வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இளையராஜா:நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது

நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

நான்காவது முறையாக இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எப்போதுமே விருதை எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. எப்போதும் போலவே பணியாற்றுகிறேன். பழசிராஜா படத்துக்காக கூட நான் கடுமையாக வேலை செய்யவில்லை. கதையைக் கேட்டதும் 2 நாள் டைம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டேன். அந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்தேன்.

படத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மிகப் பொறுமையாக அதில் நடித்த நடிகர், நடிகைகளை இயக்குநர் நடிக்க வைத்திருந்தார்.

எனக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது, நல்ல இசைக்கு கிடைத்துள்ள விருதாகவே கருதுகிறேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அரசாங்கத்திடமிருந்து வந்துள்ள இந்த விருதை மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றார் இளையராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக