புதன், 15 செப்டம்பர், 2010

Photo

வவுனியா நகரசபைக் கூட்டத்தை தலைவர் இன்று நடைபெறாமல் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை உறுப்பினர் 10 பேரும் சபை மைதானத்தில் கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்து தமது வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு போராட்டம் நடத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதலைவர் முகுந்தன், எஸ்.சுரேந்திரன், எஸ்.சிவகுமார், இ.கனகையா, புளொட் கட்சியின் உறுப்பினர்களான ரி.லிங்கநாதன் சு. குமாரசாமி, பார்த்தீபன் மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி, முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அடங்கலாக உள்ள 10 பேரும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் சபைக் கூட்டம் ஆரம்பமானபோது தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையடுத்து தலைவர் கூட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார்.
நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடாத விடயங்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டதனாலேயே கூட்டத்தை இடைநிறுத்தியதாக தெரிவித்த தலைவர் நாதன் இது குறித்து ஆளுநருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தை இடைநிறுத்தி வெளியேறிய நகரசபைத் தலைவரின் தனிமனித சர்வாதிகாரப் போக்கை கண்டித்தே 10 உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளோம் என சபையின் எதிர்க்கட்சித் தலைவர்ரி. லிங்கநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்தை நடத்திய நகரசபை மைதானத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராதலிங்கம் ஆகிய இருவரும் போராட்டம் நடத்திய நகரசபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சபையின் அடுத்த மாதாந்தக் கூட்டத்திற்கு முன்னர் இவற்றிற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து உறுப்பினர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக