திங்கள், 11 அக்டோபர், 2010

இராணுவ கட்டமைபை மறுசீரமைக்கும் பணியில் குதித்துள்ளது இலங்கையரசு – சுபத்தரா

இலங்கையைப் பொறுத்தவரையில்  இராணுவ  ரீதியாக ஒக்டோபர்  10ம் திகதி  இரண்டு விடயங்களில்  முக்கியமான நாள். முதலாவது இலங்கை இராணுவம் தோற்றுவிக்கப்பட்ட  நிகழ்வு.  இரண்டாவது  இந்தியப் படைகள்  விடுதலைப்  புலிகளின் மீது போர்  தொடுத்த நிகழ்வு.
வடக்கு,  கிழக்கில் இந்திய  அமைதிப்படை  புலிகள் மீது தொடுத்த போர்  மூன்று வருடங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.    சுமார் 1200 படையினரை  இழந்து, சுமார் 6000 படையினர் வரை  காயமுற்ற நிலையில்   புலிகளை அழிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்யாமலேயே   இந்தியா  தனது படைகளை விலக்கிக்கொண்டது.
ஆனால் 1949   இல்   இதே தினத்தில் உருவாக்கப்பட்ட  இலங்கை   இராணுவம் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அழிப்பதில் வெற்றி கண்டுள்ளது. சுமார் இரண்டு   இலட்சத்துக்கும்   அதிகமான படையினரைக் கொண்ட   இலங்கை இராணுவம்  இன்றுடன் 61 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது.  அதுவல்ல விவகாரம்.
இலங்கை இராணுவம் அடுத்த வருடம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய மாற்றங்கள் தான் இங்கு முக்கியமானவை.    விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவக்  கட்டமைப்பை   மறுசீரமைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.    போருக்குப் பிந்திய கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
எதிர்காலத்தில் எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சவால்கள் ஏற்பட்டாலும் அதை முளையிலேயே கிள்ளி முறியடிக்கும் நோக்கம் முதலாவது.   இரண்டாவது காரணம்,  புலிகளுக்கு எதிரான போரை  வழிநடத்திய  முன்னாள் இராணுவத் தளபதி   சரத் பொன்சேகா அரசுக்கு எதிராக அரசியல் நடத்தி வருவது.   போருக்குப் பிந்திய பாதுகாப்பு வலுவாக்க நோக்கின்  மற்றொரு  முயற்சியாகவே அடுத்த வருடம்   இலங்கை இராணுவத்தின்  கட்டமைப்புகள்  முற்றாக மறுசீரமைக்கப்படவுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமையவே இந்தப் புதிய மறுசீரமைப்புத் திட்டம் வரையப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் தென்பகுதியில் நிலைகொள்ளும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.    அத்துடன் தற்போது விசேட அதிரடிப்படையின் வசம் உள்ள கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை இராணுவம் தன் வசம் எடுத்துக் கொள்ளவுள்ளது.
அதேவேளை தற்போது வடக்கு,  கிழக்கை மையப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை பரவலாக்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டிவிசனை நிரந்தரமாக நிலை நிறுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.     ஸ்ரீலங்கா இராணுவத்தை மறுசீரமைப்புச் செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக  அம்பாந்தோட்டையில்   புதிதாக ஒரு டிவிசன் உருவாக்கப்படவுள்ளது.   இது  12ஆவது  டிவிசன்  என்று அழைக்கப்படும்.
அம்பாந்தோட்டை வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்ற வகையிலும் அங்கு துறைமுகம், விமான நிலையம் போன்ற கட்டமைப்புக்ள உருவாக்கப்பட்டு வருவதாலும் அதன் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக  இராணுவத்தின் தென்பகுதி    படைத் தலைமையகம் அமைக்கப்படும்.    தற்போது இது கண்டியில் இருந்து செயற்படுகிறது.
மறுசீரமைக்கப்படவுள்ள தென்பகுதி படைத்தலைமையகத்தின் கீழ் மாவட்டத்துக்கு ஒன்றாக மொத்தம்  மூன்று டிவிசன்கள் உருவாக்கப்படும்.   ஏற்கனவே பனாகொடயில் நிலைகொண்டுள்ள 11 ஆவது டிவிசன் காலிக்கு மாற்றப்படும்.      புதிதாக உருவாக்கப்படும்    12ஆவது டிவிசன்   அம்பாந்தோட்டையிலும்,    14ஆவது டிவிசன் மாத்தறையிலும் நிலைகொள்ளவுள்ளன.     13ஆவது இலக்கம் துரதிஷ்டம் கொண்டது என்ற கருத்து நிலவுவதால், அந்த இலக்கத்தில் புதிய டிவிசன் உருவாக்கப்படமாட்டாது.
இதற்கிடையே இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் மற்றொரு அங்கமாக புலிகளுக்கு எதிரான போரின்போது செயலிழந்து போன ஒரு இராணுவ டிவிசனை இராணுவம் மீளமைத்து வருகிறது.    ஆனையிறவைத்  தலைமையகமாகக் கொண்டு   இயங்கி வந்த   54ஆவது    டிவிசனே   தற்போது மீளமைக்கப்பட்டு வருகிறது.   இந்த டிவிசன் முன்னர் தேர்ச்சிமிக்க படையினரையும், சிறப்பு அணிகளையும் கொண்டதொன்றாக விளங்கியது.
அமெக்காவின்  ‘கிறீட்பெரட்’ சிறப்புப் படையினரிடம்   இந்த டிவிசனின் பல அணிகள் பயிற்சிகளைப் பெற்றிருந்தன.   அதனால் தான் ஆனையிறவுத் தளத்தை ஒரு போதும் புலிகளால் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை அப்போது இருந்தது.      ஐந்து பிரிகேட்களைக் கொண்டிந்த    இந்த டிவிசனின் ஒரு பிகேட்,    1998இல் கிளிநொச்சி படைத்தளம் மீதான தாக்குதலுடன் செயலிழந்தது.    மற்றொன்று பரந்தனிலும்,    இன்னொன்று உமையாள்புரத்திலும் தளம் அமைத்திருந்து செயலிழந்து போயின.
வெற்றிலைக்கேணியிலும், இயக்கச்சியிலும் எஞ்சியிருந்த இரண்டு பிரிகேட்களும் 2000ஆம் ஆண்டு புலிகள் நடத்திய ஓயாத அலைகள்  3 நடவடிக்கையின் போது செயலற்றுப் போயின.    ஆனையிறவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் தக்க வைப்பதற்காக நடந்த சமர்களில் சிதைந்து போன     54ஆவது டிவிசன் பின்னர் முற்றாகவே கைவிடப்பட்டது.     இந்த டிவிசனில் எஞ்சியிருந்த படையினர்   யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த ஏனைய டிவிசன்களுடன் இணைக்கப் பட்டனர்.
கடந்த பத்து வருடங்களில் இலங்கை இராணுவம் பல புதிய டிவிசன்களை உருவாக்கிய போதும் செயலிழந்து போன 54 ஆவது டிவிசனை புனரமைக்கும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.   ஆனால் தற்போது மன்னார் மற்றும் மாந்தைப் பகுதிகளைத் தளமாக்க் கொண்டு செயற்படும் வகையில் 54வது டிவிசன் உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரிகேடியர் மைத் டயஸ் தலைமையில்  தள்ளாடியில்  54ஆவது டிவிசன்  தலைமையகம் உருவாக்கப்பட்டுள்ளது.    இதன் கீழ் ன்னர் 212 ஆவது மற்றும்   215ஆவது பிரிகேட்களாக செயற்பட்ட இரண்டு பிரிகேட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.   இவற்றுக்கு 541   மற்றும்  542 என்று பெயரிடப்பட்டுள்ளன.   இது மன்னார் மாவட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது டிவிசனாகும்.   ஏற்கனவே மடுப்பகுதியில்   61ஆவது டிவிசன் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் மற்றொரு டிவிசன் அமைக்கப்பட்டு மன்னான் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இந்தப் புதிய டிவிசன் இன்னமும் அதிகாரபூர்வமாக முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்தே இது மு றைப்படி செயற்படும்.   அத்துடன் புதிய பாதுகாப்புத் திட்டத்துக்கமைய மாதுறுஓயா, தியத்தலாவ பயிற்சி முகாம்களில் மேலதிக பயிற்சிகளை படையினருக்கு வழங்கும் வசதிகள் செய்யப்படவுள்ளன.
போருக்குப் பிந்திய படைக்கட்டுமானங்கள் விடயத்தில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை இந்த படைக் கட்டுமான விரிவாக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.    அதேவேளை, இலங்கை இராணுவம் வெளிநாட்டுப் படையினருக்குப் பயிற்சிகளை வழங்கும் திட்டம் ஒன்றையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.    அடுத்த வருடம் ஜனவ  5ஆம் திகதி  இந்தப் பயிற்சிகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொமாண்டோ பயிற்சிப் பாடசாலை, சிறப்பு படைகள் அக்கடமி,   குறிபார்த்துச் சுடுதல் பயிற்சிப் பாடசாலை,    மாதுறு ஓயா பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும்.     நான்கு வெளிநாட்டு இராணுவக் குழுக்கள் இந்தப் பயிற்சியைப் பெறவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில்   இலங்கை இராணுவம் பெற்றுள்ள வெற்றியை அடுத்து கொமாண்டோ மற்றும் விசேட பயிற்சித் தந்திரோபாயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பல நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன.                இதற்கமையவே வெளிநாட்டுப் படை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அதுமட்டுமன்றி லெபனானில் அமைதி காக்கும் பணிக்கும் இலங்கை இராணு வத்தினர் அனுப்பப்படவுள்ளனர்.    லெபனான் அரசாங்கம் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதையடுத்தே அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முதலாவது அணி லெபனான் அனுப்பப் படவுள்ளது.
புலிகளுக்கு எதிரான போர் இலங்கை இராணுவத்துக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடங்கள் தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக