வெள்ளி, 29 அக்டோபர், 2010

செஞ்சி சிறையில் இளம் பெண் கற்பழிப்பு-3 சிறைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: செஞ்சி கிளைச் சிறையில் ரீட்டா மேரி என்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 சிறைக் காவலர்களுக்கு, அதை உறுதி செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2001ஆம் ஆண்டு திண்டிவனத்தில் இளம்பெண் ரீட்டா, பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை, சிறைக்காவலர்களே கற்பழித்த கொடுமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிறை காவலர்கள் மீது திண்டிவனத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், செஞ்சி கிளை சிறையின் தலைமை காவலர் நாசர் மற்றும் சிறைக்காவலர்கள் ஜெயபாலன், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்து 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஒரு வார்டன் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தண்டனை பெற்ற 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதந்திரம், சிறை காவலர்கள் ராமசாமி, ஜெயபாலன், அன்பழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், தலைமை சிறைக்காவலர் நாசர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக