சனி, 30 அக்டோபர், 2010

புலம்பெயர்ந்தோர் தமது கருத்தை மாற்றிக்கொள்ளும்வரை தமிழர்கள் காத்திருக்க முடியாது

புலம் பெயர்ந்த தமிழர் செய்ய வேண்டியது என்ன?
என்.சத்தியமூர்த்தி
இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரின் தனித்தியங்கும் குழுவொன்று சட்ட நிபுணர் உருத்திரகுமாரனை தனிநாட்டின் பிரதமராக பெயர்குறிப்பிட்டமை கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். இதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கப் போகின்றது என்பது மட்டுமல்ல பிரச்சினை. இப்படிச் செய்வதன் மூலம் புலம்பெயர்ந்தோர் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குரிய வாய்ப்புகளை எவ்வளவு தூரம் கெடுக்க கூடும் என்பது முக்கியமானது.
யுத்தம் முடிந்த நிலையில் 'சமாந்தர அரசாங்கம்''; என்பதன் பாத்திரம் குறித்து புலம் பெயர்ந்தோரிடையே வெளிப்படையாகவே தெரியும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக் குழுவிற்குள்ளும் வெளிப்படையாக தெரியாத கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவே தெரிகிறது. இது ஒரு நேரம் வெளியே தெரியவரும்.
புலம்பெயர்ந்தோரில் உற்சாகமாக இயங்கியவர்கள் குறிப்பாக உணர்வூட்டல், நிதிசேகரித்தலில் வெளிநாட்டில், ஈடுபட்டவர்கள் யுத்தத்துக்கு பின்னரான யதார்த்தங்களை புரிந்து செயற்பட வேண்டிய நிலைமை உள்ளது. அதிகமான உணர்வூட்டல் எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரனை கடவுளாக்குவதை மையப்படுத்தியிருந்தது. அநேகமான நிதிசேகரிப்பு, எதிர்ப்பு காட்டுவோரின் உறவினர்களுக்கு இலங்கையில் தண்டனை வழங்கும் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று பிரபாகரன் எம்மோடு இல்லை. வலுக்கட்டாயப்படுத்தும் எல்.ரி.ரி.ஈ.யின் ஆளணியும் இலங்கையில் இல்லை. யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ.க்கு கருணாவும், பிள்ளையானும் இலங்கையில் செய்ததை கே.பி. யுத்தம் முடிந்த பின் வெளிநாட்டில் செய்துள்ளார். எல்.ரி.ரி.ஈ. உச்சம் பெற்றிருந்த காலத்தில் சத்தமில்லாதிருந்த வேறு புலம் பெயர்ந்தோர் குழுக்களும் காணப்பட்டன. இவர்கள் நிச்சயமாக வெளிப்படுவர். எல்.ரி.ரி.ஈ.க்கு ஆதரவான புலம் பெயர்ந்தோரும் தொழிற்படத் தொடங்குவர்.
யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் பொருத்தமான சூழ்நிலை உருவாகியிருந்ததால் புலம் பெயர்ந்தோர் எல்.ரி.ரி.ஈ.க்கு ஆதரவை திரட்ட முடிந்தது. 1983 இனக்கலவரத்தின் நினைவுகள் பல நாடுகளில் நிலைத்திருந்தன. எல்.ரி.ரி.ஈ யின் வழிமுறைகளை ஏற்றவர்களோ ஏற்காதவர்களோ முன்வைத்த வாதங்கள் மறுப்பின்றி ஏற்கப்பட்டன.
அரசாங்கங்கள் இலங்கை அரசுடன் அல்லது புலம்பெயர்ந்தோருடன் சம்பந்தப்படும்போது தமது தேசிய நலனையே முதன்மை படுத்துகின்றன.
வேறு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய அவர்களது அக்கறையை, தமது நாட்டு நலன்மீதுள்ள அவர்களது ஈடுபாட்டுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. இலங்கையின் புலம் பெயர்ந்தோரைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஈடுபாடு, அவர்கள் வாழும் நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த மக்களின் பாதுகாப்பையும் நலனையும் முதன்மைப்படுத்துவதாகவே உள்ளது. தமது சொந்த மக்கள் என கூறும்போது அது அந்த நாடுகளின் பிரஜைகளாகவுள்ள புலம் பெயர்ந்தோரையும் கருதுகின்றது. எல்.ரி.ரி.ஈ .முற்றாக அழிந்த நிலையில் கட்டாயப்படுத்தி நிதி சேர்த்தல் தொடர்பான முறைப்பாடுகள் முன்னரைவிட அதிகமாக புலம்பெயர்ந்து வாழ்வோரால் மேற்கொள்ளப்படலாம்.
புலம்பெயர்ந்தோரும் இலங்கையில் வாழும் தமிழ் சமூகமும், அரசியல்வாதிகளும், அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரை நியூயோர்க்கில் சந்தித்து பேசிக்கொண்டதை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அமைச்சரான எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு  விஜயம் செய்து வர்த்தகம் முதலீடு பற்றி பேசப் போவதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர்கள் எரிக் சொல்ஹெய்மை அன்ரன் பாலசிங்கத்துடன் தனிப்பட்ட நட்பை கொண்டிருந்த சமாதானம் பேசும் தூதுவராகத்தான் அறிந்திருந்தனர்.
சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை அரசியல் தலைவர்களையும் மக்களால் தெரியப்பட்டவர்களாக ஏற்று நடக்கும் காலம் தூரத்தில் இல்லை. சரத் பொன்சேகாவின் சகாப்தமான தற்போதைய கட்டத்தில் வெளிநாட்டு ஆதரவை நம்பியிருந்தவர்கள் அதற்கான விலையை செலுத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரிலிருந்து இரண்டாம், மூன்றாம் தலைமுறையிலும் புத்திஜீவிகளும், உணர்வுமிக்க அனுதாபிகளும் உருவாகியுள்ளனர். யுத்தத்தில் இறுதிமாதத்தின்போது பொறுப்பு அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பொறுப்பை ஏற்றவர்கள் தொடர்ந்து அதை வைத்திருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புலம்பெயர்ந்தோரில் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து செயற்படுபவர்களும், புதிதாக உருவாகி வருவோரும் உள்ளனர். இவர்களிடையே சமூக, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாலான முரண்பாடுகளும் உண்டு. எல்.ரி.ரி.ஈ. காலத்தில் அநுபவித்த அந்தஸ்து சௌகரியங்கள் மீதான பங்கு தொடர்பில் சச்சரவுகள் உண்டு. இது ஒட்டுமொத்தமாக தமிழ் சமூகத்துக்கு கெட்ட பெயரையே கொண்டுவரும்.
புலம்பெயர்ந்தோருக்கோ, தமிழ் சமூகத்துக்கோ இவை எதுவும் தேவையில்லை. இவர்களுக்கு தேவையானவர்கள் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் தலைவர்களே அல்லாமல் தேநீர் அருந்திக் கொண்டோ பியர் அருந்திக்கொண்டோ பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்லர். ஆனால், இப்போது அப்படியான எவரும் தென்படவில்லை. பாலசிங்கத்தை, புலம்பெயர்ந்தவர் தலைவரென கொண்டால், அவர் சிறந்த பேச்சுவார்த்தை நடத்துபவராகவும், நல்ல, வெளியில் புலப்படாத ஆலோசகராகவும் மட்டும்தான் இருந்தார் எனலாம்.
பாலசிங்கத்திடம், சுயாதீனமான தலைமைத்துவ பண்புகள் இருந்திருந்தாலும், அவர் அதை வெளிப்படுத்தவில்லை. பிரபாகரன் தனக்கு சமமாக யாரையும் வைத்திருக்க விரும்பவில்லை. அவருக்கு தேவைப்பட்டவர்கள் அவர் வழிச் செல்பவர்களே. அப்படியானவர்கள் அவருக்கு கிடைத்தனர். யாரை ஆலோசகராக வைத்திருப்பது என்பதையும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பிரபாகரனே தீர்மானித்தார்.
வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்களை பொறுத்தவரையிலும் சரி , இதே நிலைமைதான் காணப்பட்டது. கருணாவும் பிள்ளையானும் எல்.ரி.ரி.ஈ.யை விட்டு விலகினர். மாத்தையா தனது உயிரை விலையாக கொடுத்தார். இவர்கள் யாவரையும் இலட்சியத்துக்கு துரோகமிழைத்தவர்கள் என முத்திரை குத்தலாம். ஆனால் இதன் பின்னால், ஜனநாயகம், இராஜதந்திரம், அரசியல், அரசியல் தீர்வு என பல விடயங்கள் உண்டு.
இலங்கைத் தமிழ் சமூகம், தமக்கு வழிகாட்ட புலம்பெயர்ந்தோரிடமிருந்து புதிய தலைமைகள் உருவாகிவரும் என காத்திருக்க முடியாது. எல்.ரி.ரி.ஈ,க்கு புறம்பாக, யுத்த சகாப்தத்துக்கு முன்பிருந்தே இன்று வரை தலைவர்கள் இருந்துள்ளனர். இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை புலம் பெயர்ந்தோருக்கு இருக்குமாயின் இலங்கை வாழ் தமிழரிடமே பொறுப்பை வழங்கவேண்டும்.
இவ்வருடன் ஜனவரியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள், கிழக்கு மாகாண சபை தேர்தல், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பன மிதவாத அரசியலில் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்பும் தலைமையை உருவாக்கியுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான சமநீதி, சமத்துவம் தொடர்பில் புலம்பெயர்ந்தோர் உணர்வு பூர்வமாக ஈடுபாடுடையவர்களாக இருப்பினும், அவர்கள் தமிழ் அரசியலிலிருந்து விலகுவது நல்லதென்பதற்கு உரிய காரணம் உண்டு. புலம் பெயர்ந்தோரிடையேயாயினும் சரி, இலங்கையினும் சரி, தமிழ் அரசியல் தலைமை முக்கிய திருப்பு முனையில் உள்ளது. குறைந்தப் பட்சம், மிதவாத அரசியல் தலைமை புலம்பெயர்ந்தோரை பிரதிநிதித்துவப்படுத்தும். ஆளுமைமிக்கவர்களை இனங்கானமுடியும்.
ஆனால், எதிர்காலத்தில் இவ்வாறு இல்லாது போகலாம். புலம்பெயர்ந்தோரின் முதலாம் தலைமுறையே இறுதிக்கட்ட யுத்தத்தின் முன் இவ்வாறு காணப்பட்டது. அவர்களுக்கும் தத்தம் சொந்த பிரச்சினைகள் முக்கியமாக இருந்துள்ளன. புலம் பெயர்ந்தோருக்கும் இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகளுக்குமிடையில் உள்ள தொடர்புகள், மெதுவாக, முற்றாக அற்றுப் போகலாம்.
இலங்கைத் தமிழர்களுக்கு, புலம்பெயர்ந்தோரின் பொருளாதார உதவி தேவை. இலங்கை தமிழ் சமூகத்துக்கு அரசியல் இணக்கப்பாட்டுக்கு முன் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பவை முக்கியமாக தெரிகிறது. இதுவே நடைமுறைச் சாத்தியமானதும் அரசியல் ரீதியாக பொருத்தமாகவும் தெரிகிறது.
ஆனால் புலம்பெயர்ந்தோர் எதிர்திசையில் யோசிக்கின்றனர். இங்கு வாழும் தமிழர்களின் சூழ்நிலை, தேவைகள் எனப் பார்க்கும்போது புலம்பெயர்ந்தோர் தவறாக உள்ளனர். இப்படித்தான் இவர்களால் பார்க்கமுடியும். இதை பிழை சொல்லமுடியாது. அவர்கள் மாற வேண்டும். இவர்கள் இங்குள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்புக்கு தமது உதவியை வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுகாதாரம், என்பவை தொடர்பில் அநாதரவாகியுள்ளவர்களுக்கு தமது சொந்த நிதியை வழங்க புலம்பெயர்ந்தோர் முன்வரவேண்டும்.
புலம்பெயர்ந்தோர் தமது கருத்தை மாற்றிக்கொள்ளும்வரை தமிழர்கள் காத்திருக்க முடியாது. புலம்பெயர்ந்தோர், தாம் வகுத்த தவறான முன்னுரிமைகளால் இங்கு வாழும், தமிழர்களின் அரசியல் கருத்தை அலட்சியம் செய்ததனால், அவர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெற உதவாது விட்டமையால், இங்கு வாழும் தமிழர்கள் துன்பப்பட்ட நேரின் புலம்பெயர்ந்தோர் தம்மைத்தான் குறை சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்தோர் தமது முன்னுரிமை பட்டியலை ஆராய்ந்து பூரணமாக மாற்றியமைக்க வேண்டும்.
நன்றி: தமிழ் மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக