வெள்ளி, 22 அக்டோபர், 2010

விலைக்குறைப்புக்கு வழியே இல்லையா என்ற கேள்வி ?

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கிவிடலாம்... சோத்துப் பிரச்சினை ஓகே. ஆனால் குழம்பு.. சாம்பார், ரசம்? இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும்... குறைந்தது ரூ 100!

இதுதான் தமிழகத்தின் நிலைமை. அரிசி விலை என்று நாம் இங்கே குறிப்பிடுவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் தரும் அரிசிதான். இதை எத்தனைப் பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் அல்லது மேலே ரூ 2 வைத்து கடைக்கு விற்றுவிடுகிறார்கள் என்பதெல்லாம் தனி பாலிடிக்ஸ். நல்ல அரிசி வேண்டும் என்றால் அதுவும் கிலோ ரூ 40 வரை போகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது!

ஆக, அரிசியை ரூ 40 வரை விலை கொடுத்து வாங்கினாலும், அதற்கு தேவையான சாம்பார் உள்ளிட்ட சைடிஷ் செய்ய ஒரு வேளைக்கு குறைந்தது ரூ 100 தேவை என்பதுதான் நடைமுறை உண்மை.

காரணம்?

மளிகைப் பொருள்களின் விலையேற்றம். இன்றைய நிலவரப்படி, மளிகைப் பொருள்களின் விலையைப் பாருங்கள்...

கடந்த வாரம் ரூ 220க்கு விற்பனையான கிலோ மிளகு விலை, இந்த வாரம் ரூ 240 ஆக உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு விலை ரூ 250, சாதா பூண்டின் விலை ரூ 220. புளி விலை கிலோ ரூ 65லிருந்து 90க்கு போய்விட்டது.

சன்பிளவர் எண்ணெய் ரூ 65 வரை விற்கிறது. ஒரே வாரத்தில் ரூ 7 வரை உயர்ந்துள்ளது லிட்டருக்கு. கடலை எண்ணெய் ரூ 130 வரையிலும், நல்லெண்ணெய் விலை ரூ 110 வரையிலும் விற்பனையாகிறது. கடுகு, சீரகம், மிளகாய், தனியா என எந்தப் பொருளின் விலையும் குறைந்தபாடில்லை. குறைந்தது 30 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 120 சதவீதம் வரை பல்வேறு மளிகைப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஒருவேளை சமையலுக்கு அரிசி தவிர்த்து, மளிகைச் செலவு மட்டும் ரூ 100 முதல் 130 வரையிலும் தேவை.

பருப்பு விலை மட்டும் மூட்டைக்கு ரூ 500 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மொத்தக் கொள்முதல் விலையில் ஏற்பட்ட குறைவுதான். ஆனால் இந்த விவரம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் பழைய விலைக்கே வைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர் கடைக்காரர்களும்.

இந்த சூழலில் விலைக்குறைப்புக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

"ஒரே வழிதான். சப்ளை அதிகரிக்க வேண்டும். அதற்கு விளைச்சல் இருக்க வேண்டும். ஆனால் இருக்கிற விளை நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டு அல்லது தொழிற்சாலைகள், வீட்டுமனைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஊதுபத்தியை உருட்டியபடி இலவச டிவியில், சீரியல் பார்ப்பதில் மூழ்கிப் போய்விட்ட மக்களை என்ன செய்யப் போகிறோம்?", என்கிறார் பேராசிரியர் சபாநாயகம் (சென்னைப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் இவர்).

"மக்கள் உழைக்கத் தயாராக இல்லை. எதிர்மறையான கருத்தை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனைச் சொல்லவில்லை. இதுதான் நிஜம். பிள்ளைகள் சம்பாதித்தாலும், கிராமத்தில் உழைப்புக்கு ஓய்வு தராத மக்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது.

தமிழகத்தைப் பொருத்தவரை, விவசாயம் சார்ந்த கிராமியப் பொருளாதாரம் நாசமடைந்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது அதுதான் மாநில அளவிலும் எதிரொலிக்கிறது. சென்னை என்பது மாநிலப் பொருளாதாரத்தின் அளவுகோல் அல்ல. இது வெறும் மாயை. மிக நீண்டகாலமாக பாய்ச்சப்பட்ட நச்சு இப்போது அதன் வேலையைக் காட்டுகிறது. மீண்டும் இந்த மக்கள் உழைப்பை விரும்பி ஏற்பார்களா? என்பது கேள்விக்குறிதான்" என்கிறார் கவலையுடன்.

அரசியல்வாதிகள் எதிர்ப்பார்த்தது இதைத்தானே... ஏன் என்ற கேள்வியையே கேட்காமல் எப்போதும் தொலைக்காட்சி / எப்போதாவது கிடைக்கும் இலவசங்களின் போதையில் மக்கள் மூழ்கிக் கிடந்தால் போதும் என்ற நினைப்பில்தானே திட்டங்களே தீட்டப்படுகின்றன!
அதற்கான பலன் கிடைத்துவிட்டது. அபார சாதனைதான்!
 
பதிவு செய்தவர்: மஞ்சள் துண்டு
பதிவு செய்தது: 22 Oct 2010 6:51 pm
பார்த்தாயா உடன்பிறப்பே! தலித்களுக்கு மக்கள் வர பணத்தில் டிவி கொடுத்ததை குறுக்கே நூல் போட்டவர்கள் ஆரியர்கள் எப்படி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ? அடுத்த தேர்தலில் இலவச வேற கிரைண்டர் தர்வோம் மறக்காமல் உதய சூரியன் சின்னத்திற்கே .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக