புதன், 6 அக்டோபர், 2010

கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள்: மாதம் 200 டொலர் சம்பளம்

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள்: மாதம் 200 டொலர் சம்பளம

2008   இல் ஒஸ்கார் விருதைப் பெற்ற ஹொலிவூட் தயாரிப்பான  « த ஹேர்ட் லொக்கர்’  (The Hurt Locker) திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட வெடிபொருள் துறை நிபுணர்களிலும் பார்க்க வித்தியாசமான முறையில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக வான்மதி ஜெகதாஸ் காணப்படுகிறார்
வட இலங்கையைச் சேர்ந்த விவசாயியின் மனைவியான ஜெகதாஸ் (37 வயது) மாதம் 200 டொலர் சம்பாதிக்கிறார். கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தனது பணிக்காகப் பிரவேசிக்கும் ஒவ்வொரு தடவையும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியிருப்பதாக அவர் கூறுகிறார்.
தனது கிராமத்தில் அதிகளவு   ஊதியத்தைப் பெறும் தொழிலாக இந்த வேலை இருக்கின்றதென்று அவர் கூறுகிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள். 2007 இல் அப்பெண்ணின் தாயாரும் கணவனும் ஆட்லறித் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.     ஒருவருடத்திற்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் சுவிஸ் பவுண்டேஷனில் அவர் பணியில் இணைந்து கொண்டார்.      மன்னார் மாவட்டத்தில் 700 இற்கும் அதிகமான கண்ணிவெடிகளை தான் செயலிழக்கச் செய்திருப்பதாக அவர் ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குக் கூறியுள்ளார்.
புலிகளின் முன்னாள் பாதுகாப்பு எல்லைப்பகுதிகளிலும் அவர் பணியாற்றுகிறார். அநேகமான வீடுகளில் யுத்தத்தின் பின்னரான சுமையை பெண்களே சுமந்து கொண்டிருக்கின்றனர்.   அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது.       கண்ணிவெடி அகற்றும்போது அவர்கள் குறுகிய வழிகளை எடுத்துக்கொள்வதில்லை என்று சுவிஸ் பவுண்டேஷன் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் நைஜெல் பீகொக் கூறினார்.
கண்ணிவெடி அகற்றும் பணியானது உலகிலேயே மிகவும் ஆபத்தான தொழில்களில் ஒன்றாகும். ஆனால், இந்தப் பெண்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆண்களிலும் பார்க்க அவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றுகின்றனர் என்று அவர் கூறினார்.
வட,கிழக்குப் பகுதிகளில் 90 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் சமூகசேவைகள் அமைச்சு மதிப்பிட்டுள்ளது. 50 வீதமான குடும்பங்களுக்குப் பெண்களே குடும்பப் பாரத்தைச் சுமக்கின்றனர். அநேகமானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் தமது குடும்பத்தையும் பெற்றோர், சகோதரங்களையும் பராமரிக்கின்றனர் என்று போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் பணிப்பாளர் விசாகா தர்மதாஸ கூறினார்.
கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அதிகளவு கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.         இதுவொரு மதிப்பான உயர்ந்த அந்தஸ்துள்ள வேலையாகக் கருதப்படுகிறது. கோழி வளர்ப்பைப் போன்றதொன்றல்ல என்று அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
உடல் பூராகவும் கவச அங்கிகளை அணிந்து கொண்டு ஹெல்மட்டுடன் தமது கருவிகளை ஏந்தியவாறு தினமும் இந்தப் பெண்கள் காடுகளில் புதர்களுக்குள்ளும் சதுப்பு நிலங்களுக்குள்ளும் செல்கின்றனர்.   புஷ்பராணி தவரெத்தினம்    (38 வயது) கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள   மற்றொரு பெண்ணாகும். தனது நிதிநெருக்கடியால் இந்த ஆபத்தான தொழிலுக்கு அவர் தயாராகியிருக்கிறார்.
நான் பயப்படவில்லையெனக் கூறினால் நான் பொய் சொல்லுகிறேன் என்று அர்த்தமாகும் என்று அவர் தனது கைகளில் செயலிழக்கப்பட்ட கண்ணிவெடியை ஏந்தியவாறு ஏ.எவ்.பி.க்கு இதனைக் கூறினார்.   இப்போதும் பயமாக இருக்கின்றது.       சகல கண்ணிவெடிகளையும்   அகற்றுவதென்பது         சாத்தியமான விடயமல்ல.   நான் அகற்றும் ஒவ்வொரு கண்ணிவெடியும் குறைந்தது பத்துப் பேரையாவது  அல்லது   ஒருவரையாவது காப்பாற்றும் என்று அவர் கூறியுள்ளார்.
தனது கணவன், இரு பிள்ளைகள்,தனது தாயார் ஆகியோரைப் பராமரிக்க அவர் உழைக்கும் பணம் செலவிடப்படுகிறது.
இதேவேளை, 2000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல்ல கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக