திங்கள், 11 அக்டோபர், 2010

Imelda Sukumar:குடாநாட்டில் சிங்களக் குடும்பங்களின் மீள்குடியேற்றம் உடனடி சாத்தியமில்லை-

முப்பது வருடங்களின் பின்னர் மீளக்குடியமரப் போகின்றோம் எனக் கூறிக் கொண்டு அவசர, அவசரமாக யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களக் குடும்பங்களை உடனடியாக இங்கு குடியேற்றும் சாத்தியங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குடியேறுவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் நிலை குறித்து யாழ். அரச அதிபரிடம் கேட்டபோது இதுதொடர்பில் தான் அமைச்சருக்குத் தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பிவைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அரச அதிபர், அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, எந்தவித முன்னறிவித்தலும் இன்றிச் சிங்கள மக்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம்
செய்யுமாறு கோரி யாழ். ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.
இந்த மக்களில் சிலர் இங்கு முன்னர் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்குச் சொந்தக் காணிகளோ, சொந்த வீடுகளோ இங்கிருக்கவில்லை. இந்நிலையில் தம்மை மீள்குடியேற்றுமாறு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இவர்கள் திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
இதனால் யாழ். மாவட்டத்தின் அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றம் கேட்கின்ற மக்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரச சட்ட திட்டங்கள் எதுவு மில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாகச் சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல. அத்துடன் அந்த மக்கள் தொடர்ந்தும் ரயில் நிலையத்தில் தங்கியிருப்பதென்பதும் அவர்களுக்கு ஆரோக்கியமானது இல்லை.
இதேவேளை, சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உடனடிச் சாத்தியப்பாடு எதுவுமில்லை என்பது குறித்து அறிக்கையொன்றை அரச அதிபர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்துக்கும் அனுப்பிவைத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக