ஞாயிறு, 24 அக்டோபர், 2010

தமிழ் மக்கள் பழைய பாணி அரசியலிலிருந்து விலகிப் புதிதாகச் சிந்திக்க வேண்டிய நிலை

கற்றுக்கொண்ட பாடங்கள்-புதிதாகச் சிந்திப்போம்!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை நடைபெறுகின்றது. ஆணைக்குழு பல நகரங்களில் அதன் விசாரணையை நடத்தியது. இலங்கைக்கு வெளியே ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நியமித்த ஆணைக்குழுவும் அதன் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாணைக்குழுக்கள் ஆராய்கின்ற விடயங்கள் தொடர்பாகப் பல தன்னார்வக் குழுக்களும் அமைப்புகளும் கூடக் கருத்துகள் வெளியிடுகின்றன.

இவையெல்லாம் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை ஆராய்வனவாகவே உள்ளன. இந்த ஆய்வு தேவையில்லை எனக் கூறவரவில்லை. இவ்வாறெல்லாம் ஏன் நடந்தது என ஆராய்வது முக்கியமானது எனக் கருதுகின்றோம். இந்த ஆய்வுதான் தமிழ் மக்களுக்குச் சரியான விமோசனப் பாதையைக் காட்டக் கூடியது.

புலிகளுடனான இறுதிச் சமரின்போது தமிழ் மக்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களே கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். உடன் பிறப்புகளை இழந்தார்கள். வீடு வாசல்களை இழந்தார்கள். சீவனோபாயத் தொழிலை இழந்தார்கள். இறுதியில், காலங்காலமாக வாழ்ந்த பிரதேசத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேற நேர்ந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்கள் முப்பது வருட காலமாக ஒன்றன்பின் ஒன்றாக அனுபவித்த துன்பங்களின் உச்சம் என்று இதைக் கூறலாம். இத் துன்பங்களின் நதிமூலம் என்ன என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தமிழ் மக்களின் விமோசனம் பற்றிப் பேசுவது பயனற்றது.

தமிழ் மக்களின் துன்பங்களுக்கான அடிப்படைக் காரணம் இனப் பிரச்சினை என்பதை யாரும் மறுக்க முடியாது. இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி சரியான தடத்தில் முன்னெடுக்கப்படாததாலேயே தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. அரை நூற்றாண்டு கால மாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை தாங்கியவர்கள் விட்ட தவறுகளின் ஒட்டுமொத்தமான விளைவு தான் அண்மையில் மக்களு க்கு ஏற்பட்ட அவலம். இத் தவறுகளைப் பட்டியல் போடுவதை விட்டு, இரண்டு பிரதான தவறுகளை இங்கு குறிப்பிடுவோம்.

பண்டா - செல்வா ஒப்பந்தம் இனப் பிரச்சினைக்குக் காத்திரமான ஒரு தீர் வாக அமைந்தது. இரு தரப்பினரதும் ஈடாட்ட நிலைப்பாடு காரணமாக அப்போது அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர முடியாமற்போனமை துரதிஷ்டமானது. முதலாவது குடியரசு அரசியலமைப்புக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் சரத் துகளை அதில் உள்ளடக்குவதாக மு.திருச்செல்வத்துக்கூடாக ஐக்கிய முன்னணி அரசாங்கம் எஸ். ஜே.வி. செல்வநாயகத்துக்கு அறிவித்தது. செல்வா அதை நிராகரித்துவிட்டார். அன்று அதற்குச் சம்மதித்திருந் தால் நியாயமான அதிகாரப் பகிர்வுக்கான அத்திவாரம் அரசியலமைப் பில் இடம்பெற்றிருக்கும்.

பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை நிராகரித்தமை மற்றைய தவறு. இத்தீர்வுத் திட்டம் சமஷ்டித் தன்மை கொண்ட தீர்வு. பிராந்திய சபைகளின் அதிகாரங்கள் மற்றும் எல் லைகள் தொடர்பாக வலுவான பாதுகாப்பு ஏற்பாடு இதில் இருந்தது.

அரசியல் தீர்வு அரசியலமைப்பில் உத்தரவாதப் படுத்தப்படக்கூடிய இர ண்டு சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்து வன்முறை அர சியலுக்கு வழிவிட்டதாலேயே தமிழ் மக்கள் அண்மைக் கால அவலங் களைச் சந்திக்க நேர்ந்ததுடன் அரசியல் தீர்வு முயற்சியும் வெகுவாகப் பின்னடைவு கண்டது.

தமிழ் மக்கள் பழைய பாணி அரசியலிலிருந்து விலகிப் புதிதாகச் சிந்திக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. இனப் பிரச்சினைக் கான தீர்வு முயற்சியை மக்கள் மயமாக்க வேண்டும். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அனைத்து மக்களினதும் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து, இன மத பேதமின்றி நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்க ளுடன் இணைந்து அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பது தான் ஆக்கபூர்வமான அணுகுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக