புதன், 13 அக்டோபர், 2010

துபாயில் முன்னாள் காதலியை 27 இடங்களில் கத்தியால் குத்திய இந்தியர்

துபாய்: இந்தியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் மனீந்தர் (41) தனது முன்னாள் காதலியை 27 இடங்களில் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் 23 வயதாகும் தனது முன்னாள் காதலியான பிலிப்பைன்ஸ் பெண்ணையும், அவரை காப்பாற்ற முயன்ற 2 இந்தியர்களையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்தப் பெண்ணுக்கு 27 இடங்களில் கத்தி குத்துபட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மனீந்தரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஹமாத் அப்துல் லத்தீப் அப்துல் ஜவாத் விசாரித்தார்.

அப்போது தான் வேண்டும் என்றே அந்தப் பெண்ணை குத்தவில்லை என்றும், குடிபோதையில் நடந்துவிட்டதாகவும் கூறினார் மனீந்தர். குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்த தனக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த விசாரணையை நவம்பர் மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி மனீந்தருக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு உத்தரவிட்டார்.

இது குறித்து உயிர் பிழைத்த அந்தப் பெண் கூறியதாவது,

அவர் ஏற்கனவே மணமானவர் என்பதாலும், மத வேற்றுமையாலும் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்தது.

அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதால் தான் நான் அவரை விட்டு விலகினேன். நான் அவரை விட்டு விலகினால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டியிருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நான் வரவேற்பாளராக வேலை பார்த்த கம்பெனிக்கு வந்தார்.

அவர் குடிபோதையில் இருந்ததால் நான் பிறகு பேசுகிறேன் என்று கூறினேன். அதற்குள் அவர் கத்தியை எடுத்து என்னை குத்திவிட்டார் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக