சனி, 30 அக்டோபர், 2010

தாய்லாந்திலிருந்து கனடா நோக்கிப் புறப்படவிருந்த அகதிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது

தாய்லாந்திலிருந்து புறப்படவிருந்த கப்பலொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து செய்தியூடகங்களை மேற்கொள்காட்டி ரொறன்ரோ சண் பத்திரிகையின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.இச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது, 114 இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் அனைவரும் கப்பலொன்றில் ஏறுவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போதே இக் கைதுச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடிய அதிகாரிகள் தாம் இச் சம்பவம் பற்றி அறிந்துள்ளோம் என்றும் ஆனால் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களிற்கு முன்னரும் தாய்லாந்தில் 155 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் அகதிகளிற்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் காலத்தை அண்மித்ததாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடிய அரசு இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்த போதும் எதிர்க்கட்சிகள் இச் சட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும் எனத் தெரியவருகிறது.  இதற்கான காரணம் யாதெனில் இச் சட்டம் குழுவாக வரும் அகதிகளை ஏனைய அகதிகளிடம் இருந்து வேறுபடுத்தவே என்பதேயாகும். கனடாவில் இயங்கிவரும் கனடியத் தமிழர் காங்கிரஸ் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக