வியாழன், 7 அக்டோபர், 2010
Chennai Robbery. இலங்கையைச் சேர்ந்த குணராஜா என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்
சென்னை புறநகர் பகுதிகளில் 54 வழக்குகளில் திருட்டுப் போன 237 பவுண் தங்க நகைகள், 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பொலிசார் மீட்டனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்கம் உள்ளிட்ட 16 பேரை புறநகர் பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக சென்னை புறநகர் பொலிஸ் உயரதிகாரி ஆர். ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது அண்மையில் சேலையூர், மடிப்பாக்கம், தாம்பரம், பட்டாபிராம், மதுரவாயல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, வாகன திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்றன.
இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த பொலிஸ் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு 54 வழக்குகளில் திருட்டுபோன ரூ. 1 கோடியே 5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர். அவற்றுள் 237 பவுண் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 8 கார்கள், ரூ 39 இலட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவையும் அடங்கும்.
இந்த 54 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜயசிங்கம் என்ற இலங்கை ஆசாமியும் அடங்குவார். அவருடைய கூட்டாளி இலங்கையைச் சேர்ந்த குணராஜா என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கந்தசாமி, சீனிவாசன், மாரிமுத்து ஆகிய 3 பேரிடம் இருந்தும் ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. அண்மையில் அம்பத்தூரில் ரூ. 70 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு இரண்டே நாட்களில் ரூ. 40 இலட்சத்தை மீட்டனர். எஞ்சிய தொகையையும் விரைவில் பொலிஸார் மீட்டு விடுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி ஜாங்கிட் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக