ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பெண்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்ற கோரி போராட்டம்,ஆண்கள் ATM எந்திரமல்ல'

பெண்களிடம் இருந்து ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி பெங்களூரை சேர்ந்த `கிரிஸ்ப்' மற்றும் `சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேசன்' அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்த அமைப்புகள் சார்பில் நேற்று பெங்களூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அவர்கள் கையில் தட்டி பலகையை ஏந்திய படி கோஷம் போட்டனர். `ஆண்கள் ஏ.டி.எம் எந்திரமல்ல', `இந்திய குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்' என்பது போன்ற பல்வேறு வாசகங்களை தட்டி பலகையில் எழுதி வைத்து இருந்தனர். இந்த நூதன போராட்டம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
போராட்டக்காரரர்கள் மத்தியில் `கிரிஸ்ப்' அமைப்பின் தலைவர் குமார் ஜாகீர்தார்,

’’குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து அது தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கணவன்மார்களை கொடுமைபடுத்துகிறார்கள்.

பொய் புகார் கொடுத்து குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆறுதலும், நீதியும் மறுக்கப்படுகிறது.

இதனால் ஏராளமான ஆண்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாரம்பரியம் மிக்க இந்திய குடும்பங்கள் நாசமடைந்து வருகின்றன. இந்தநிலையில் அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை தடுப்பு மாதமாக கடைபிடிக்கிறோம். இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை செய்ய உள்ளோம்.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை போல ஆண்களுக்கும், விவாகரத்து செய்த தம்பதியின் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை போராடுவோம்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக