறை அறிவுறுத்தி இருக்கிறேன். அதையும் பொருட்படுத்தாமல், முழு மூச்சுடன் கட்சிப் பணியாற்றி வந்தார்.

ஆளும்கட்சியின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் கடமை உணர்வுடன், கட்சிக்காக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புற பணியாற்றியவர் எஸ்.எஸ். சந்திரன். பலமுறை திமுகவினரின் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர்.

அவருடைய அளப்பரிய கட்சிப் பணியையும், பேச்சுத் திறனையும் பாராட்டும் வகையில், அவரை அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமித்தேன். இது மட்டுமல்லாமல், கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.

அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் தன்னுடைய முத்திரையை பதித்த எஸ்.எஸ். சந்திரன், 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.

அதிமுகவை பொறுத்த வரையில், அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். திரைப்படத் துறைக்கும் அவருடைய மறைவு மிகப் பெரிய இழப்பு.

அன்புச் சகோதரர் எஸ். எஸ். சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நேரில் சென்று அஞ்சலி:

முன்னதாக சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.சந்திரன் வீட்டுக்கு விரைந்த ஜெயலலிதா அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


துடிதுடித்துப் போனேன்-வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திராவிட இயக்கக் கொள்கை வீரரும், கலை உலகின் நகைச்சுவைத் தென்றலும், அ.தி.மு.க. முன்னணியினருள் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் எஸ்.எஸ். சந்திரன் மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியால் துடிதுடித்துப் போனேன்.

அறிஞர் அண்ணாவின் தம்பிமார்களுள் ஒருவராக, கலை உலகில் முத்திரை பதித்தவர் எஸ்.எஸ். சந்திரன். சிரிக்க வைப்பதோடு சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை, நகைச்சுவை ததும்பச் சொல்லி, ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோய் தாக்கி, ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அருகிலேயே இருந்தவன் நான். புன்முறுவல் மாறாத முகத்துடன், அன்பும், பாசமும் மிளிர பழகுகின்ற இனிய இயல்பு உடையவர். ஆயினும், அடக்குமுறைக்கு அஞ்சாது, ஆதிக்கசக்திகளை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடி வந்தவர்.

அ.தி.மு.க. மேடையில் முழங்கி விட்டுத்தான் அவர் உயிர் ஓய்ந்து இருக்கிறது.

ஈடு செய்ய முடியாத அவரது இழப்பால் துயரத்திலே தவிக்கும் குடும்பத்தினருக்கும், அ.தி.மு.க. தோழர்களுக்கும், ம.தி.மு.க. சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

பதிவு செய்தவர்: TruthTobeTold
பதிவு செய்தது: 09 Oct 2010 6:29 pm
Dont bring admk and dmk in here.may god bless peace ur (sss) soul in peace.

பதிவு செய்தவர்: நரசிம்மராவ்
பதிவு செய்தது: 09 Oct 2010 6:21 pm
கலைஞர் யாரையும் அசிங்கமாக பேசவோ அல்லது மனம் புண்படும் படி நடந்து கொள்வதும் இல்லை. எதரி என்றாலும் அவரிடம் சென்று உதவி என்றால் முதல் உதவி அந்த எதிரிக்கு தான். அவர் துரோகி ஒன்றுமில்லை. மனசாட்சி உள்ள மனிதர். நீண்டநாள் வாழ்கிறார். தமிழ்குடிமகன் இப்படிதான் நீண்டநாள் கலைஞரிடம் இருந்து பின் காசுகாக ஜெயாவிடம் சென்று கலைஞரை பழித்தார். இதே நிலை தான் அவருக்கும் வந்தது. கலைஞரிடம் உள்ள மனசாட்சியுள்ள மனது ஜெயலலதா விடம் இல்லை என்பது உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக