திங்கள், 1 நவம்பர், 2010

சர்வதேசம் என்ற ஒரு மாயை தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது

சர்வதேச 'வாய்ப்பாடு'
இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சர்வதேசம் என்ற ஒரு மாயை தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காலங்காலமாகத் தலைவர்கள் சர்வதேச வாய்ப்பாடு சொல்லிக்கொண்டிருப்பதால் மக்களும் அதில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். ஒருபோதும் சாத்தியமற்ற இரண்டு விடயங்களில் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். ஒன்று தனிநாடு அமைக்க முடியும் என்ற நம்பிக்கை. மற்றது சர்வதேசம் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை. தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இவ்விரு நம்பிக்கைகளுமே பிரதான காரணம்.
அடுத்தவரின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற பரோபகார சிந்தனையுள்ள எந்த நாடும் பூமிப்பரப்பில் இல்லை. சொந்த நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையிலேயே எந்த நாடும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்த் தலைவர்கள் ஏறக்குறைய எல்லா முக்கிய நாடுகளையும் நேரடியாகவும் அணுகினார்கள. அந்நாடுகளின் தூதரகங்கள் மூலமாகவும் அணுகினார்கள். இனப்பிரச்சினை தொடர்பாக இத்தலைவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் பார்க்க வெளிநாடுகளுடனும் வெளிநாட்டுத் தூதுவர்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தையே கூடுதலானது. கண்ட பலன் எதுவுமே இல்லை.
மக்களால் மோசமாக நிராகரிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் இன்னும் அரசியலில் இருக்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்துவதற்கோ என்னவோ இப்போது சர்வதேச வாய்ப்பாடு சொல்கின்றார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், எஸ். கஜேந்திரன் ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மகாநாடொன்றைக் கூட்டித் தமிழர் பிரச்சினைக்குச் சர்வதேசம் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
இந்த மூவரையும் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகவே பார்த்தார்கள். அதனால் இவர்களை நிராகரித்தார்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில் பெருந்தொகை வாக்குகள் பெற்று வெற்றியீட்டிய இவர்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கின்றார்கள். முந்திய தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக் கூடுதலான வாக்குகள் பெற்ற எஸ். கஜேந்திரன் கடந்த தேர்தலில் ஆகக்குறைவான வாக்குகளே பெற்றார். எவ்வளவு மாறுதல்!
புலிகளின் காலத்தில் மக்கள் துப்பாக்கி முனை அச்சுறுத்தலின் கீழேயே வாழ்ந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
இனப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் தீர்வு பெற்றுத்தரப்போகின்றன என்று நம்புவது அதீத கற்பனை. அறுபது வருடகால அனுபவம் இது. இலங்கையின் பிரச்சினைக்கு இலங்கை மக்கள் மூலமாகவே தீர்வு சாத்தியம். அதுவே நின்று நிலைக்கக்கூடிய தீர்வு.
(வாகுலன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக