வெள்ளி, 8 அக்டோபர், 2010

சரத் பொன்சேகா சங்கடத்தில் வீழ்வதற்கு எதிர்க்கட்சிகளும் அமெ.தூதரகமுமே காரணம்:விமல் வீரவன்ச

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்கவும் மாத்திரமே தெரியும். அவருக்கு அரசியல் தெரியாது. இருந்தும் யுத்தம் தொடர்பில் நன்கு தெரியும். ஆனாலும் அரசியல் தெரியாத ஒருவரை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் இவ்வாறான சங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளும் உதவி புரிந்தனர்.
சரத் பொன்சேகாவை நினைக்கும் போது எனக்கும் கவலையாக இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியினால் அதற்கு ஒப்புதல் அளிக்காதிருக்க முடியாது.
இராணுவ நீதிமன்றத்தின்மூலம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றாலோ அல்லது தனது கணவர் தனக்கு வேண்டும் என்றாலோ அனோமா பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டும். எதிர்க்கட்சியினரின் பேச்சினைக் கேட்டு மன்னிப்புக் கோராதிருப்பதில் பலன் ஏதும் கிட்டப்போவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்த சமயத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு வழங்குமாறு கோரியதையடுத்தே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அனோமாவுக்கு தனது கணவர் வேண்டுமென்றால் மன்னிப்புக் கோருவதைத் தவிர வேறு வழி கிடையாது. வீதி வீதியாக அலைவதில் நன்மையில்லை.
சரத் பொன்சேகா சிறையில் இருக்க வேண்டியவர் அல்ல. அவர் வெளியில் இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். ஆனாலும் அவர் வெளியில் வருவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. இதனாலேயே பொன்சேகா மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று அனோமா ஊடாக தூண்டி விடுகின்றனர். பொன்சேகாவின் குடும்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக