வெள்ளி, 22 அக்டோபர், 2010

காங்.கை வலுப்படுத்த நடிகர் கூட்டம்-ராகுல் திட்டம்-ராதாரவி முதலில் இணைகிறார்

டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்க கவர்ச்சிதான் பிரதானமாக தேவைப்படுவதாக ராகுல் காந்தி நினைத்து விட்டாரோ என்னவோ, நடிகர்களை பெருமளவில் கட்சியில் கொண்டு வந்து குவிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தற்போது திமுகவுக்கு நெருக்கமானவராக இருப்பவருமான நடிகர் ராதாரவியை அழைத்து ஆலோசனை செய்யவுள்ளார். இதையடுத்து ராதாரவி காங்கிரஸில் இணைவார் என்று தெரிகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க என்னென்னவோ யோசித்துப் பார்க்கிறார் ராகுல் காந்தி. புதுப் புதுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். ஆனாலும் கோஷ்டிப் பூசலை மட்டும் அவரால் இதுவரை ஒழிக்க முடியவில்லை.

இளைஞர் காங்கிரஸை உருப்படியாக்கலாம் என்று எண்ணி அதற்கு ஒரு தேர்தலை நடத்திப் பார்த்தார். ஆனால் அங்கும் கோஷ்டிப் பூசல் நடந்து கலவரமாகிக் கிடக்கிறது.

இந்த நிலையில் அடுத்த ரூட்டாக, சினிமாக்காரர்களை கட்சிக்குள் இழுத்துப் போட்டு கவர்ச்சிகரமானதாக காங்கிரஸை மாற்றி விட அவர் தீர்மானித்து விட்டார்.

இதுதொடர்பாக நடிகர் ராதாரவியை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாராம். நாளை இந்த ஆலோசனை நடக்கிறது.

நாளை காலை 8 மணிக்கு, டெல்லி ஜன் பத் சாலையில் உள்ள அவருடைய வீட்டில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் ராதாரவியை ராகுல் காந்தி சந்தித்துப்பேசுகிறார். இந்த சந்திப்பின்போது ராதாரவி முதல் ஆளாக காங்கிரஸில் இணைவார் என்று தெரிகிறது.

அவர் இணைந்த பின்னர் தன்னைப் போல் மேலும் பலரையும் காங்கிரஸுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதாரவி ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்தார். பிறகு அங்கிருந்து விலகி விட்டார். தற்போது திமுகவுக்கு சாதகமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது காங்கிரஸ் கட்சிக்குப் போகவுள்ளார்.

ஏற்கனவே இப்படித்தான் விஜய்யை அழைத்து டிஸ்கஸ் செய்தார் ராகுல் காந்தி. அவரும் சேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில எதிர்பாராத பின்விளைவுகள் தெரியத் தொடங்கியதால் ஜகா வாங்கி விட்டார் விஜய்.

இதையடுத்து அஜீத்தை காங்கிரஸ் அணுகியதாகவும் கூறப்பட்டது. அவரும் ஆர்வமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ராதாரவி வரை வந்து விட்டது காங்கிரஸ். அடுத்து டிவி நடிகர்களையும் காங்கிரஸ் அணுகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பதிவு செய்தவர்: வடிவேல்
பதிவு செய்தது: 22 Oct 2010 6:40 am
காங்கிரஸ் கோவிந்தா ஆகமுன்னாடி எங்களைமாதிரி காமெடி ஆட்களை பாக்கலாமே.

பதிவு செய்தவர்: முனி
பதிவு செய்தது: 22 Oct 2010 5:11 am
அவ்வளவு கேவலமா காங்கிரசு ,ராதா ரவி '''''''''''''''''''''''''''''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக