வியாழன், 7 அக்டோபர், 2010

கண்ணதாசன் மகள் விசாலி.அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதியதை மெய்ப்பிக்கிறார் கண்ணதாசன். ஆமாங்க, அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள் என்கிறார் அவரின் மகள் விசாலி.

விசாலியின் ஐந்து வயதுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே கண்ணதாசனுக்கு காலனின் அழைப்பு வந்துவிட்டது.  அந்த சோகம் வாட்டியிருக்கிறது விசாலியை.  அதனால்தான் அப்பாவின் பாடல்கள்தான் எனக்கு அம்மாவானது என்கிறார் விசாலி.

அம்மாதான் எனக்கு தந்தையுமானார். இப்போ கணவர்தான் தாயும், தந்தையுமானார் என்று உணர்வுப்பூர்வமாக தன்னை விவரித்தார் விசாலி

‘’அவரு மாதிரியே உயரம்.. அவரு மாதிரியே நெறம்.. அவரு மாதிரியே கண்ணு..அவருமாதிரித்தான் பார்க்குற..அவரு மாதிரித்தான் நடக்குற.. அவரு மாதிரித்தான் சிரிக்குற..ஒன்ன பார்க்குறது அவரப்பார்க்குற மாதிரியே இருக்கு சாலான்னு சொல்லுவாங்க அம்மா. நான் மட்டுமில்ல அப்பாவும் உன்ன சாலான்னுதான் கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க அம்மா.

அம்மா என் கூட விழாக்களுக்கு வரும்போது, ‘அவரோடயும் விழாக்களுக்கு வருவேன். இப்ப ஒன்கூடயும் வர்றேன். ஒரு வித்யாசமும் தெரியல. அவருக்குஇருந்த கம்பீரம் ஒனக்கும் இருக்கு. உன்ன விசாலின்னு சொல்லக்கூடாது. புடவகட்டின கண்ணதாசன்னுதான் சொல்லனும்’னு என்னை அப்பாகவே பார்ப்பாங்க, எனக்கு அப்பாவாக இருந்த என் அம்மா.’’ என்று சொல்லும் விசாலி, அப்பாவுக்கு பதினைந்தாவது குழந்தை. அம்மாவுக்கோ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.                                                              
                                ‘அப்பாவோட சொத்துன்னு எனக்கு எதுவும் கொடுக்கல. ஆனா நிலம், பணம்தான் சொத்துன்னும் நான் நினைக்கல. ‘ஒருவன் பூமியில் எவ்வளவு இடம் வைத்திருக்கிறான் என்பது பொருட்டே அல்ல. உலக இன்பங்களை அனுபவித்து லயிக்க உள்ளத்தில் எவ்வளவு பெரிய இடம் வைத்துள்ளான் என்பதே முக்கியம்.( தான்எழுதி வரும் ‘சிந்தித்தேன்.. சிந்தியதேன்’ என்ற தொகுப்பிலிருந்துசொன்னார்.)

ஆனா, யாருக்கும் இல்லாத பெரிய சொத்து ஒன்னு எனக்காக விட்டுட்டுபோயிருக்கிறார் அப்பா. அப்பா கடைசியா எழுதுன பாட்டு ‘கண்ணே கலைமானே’தான்அது. மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய அந்த பாட்டுதான் எனக்கான பெருஞ்சொத்து.

அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்புன போது(1981) டைரக்டர் பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்பா காரில் உட்கார்ந்துகிட்டே அந்தபாட்டை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்த பாட்டுக்கான சூழலை அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர். நாயகி ஸ்ரீதேவி குழந்தைத்தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சிலகாட்சிகளை சொல்லியிருக்கிறார். அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர். சாலா இப்படித்தான் என் காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும் என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப்பாட்டைஎழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்தப்பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப்பற்றி அம்மாகிட்ட நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்கன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச்சொல்லிவிட்டு கிளம்பி போகும் போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகிசூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.

அந்த பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானால் அர்த்தம் எடுத்துக்கொள்ளட்டும்.. ஆனால் அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு. நானே அந்த பாட்டை சுழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக்கொள்வேன்.

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக்கொள் என்று எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்..

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு துக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தாலாட்டு. சின்ன வயசில் நான் தூக்கம் வராமல் அழுதுகொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச்சொல்லுறேன்..’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.

அம்மா பாடும் தாலாட்டை விட அந்த பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும்’’ என்று சொல்லிவிட்டு இந்தப்பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்றுசொன்னபோது விசாலியின் வார்த்தைகளில் கணத்த சுமை இருந்தது.

‘’அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் - ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல.

அவனும் நானும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணே கலை மானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை.

இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு.

கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்’’என்றசுமைமிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடிவந்து காதில் கிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார். 
சில காலங்களாகத்தான் நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். நட்பு வட்டத்தைசுறுக்கிக்கிட்டேன். என்னை வாயாடின்னு சொல்லுவாங்க. இப்போ அனாவசிய பேச்சுக்கு இடங்கொடுக்கக் கூடாதுன்னு மொபைல் போன் கூட தவிர்த்துவிட்டேன் என்று தான் இப்போது வெளியுலகை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.

இலக்கியம், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் என்று பரபரப்பாய் இருந்தவர் திடீரென்று இருக்குற இடமே தெரியாமல் இருப்பதற்கான காரணத்தைச்சொன்னார்.
‘கம்மங்காடு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பொண்ணா இப்படி என்று ஆச்சர்யப்பட வைத்தது.
விசாலியின் வீட்டு முகப்பில் சிவாலயம் என்று எழுதப்பட்டிருந்ததற்கானஅர்த்தம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாக சிலருடைய வீட்டு முகப்பில்எழுதப்பட்டிருப்பது போல் இங்கேயும் எழுதப்பட்டிருக்கு என்று நினைத்ததுதவறு என்பதை உணர முடிந்தது.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..பார்வையிலே குமரியம்மா..பழக்கத்திலே குழந்தையம்மா! என்று அப்பா எழுதியபாடல் எனக்காவே எழுதப்பட்டிருக்கு என்று சொல்வாங்க அம்மா. இப்போ அவரும்அப்படித்தான் சொல்றாரு.

மேடைகளில் நான் பேசுவதை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கிறீங்க என்று அவரிம் எல்லோரும் கேட்கிறார்களாம். அவருக்குத்தானே தெரியும் நான் வீட்டில் குழந்தைன்னு’’பெரிதாக சிரித்தார். தந்தையைப் போலவே தன்னையும் அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றார். அழைப்புகள் இருந்தும் தான் இன்னும் வராமல் இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

‘’அப்பா 1949ல் திமுகவில் ஆரம்பகால உறுப்பினர். 1957ல் திமுக சார்பில் திருக்கோஷ்டியூர் இரண்டாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்துவிட்டார். காங்கிரஸிலும் இருந்தார்............

அப்பாவிடம் சகிப்பு தன்மையும் கொஞ்சம் பணிந்து போகும் குணமும் இருந்தது. அதனால் அவர் அரசியலில் இருந்தார். என்னிடம் பணிந்து போகும் குணம் இல்லை.நான் எப்படி அரசியலுக்கு வரமுடியும்.

மேலும், அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோரையும் ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளனும், கூழைக்கும்பிடு போடனும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.
தனது அறியாத வயதில் தந்தை இற்ந்துவிட்டார் என்றும் அவர் இன்றுஇருந்திருந்தால் இரண்டு கேள்விகள் கேட்டிருப்பேன் என்றும் பேச்சின் திசையைமாற்றினார்.
‘’ஆண் வேசி வீட்டுக்கு போய்விட்டு வந்தாலும் நல்ல மனைவி இன்முகம் காட்டுவாள் என்று அப்பா எழுதியிருக்காங்க. இது ஆணாதிக்கம்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படித்தான் இருக்கனும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  சமமான பார்வை வேண்டும்.

அப்புறம் ஒன்னு, ‘என்னதான் நெஞ்சக்காயங்களுக்கு மருந்து போட்டு விடுகிறது என்றாலும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும் ஒரு வகை வக்கிரம்தானே..(அப்பா மன்னிப்பீராக..) என்று தான் எழுதிவரும் சிந்தித்தேன் சிந்தியதேனிலிருந்து சொன்னார்.

5000 திரைப்பாடல்கள், காவியங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள், புதினம்,சுயதரிதை என நூற்றுக்கும் வேற்பட்ட நூல்களை படைத்திருக்கிருக்கும் கண்ணதாசனுக்கு ‘கண்ணதாசன் பல்கலைக்கழகம், கண்ணதாசன் அறக்கட்டளை என்றெல்லாம் கொண்டுவர வேண்டும்’ என்று சொன்னதோடு இல்லாமல் அதற்கான முயற்சியில் தன் கணவர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை பல பரினாமங்களில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் ஒரே கோணத்திலேயே பார்க்கிறார்கள் என்று குறைபட்டுக்கொண்டார்.


‘’அப்பா ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர் ஒளித்து வைக்கவில்லை. மது,மாது என்கிற கோணத்திலேயே அவரை பெரும்பாலும் பார்க்கிறார்கள். கண்ணதாசன்காரைக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி’ன்னு பாடுறாங்க.

அவர் பிறந்த சிறுகூடல்பட்டியில் சின்னவங்க, பெரியவங்க எத்தனையோ பேர் வந்துமண்ணை தொட்டு கும்பிடுவதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.’’என்றார்.

தன் தந்தை இறந்தபோது நாலறை வயதில் தான் செய்த அறியாமையை எண்ணி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

‘’அமெரிக்காவில் சிகாகோ ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க அப்பாவை.(24.71981) இரண்டு மாசத்துக்கு பிறகு(17.10.1981, சனிக்கிழமை, இந்தியநேரப்படி 10.45க்கு) இறந்திட்டார்.

விமானத்தில் அப்பாவின் சடலத்துடன் அம்மாவோடு நானும் வந்திருக்கிறேன்.அப்பாவின் சவப்பெட்டி மேல் ஏறி விளையாடியதும் அம்மா அழுதபடியேஅதட்டியிருக்கிறாங்க.

 சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் (20.10.1981)பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்திருக்கிறார்கள்.   போட்டோ ப்ளாஸ்களுக்கு சிரித்திருக்கிறேன்.

அந்த நாலரை வயதில் நான் ரொம்ப புஸ்டியாக இருந்திருக்கிறேன். அதனால்தான்,கண்ணதாசன் சடலத்துடன் அவரது பத்து வயது மகள் வந்தார் என்று பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்’’ என்றவர், தான் அர்த்தமற்ற 15வதுகுழந்தையாக அப்பாவுக்கு பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
நீ எழுதல சாலா.. அப்பாதான் உனக்குள் இருந்து எழுதுறாருன்னு அம்மா சொன்னதை இப்போதுதான் உணர்கிறேன். எழுத ஆரம்பிக்கும் வரை என் மனநிலை வேறு. எழுதனும் என்று உட்கார்ந்துவிட்டால் என் மனநிலை எனக்கே ஆச்சர்யாமக இருக்கு.எனக்குள் அசரீரியாய் இருந்து என்னை எழுதவைப்பதும் அப்பாதான்.

அப்பா ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன நிறைய விசயங்கள் நடந்திருக்கு. 18வயசில சாலா நல்ல நிலையில இருப்பான்னு சொல்லியிருக்காங்க அப்பா. அது நடந்துச்சு.

எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான நெல்லைக்கண்ணன் ஐயாவும், தமிழருவி மணியன் ஐயாவும் என் மேடைப்பேச்சைக் கேட்டு ‘அப்பா பேசுனது மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேர் என்னை ‘நீ கண்ணதாசனின் மிச்சம்’னு சொல்லியிருக்காங்க. அதை காப்பாற்றனும்னு உணர்கிறேன்.

அப்பா அமெரிக்கா செல்லும்போது அம்மாவிடம் நான் திரும்பி வருவேன் என்பது நிச்சயம் இல்லைன்னு சொன்னவங்க சாலாவ பத்திரமா பார்த்துக்கோன்னு சொன்னதோடு மட்டுமில்லாம, ‘சாலாவுக்கு நான் வானவீதியில் இருந்து வாழ்த்துப்பாபாடிகிட்டே இருப்பேன்’ன்னு சொல்லியிருக்காங்க.

எழுதிமுடித்துவிட்ட போதெல்லாம், நல்ல விசயங்கள் பேசிமுடித்துவிட்டபோதெல்லாம், நல்ல விசயங்கள் செய்து முடித்துவிட்ட போதெல்லாம், மனசுக்கு சந்தோசமான நேரத்துல எல்லாம் நான் வான வீதியை பார்க்கத் தவறுவதில்லை’’என்று நெகிழ்ந்தவர் நெஞ்சோடு பூனைக்குட்டியை அணைத்துகொண்டு அண்ணாந்து பார்த்து கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டார்.

எழுத்தாக்கம் : கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக