எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு நாம் நடவடிக்கை எடுப்போம். - யாழ். நூலகத்தில் இடம்பெற்ற பகிரங்க கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
கடந்த 23ம் திகதி யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சில சம்பவங்கள் தொடர்பாக உண்மை நிலைமையினைக் கண்டறியவும் எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் முகமாகவும் பொதுக்கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ். பொது நூலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாநகர ஆணையாளர் மு.சரவணபவ யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். பொதுநூலக பிரதம நூலகர் உட்பட ஏனைய நூலகர்கள் பணியாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகள் புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்மாதம் 23ம் திகதி மாலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் தொடர்பாக இங்கு வருகை தந்தோர் தமது அபிப்பிராயங்களையும் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் மேற்கொள்ளக்கூடியதான நடவடிக்கைகள் தொடர்பான தமது அபிப்பிராயங்களையும் தெரிவிக்கும்படி வேண்டிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய சம்பவங்கள் தொடர்பாக யாழ். பொதுநூலகத்தின் பிரதம நூலகர் எஸ்.தனபாலசிங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக வாசிக்கப்பட்டது. இதன்பிரகாரம் மருத்துவ சங்கத்தின் அகில இலங்கை மாநாடு பொதுநூலகத்தில் இடம்பெற்றதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் அச்சமயம் சுமார் 37 பஸ்களில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் நூலக வாயிலில் திரண்டிருந்தமையே நெரிசலுக்கும் குழப்பத்திற்கும் முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதம நூலகரின் அறிக்கையினைத் தொடர்ந்து ஏனையோர் தமது அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏராளமானோர் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இதில் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான சங்கையா விந்தன் கனகரட்ணம் அஸ்கர் கிறேஷியன் பரஞ்சோதி மனுவல் மங்களநேசன் மேரி அம்மா அருளப்பு கொர்னேலியஸ் றெமீடியஸ் முஸ்தாபா விஜயகாந்த் நிஷாந்தன் ஆகியோரும் முன்னாள் யாழ். பல்கலைக்கழக பிரதம நூலகர் மரியநாயகம் சட்டத்தரணி ரங்கன் உள்ளிட்ட பொதுமக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி திசேரா தெரிவிக்கையில் அன்றையதினம் யாழ். நூலக வாயிலில் அசம்பாவிதம் இடம்பெறுவதாக யாழ். மாநகர முதல்வரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து உடனடியாகவே தான் அங்கு சென்றதாகவும் அச்சமயம் பெருந்தொகையான சுற்றுலாப்பயணிகள் வாயிலில் திரண்டிருந்த அதேவேளை பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். உரியதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாயில் திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நூலகத்தை பார்வையிட்டதாகவும் இறுதி பயணி வெளியேறிச் செல்லும்வரை தான் அங்கேயே தங்கிநின்று அதனை உறுதிப்படுத்தி முதல்வருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்த பின்னரே அங்கிருந்து அகன்றதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். ஆயினும் பத்திரிகைகளில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்தமை குறித்து தனது மனவருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்ந்து தமது கருத்தினை வழங்கிய 512 பிரிவின் யாழ் நகர கட்டளை அதிகாரி கேணல் பலவில்ல அன்றைய சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் பொலிஸார் கேட்டுக்கொள்ளும் பட்சத்திலேயே பொதுமக்கள் அசம்பாவிதம் தொடர்பாக இராணுவத்தினர் அழைக்கப்படுவார்கள் எனத்தெரிவித்ததுடன் குறிப்பிட்ட சம்பவத்தில் அவ்வாறானதொரு தேவை ஏற்பட்டிருக்கவில்லை என்றும் வழமையாக அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே பிரசன்னமாகி இருந்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் தற்போதைய அமைதிச்சூழலில் யாழ். குடாநாட்டில் பல்வேறு சேவைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தென்னிலங்கை சுற்றுலா மீளக்குடியேறும் மக்களுக்கு வீடமைத்துக் கொடுத்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இவை தொடர்பான செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என்பதுடன் வதந்திச் செய்திகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துக்கொண்டார்.
இப்பொதுக் கலந்துரையாடலின் நிறைவாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய ஏற்பாடுகள் அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் அன்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்திற்கு சகல தரப்பினரிடமும் ஓர் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பாக தான் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார். நடந்தவை நடந்வையதாக இருக்கட்டும் எனத் தெரிவித்த அமைச்சரவர்கள் இத்துடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனத்தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்படியான சூழல் ஏற்படாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியதுடன் யாழ் பொது நூலகத்திற்குள் வரும் பார்வையாளர்களை ஒரு தடவைக்கென வரையறை செய்து ஒரு தொகையினர் வீதம் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை பொதுநூலக அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்டு பொலிஸாரினதும் ஒத்துழைப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தும் படியும் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக