ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தமிழர்களுடைய கலாச்சாரப் பெருமையை கடுகளவும் விட்டுக்கொடுக்க முடியாது: கலைஞர்


தமிழர்களுடைய உரிமையை, தமிழர்களுடைய கலாச்சாரப் பெருமையை கடுகளவும் விட்டுக்கொடுக்க என்றைக்கும் நான் தயாராக இருக்க மாட்டேன் என, முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை மாமல்லபுரம் அருகில் பட்டிபுலம் எனும் இடத்தில் பரதர் இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகளை முதல்வர் கரணாநிதி துவக்கி வைத்தார். மேலும் சிற்பி முத்தையா ஸ்தபதியிடம் உளியினை அளித்து சிற்பம் செதுக்கும் பணியிணை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இந்திய மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கிடையே கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், சென்னை மாமல்லபுரம் அருகில் பட்டிபுலம் எனும் இடத்தில் பரதர் இளங்கோ ஆசிய கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
<பரதர் இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகளை துவக்கி வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி,
இந்த வழியாக எத்தனையோ முறை சென்னைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே பயணம் செய்திருக்கின்றேன்.  ஒவ்வொரு முறையும் நான் இந்த வழியில் செல்லும் பொழுது, என்னுடைய நினைவிலே அலைவீசிய நெஞ்சை நெகிழ வைக்கின்ற பல நினைவுகள் ஏற்படுவதுண்டு. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டபிறகு, கலைக்காக, கலை ஆர்வத்தை வளர்ப்பதற்காக, தமிழகத்தினுடைய கலையைத் தரணியெங்கும் பரப்புவதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு பெரிய முயற்சிக்கு நானும் ஒத்துழைப்பு தந்த இந்த நிகழ்வு என்றென்றும் நமது மனதில் நிறைந்திருக்கக்கூடிய ஒன்று என்ற உண்மையை நான் இங்கே கூற விரும்புகின்றேன்.
நம்முடைய பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்த் திரை உலகத்தின் முன்னோடியாகவும், திரை உலகத்திலே பலரை உருவாக்கியவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் திகழ்ந்த இயக்குனர், என்னுடைய அருமை நண்பர் கே. சுப்ரமணியம் அவர்களுடைய திருமகள் ஆவார்கள். இவர் நாட்டிய மேதை, ஆய்வியல் அறிஞர், பாடகர், இசையமைப்பாளர், நடன ஆசிரியர் எனப் பன்முகத் திறன்கள் படைக்கப்பெற்று உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கலைத்திறன் வாயிலாகப் புகழைப் பரப்பியுள்ளவர்.
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்ற போது, ஒரு அந்நிய நாட்டுத் தியேட்டரில், எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சி என்று அந்த நாட்டுத் தூதர்கள் அழைத்துச் சென்றார்கள். நான் சென்று அமர்ந்த பிறகுதான், பத்மா சுப்பிரமணியத்தினுடைய குழுவினர் அங்கே நடனமாடுகின்றார்கள் என்று எனக்குத் தெரிந்தது. அதுவரையிலே அந்த நாட்டின் பல இடங்களில், பல திரையரங்குகளில், நாடக அரங்குகளில் தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த பத்மா சுப்பிரமணியம் குழுவினர், அன்றைக்கு என் முன்னிலையிலே அந்த நிகழ்ச்சியை நடத்தியபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லையே இல்லை. <
ஏனென்றால், தமிழ்நாட்டிலேயிருந்து நாட்டியக் குழுவினர்   அதிலும் எனக்கு வேண்டிய நண்பர் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுடைய திருமகள் பத்மா சுப்பிரமணியம் தலைமையிலே, ஒரு குழுவினர் இன்றைக்குக் கலையை வளர்க்கின்றார்கள் தங்களுடைய கலையின் சிறப்பை வெளிப்படுத்துகிறார்கள்அதற்கு நான் முன்னிலை ஏற்கிறேன் என்பதைக் கேட்டபோது; எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

நான் அந்த மேடையிலே இரண்டொரு மணித்துளிகள் இருந்து அவர்களையெல்லாம் சந்தித்து விட்டு, சுற்றுப்பயண நிகழ்ச்சியில் வேறு இடத்திற்குச் செல்லப் புறப்பட்டுவிட்டேன். ஆனால், அந்த ஒரு நிகழ்ச்சியிலே எனக்கு ஏற்பட்ட அந்த உணர்ச்சி, ஏற்பட்ட நிறைவு, ஏற்பட்ட தொடர்பு, ஏற்கனவே எனக்கும் அவருடைய தந்தையார் டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் இருந்த கலை உலகத் தொடர்புகளோடு இரண்டறக் கலந்து; இன்றளவும் அந்தக் குடும்பம் வேறு, என்னுடைய குடும்பம் வேறு என்று இல்லாமல்; இரண்டும் ஒரே குடும்பம்தான்   கலைக் குடும்பம் என்ற அந்த உணர்வோடு, அவர்களிடத்திலே நான் பழகிக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள் இந்த இடத்திலே இன்றைக்கு இந்தக் கலாச்சார மையத்தை நிறுவுகின்ற பணியை நான் உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். என்னுடைய கொள்கை உறுதியைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். இங்கே பேசியவர்கள் குறிப்பாக கனிமொழி குறிப்பிட்டதைப்போல, தமிழர்களுடைய உரிமையை, தமிழர்களுடைய கலாச்சாரப் பெருமையை கடுகளவும் விட்டுக்கொடுக்க என்றைக்கும் நான் தயாராக இருக்க மாட்டேன் என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.
அந்த வகையிலே இதே இடத்தில் இப்படியொரு கலாச்சார மையத்தை அமைப்பதற்கு பத்மா அவர்கள் முயற்சி எடுத்து, கடந்த ஆட்சியிலே அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்து, பரத முனிவர் நாட்டியாலயம் என்றோ அல்லது கலாச்சார மையம் என்றோ பெயரோடு இது விளங்குவதாக இருந்தது. <
இந்த ஆட்சியில் அதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த ஆட்சியில் அவர்கள் என்னிடத்திலே கேட்டார்கள்& “ஏற்கனவே நாங்கள் அமைத்த பரத நாட்டியாலய கலாச்சார மையத்தை நீங்கள் மாற்றி அமைத்துவிட்டீர்கள். அதற்காக நாங்கள் நீதிமன்றத்துக்கு கூடச் சென்றிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்கள். நீதி கேட்பது நீதியினுடைய வெற்றிக்காகப் போராடுவது என்பதெல்லாம் இயல்பானது, வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் நான் பத்மாவிடத்திலே சொன்னேன் இதற்கெல்லாம் நீதிமன்றம் சென்று நானும் செலவழித்து, அரசும்  செலவழித்து, நீங்களும் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இருவரும் கலைஞர்கள். நான் என்னதான் முதலமைச்சராக இருந்தாலும் நானும் ஒரு கலைஞன்தான். அந்த வகையில் இருவரும் ஒத்துப்போவோம் என்று சொன்னேன்.எப்படி என்று கேட்டார்கள். எனக்கு இந்தக் கலாச்சார மையத்துக்கு இளங்கோ அடிகளுடைய பெயர் அமைய வேண்டும் என்று விருப்பம். உங்களுக்கு பரத முனிவர் பெயர் மீது பாசம். எனவே இரண்டையும் இணைத்து பரதர் இளங்கோ கலாச்சார மையம் என்று வைத்துள்ளோம். இதை இங்கே எங்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய நண்பர் கவிஞர் ரமணன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, இது பரதர் இளங்கோ இரண்டு பேரையும் இணைப்பது மாத்திரமல்ல; இது வடதிசையிலே உள்ள கலாச்சாரத்தையும், தென்திசையிலே உள்ள கலாச்சாரத்தையும் கைகோர்க்க வைத்த வேட்கை. இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதல்ல; உறவாடுகின்ற மகிழ்ச்சியாக இது இருக்கும் என்று நான் சொன்னேன். சொல்லிவிட்டு இந்த வழக்கை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். நாங்களும் இந்த அரசின் சார்பாக அமைந்த இந்த இடத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டோம் என்று சொல்லி, இப்படி  வழக்காடிப் பெற்று வழக்காட விடாமல் செய்து வழக்காட விடாமல் தந்து அமைந்துள்ள இடம்தான் இந்த பரதர் இளங்கோ ஆசிய கலாச்சார மையம் என்பதை நான் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
பெண்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்; அதைப்போலவே, ஆண்களும் சுலபத்திலே வெற்றியைக் கொடுத்துவிட மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த வகையிலேதான், இன்றைக்கு நம்முடைய இளங்கோவடிகளுடைய பெயர் இந்த இடத்திலே சூட்டப்பட்டிருக்கிறது பரதருடைய பெயரும் இந்த இடத்திலே சூட்டப்பட்டிருக்கிறது.
பரதம் என்றாலே பரதர். பரதர் உருவாக்கியது; பரதர் தான் அதனுடைய குரு என்ற ஒரு பழைய கால வழக்கம்பாரதம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது; அதிலே நாம் வேறுபடவில்லை; நான் அதை மறுக்கவில்லை. ஆனால் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இந்த பரதநாட்டியங்களுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கே சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
பரதம் என்பது ஒரு சொல் ஒரு பெரும் கலை. அது தமிழர்களுக்கோ அல்லது வடமொழியாளர்களுக்கோ அல்லது இந்தி மொழியாளர்களுக்கோ அல்லது தெலுங்கு மொழியாளர்களுக்கோ மாத்திரம் சொந்தமான கலை அல்ல.  யார் யாருக்கு அபிநயங்கள் அழகாகப் பிடிக்கத் தெரிகின்றதோ, யார் யாருடைய அசைவுகளிலே அர்த்தபாவம் இருக்கிறதோ, யார் யாருடைய அசைவுகளிலே கலை அழகு விஞ்சி நிற்கிறதோ அதுதான் மொழி. அந்த மொழிதான் பரதத்திற்குத் தேவை; நாட்டியத்திற்குத் தேவை. அந்தத் தேவையை உணர்ந்துதான், பரதநாட்டியக் கலைஞர்களுக்கு நாம் பட்டங்கள் வழங்குகின்றோம் அவர்களை நாட்டியப் பேரரசுகள் என்றெல்லாம் சிறப்பித்திருக்கின்றோம்; அப்படிப்பட்ட நாட்டியப் பேரரசுகளுடைய வரிசையில்   இங்கே கனிமொழி குறிப்பிட்டதைப்போல, பால சரஸ்வதி அம்மையார் மாத்திரமல்ல; நம்முடைய பத்மா சுப்பிரமணியமும் அந்த வரிசையிலே முதலிடம் பெறத்தக்கவர்களிலே ஒருவர் என்பதை நான் நன்றாக அறிவேன்.
அவர்கள் இன்றைக்கு இந்த அருமையான கலாச்சாரக் கூடத்தை நிர்வகித்து வருகின்றார்கள். இதன் மூலமாக ஏற்கனவே ஆசிய நாடுகள் பலவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு பரதக் கலையின் புகழ் ஆங்காங்கு படர்ந்திருப்பதைக் கண்டறிந்தவன் அவன்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற இந்தியக் கலாச்சார விழாவில், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த நாட்டிலே திருப்பாவை திருவெம்பாவை விழா நடைபெறுவதைக் கண்டு வியந்துள்ளார். ஆனால், திருப்பாவையை டிரிப்பேவை திருவெம்பாவையை டிரியம்பேவை என்ற இந்தச் சொற்களால் அங்கே அழைத்தபோது, அதைப்பார்த்து பத்மா சுப்பிரமணியம் வியந்து, அதை நம்முடைய இந்தியக் கலைஞர்களுக்கு நினைவூட்டியவர்; எடுத்துக் காட்டியவர். அவ்வளவு புகழ்பெற்ற தாய்லாந்து போன்ற இடங்களில், நம்முடைய கலைக்கு இவ்வளவு மகத்துவம் இருந்தால், நாம் இதை எப்படி அலட்சியப்படுத்தலாம் என்ற உணர்வோடு, அந்தக் கலையை, கலாச்சாரத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டு வருகிறார் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்.
அவர்கள் இந்த இடத்தில் ஒரு பந்தலை அமைத்து, நம்முடைய தம்
பி அமைச்சர் அன்பரசன் அவர்களுடைய முயற்சியோடு துணையோடு ஒரு பந்தலை அமைத்து, ஒரு மேடையை அமைத்து இந்த விழாவைத் தொடங்கினார் என்பதோடு விட்டுவிடாமல், தமிழகத்திலே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களும், கலைஞர்களும் அதற்குத் துணையாக இருந்து ஒத்துழைத்து; இது மேலும், மேலும் இங்கே மாமல்லபுரத்தைப் பார்க்க, மாமல்லபுரத்திலேயிருக்கின்ற சிற்பங்களையும் பார்க்க வருகின்ற சுற்றுலாப் பயணிகளைப் போல, இங்கே அமையப் போகிற கலாச்சார மையத்தினைக் காண  பரதர் இளங்கோ கலாச்சார மையத்தைக் காண தமிழகம் முழுவதும் மாத்திரமல்ல; இந்தத் தரணியெங்கும் இருக்கின்ற பல்வேறு நாடுகளிலே உள்ள மக்கள், கலைஞர்கள் அனைவரும் வரக்கூடிய ஒரு சூழல் உருவாக வேண்டும்; அதற்கு நம்முடைய அன்பான ஆதரவு என்றென்றும் வழங்கப்பட வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரையில், பத்மா சுப்பிரமணியம் அவர்களுடைய கலாச்சார முயற்சிக்குகலை முயற்சிக்கு இந்த அரசின் சார்பாக எந்த உதவிகளைச் செய்ய முடியுமோ, அந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறி; காஞ்சிபுரத்திற்குப் பக்கத்திலே, மாமல்லபுரத்திற்கு அருகிலே, இப்படிப்பட்ட ஒரு அருமையான, அவர்களுடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால், ஷேத்திரம் என்னுடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால், திருநகரம் கலைநகரம் உதயமாவதையும் நான் வரவேற்று வாழ்த்தி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக