வெள்ளி, 8 அக்டோபர், 2010

எதிர்ப்பது போல் எதிர்த்து, கடைசியில் ஆதரித்து ,அணு உலை விபத்து இழப்பீடு மசோதா

நாடாளுமன்றம்  நாளும் ஆடும் மன்றம் ஆனது. துக்ளக் தர்பார் போல், ஒவ்வொரு நாளும் மத்திய அரசு, தான் முன்வைத்த மசோதாவில் மாற்றங்கள் செய்து வந்தது.

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா -2010 எனபது,  2009 ஆம் ஆண்டே முதலில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. பிறகு அந்த மசோதா உருமாறி மசோதா 2010  என்றானது.  இந்த மசோதா, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் நிலைக்குழு  விவாதத்திற்கு அனுப்பப்பட்டது.   அதன்பிறகு, நாடாளுமன்றஅமர்வில் வைக்கப்பட்டது.

மசோதா என்ற இந்தச் சட்ட முன்வரைவின் ஒவ்வொரு பிரிவாக சர்ச்சை எழுந்தது.  பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வந்தது. மத்திய அமைச்சரவையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றங்களைச் செய்து கொண்டே வந்தது. எப்படியாவது இந்த இழப்பீடு மசோதாவை சட்டமாக்கிவிடவேண்டும் என்பதற்காக ஐ.மு.கூட்டணி ஆட்சி... எதிர்ப்புகளுக்கு அவசர அவசரமாக இணங்கி,   மாற்றங்களை  செய்தது. ஏன் இந்த அவசரம்? ஏன் இந்தச் சட்டம் நிறைவேற அப்படி ஒரு பிடிவாதம்?.

 இரண்டு மாதத்தில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபமாவின் வருகைக்கு முன்பே, இந்த அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை சட்டமாக்கிவிட, மன்மோகன் அரசு துடிக்கிறது என்கிறார்கள் எதிர்கட்சியினர்.

சென்ற ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில், அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற 123 ஒப்பந்தத்திற்கு வித்திடப்பட்டது.  இந்திய நாடாளுமன்றத்திற்கும், மத்திய அமைச்சரவைக்கும் அறிவிக்காமலேயே,  தலைமையமைச்சர் மன்மோகன் சிங், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் இணைந்து அதற்கு வித்திட்டார் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது.

இந்தியாவிற்கு அதிகமான மின்சாரம் தேவை என்றும், அதை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் பெறவேண்டும் என்றும் மத்திய அரசு முடிவுசெய்தது. அதற்காக ‘யுரேனியம்’ என்ற எரிபொருளை அமெரிக்கா உட்பட அந்நிய நாடுகளிடமிருந்து வாங்குவதற்கு முடிவு செய்தது.  ஏறகனவே மும்பையில் உள்ள தாராபூர் அணு உலைக்கு, ‘யுரேனியம்’ கொடுத்து வந்த அமெரிக்கா, ‘அணு குண்டு வெடிப்பு சோதனைகளை’ இந்திய அரசு நடத்தியதால், எதிர்ப்பு தெரிவித்து யுரோனியம் விநியோகத்தை நிறுத்திவிட்டது.  என். எஸ்.ஜி. என்ற அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளும், இந்தியாவிற்கு எரிபொருள் கொடுக்க மறுத்து வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. 

123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ‘அமெரிக்க - இந்திய அணு சக்தி ஒப்பந்தம்’ கடும் விவாதங்களுக்குப் பிறகு அமெரிக்க செனட்டிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை அது ஏற்படுத்தியது.

‘ஆக்கத்திற்கான அணுசக்தி,’ ‘அழிவிற்கான அணுசக்தி’ என்று அணுசக்தியை பிரிக்கலாமென்றும்,  மின்சார உற்பத்திக்கு ஆக்கத்திற்கான  அணுசக்தியை உற்பத்தி செய்யத்தான் இந்த ஒப்பந்தம் என்றும் அமெரிக்கா கூறியது. ‘ஆமாம்’ என்று டெல்லியும் ஆமோதித்தது.

அந்த 123 ஒப்பந்தம் மூலம் அமெரிக்க கண்காணிப்பிற்கும், கட்டுப்பாட்டிற்கும் கீழ் இந்தியா அடிமையாக்கப்பட்டுவிடும் என்று குற்றம் சாட்டி இடது சாரிகள் அதை எதிர்த்தனர். அதற்காக அன்றைய ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை இடது சாரிகள் திரும்பப்பெற்றனர்.

இந்திய அணு அறிவியலாளர்கள் பலரும் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இந்திய அணு உலைகள் பற்றிய ரகசியங்களை அமெரிக்கா தெரிந்து கொள்ள வழிவகுக்கும் என்றனர். ‘யுரேனியத்தை மிக அதிக விலை கொடுத்து, அமெரிக்கா மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து தருவித்துதான்  இந்திய அணு உலைகளை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டிய நிர்பந்தமில்லை’ என்றும் அவர்கள் கூறினர். மேலும் அதற்கு மாற்றாக, இந்தியாவில் கிடைக்கும் “தோரியம்” என்ற எரிபொருளை வைத்தே, இந்திய அணு உலைகளை 20 ஆண்டுகளில் உருவாக்கி... இயக்க முடியும் என்று இந்திய அணு சக்தித்துறை ஒழுங்கு வாரியத்தின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் அடித்துக் கூறிவருகிறார்.

அமெரிக்க அரசுத்துறைச் செயலாளருக்கு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர்-10ம் நாள், இந்தியத் தலைமையமைச்சர் வழிகாட்டலில் ஒரு கடிதத்தை இந்திய வெளிவிவகாரச்செயலாளர் எழுதினார். அதில், 10,000 மெகாவாட் மதிப்புள்ள ‘எல்.டபிள்யூ.ஆர்.’ என்ற லேசான நீர் உலைகளை வாங்கிக் கொள்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.

யாரைக்கேட்டு அப்படி வாக்குறுதிகளை மன்மோகன் கொடுத்தார்? இந்தியாவில் அணு அறிவியலாளர்கள், திட்டக்குழு, நிதியமைச்சர், வர்த்தக அமைச்சர், மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு, மன்மோகனின் வழிகாட்டலில் எப்படி இப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்க முடிகிறது?.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கிளப்பிய ‘ அமெரிக்க நலனுக்காக அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை அவரசப் படுத்தப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டிற்கு பதில் கூறிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப  அமைச்சர், “அமெரிக்கா மட்டுமின்றி பிரான்சு நாட்டிலிருந்தும் அணு உலைகளைப் பெறுகிறோம்” என்று கூறினார்.

பிரான்சு நாட்டு அதிபார் நிக்கோலஸ் சர்கோசியிடம், மன்மோகன் மற்றொரு வாக்குறுதியை கொடுத்துள்ளார். அணு சக்தி விநியோகிப்பவர்கள் குழு நாடுகளின் நிபந்தனைகளை, இந்திய நிலைக்கு இணங்க வைத்ததற்கு பிரதிபலனாக, பிரான்சு நாட்டு அணு உலைகளை இந்தியா வாங்கிக்கொள்ளும் என்ற வாக்குறுதியை பிரான்சுக்கு கொடுத்துள்ளார். அதுவும் இந்தியாவில் யாரையும் கலந்துகொண்டு கொடுக்கப்படவில்லை. மேற்கண்ட குற்றச்சாட்டுகளை அணு அறிவியலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

இந்தியாவிற்கு மின்சாரம் அணுசக்தி மூலம் அதிகமாக உற்பத்தி செய்யவேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் கூட, இந்தியா தனது சொந்தக்காலில் நின்று, நமது நாட்டில் கிடைக்கும் “தோரியம்” எரிபொருளைக் கொண்டே, 2040 ஆம் ஆண்டிற்குள் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் எதற்காக மத்திய அரசு, வலியச்சென்று அந்நிய நாட்டு நிறுவனங்களிடம், நாட்டின் முக்கிய முதுகெலும்பை ஒப்படைக்கிறது?.

நாடாளுமன்றத்தில் நிலைக்குழு வைத் சட்டமுன்வரைவு மீது ஒரு வார காலம்  சர்ச்சை  எழுந்தது. அதில் 17வது திருத்தத்தில் “இந்திய அரசின் நிறுவனமான அணு உலை இயக்குனர், விபத்து ஏற்பட்ட உடனே இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்; பிறகு வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தரிடம் அதை வேண்டிப் பெற்றுக்கொள்ளலாம்” என்று இருக்கிறது.

17 - ‘அ’ பிரிவில் “அத்தகைய பெற்றுக்கொள்ளுதலிலும், குறிப்பிட்ட அணு உலை இயக்குனருக்கும், வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தருக்கும் இடையே அதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்” என்று எழுதியுள்ளது.

17 - ‘ஆ’ பிரிவில்,“ வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தரின் பொருள்களினாலோ, கருவிகளினாலோ, அவற்றின்  குறைபாட்டாலோ, தரம் குறைந்த சேவையினாலோ, அவர்களது ஊழியராலோ விபத்து ஏற்பட்டிருந்தால் அந்த விநியோகத்தரிடம் இழப்பீடு பெறலாம்” என்று உள்ளது.

இதில் உள்ள வாய்ப்பை நீக்க, ‘அ’ பிரிவையும், ‘ஆ’ பிரிவையும் இணைத்து ‘அண்ட்’ என்ற ஆங்கிலச்சொல்லை நிலைக்குழுவில் கொண்டுவந்தனர்.

சி.பி.எம். உறுப்பினர் அதை நிலைக்குழுவிலேயே எதிர்த்த போது, பா.ஜ.க உட்பட  நிலைக்குழு உறுப்பினர்கள் அதை ஆதரித்து நி்றைவேற்றினர். ‘அண்ட்’ என்பது ‘ஆ’ பிரிவில் உள்ள வாய்ப்புகளை, ‘அ’ பிரிவில் உள்ளதை வைத்து கட்டுப்படுத்திவிடும். இதை ஊடகங்கள் அம்பலப்படுத்திய உடனே, பா.ஜ.க. எதிர்க்கத் தொடங்கியது.

அடுத்து ‘இ’ என்ற பிரிவு, “ விநியோகத்தரை, ‘ஒரு நபர்’ என்று கூறியிருந்த இடத்தில் ‘உள்நோக்கத்துடன் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டால்’ என்ற பொருள்பட இணைக்கப்பட்டது. அதாவது, வெளிநாட்டு விநியோகத்தர் ‘உள்நோக்கத்துடன்’ செயல்பட்டதாக  இயக்குனரால் நிரூபிக்க முடியாது என்பதால் ‘ஆ’ பிரிவு கொடுத்த வாய்ப்பின்படி,  வெளிநாட்டு விநியோகத்தரிடமிருந்து இழப்பீடு பெறமுடியாது.  இதுவும் ஊடகங்களில் வெளியானதால் பா.ஜ.க. மக்களவையில் எதிர்த்தது.  ஐ.மு.கூ.  ஏற்றுக்கொண்டு  இரண்டையும் நீக்கியது. அதற்கு பா.ஜ.க.ஆதரவு கொடுத்தது. அதனால் மசோதா நிறைவேறியது.

அமெரிக்க ‘வால்ஸ்ட்ரீட் பேப்பர்’ பாராட்டியது. ஐரோப்பிய நாட்டு அரசுகளை, அமெரிக்க தனியார் அணு உலை முதலாளிகள் போட்டியில் வெல்ல, இந்திய சந்தை உதவும் எனக் கூறி, மன்மோகனை பாராட்டியிருந்தார்கள்.

இந்திய ஆட்சியளர்களும் மசோதாவில், 2(1),  3(அ), மற்றும் 7(1) ஆகிய பிரிவுகளை ஆகஸ்ட்-20ல் திடீரென இணைத்து தனியார்துறை நுழைய வழி வகுத்தனர். ஃபிக்கி, சிஐஐ என்ற 2 இந்திய முதலாளிகள் அமைப்பும், வெளிநாட்டு விநியோகத்தர்களை ‘இழப்பீடு’ தராமல் தப்பிக்க வைக்க முயல்கின்றனர்.

மொத்தத்தில் அமெரிக்க ஏற்பாட்டில் எதிர்ப்பது போல் எதிர்த்து, கடைசியில் ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஒரு வார நாடகம் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக