புதன், 22 செப்டம்பர், 2010

தூக்கு தண்டனை: அதிமுகவினர் ஜனாதிபதிக்கு மனு!

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதான நெடுஞசெழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று அதிமுகவினருக்கு சுப்ரீம் கோர்ட் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மூன்று பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் 3 பேரையும் அக்டோபர் 8ம் தேதி தூக்கில் போட சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன், வேலூர் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.



இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த மனோஜ்பாண்டியன் உட்பட அதிமுகவினர் வேலூர் சிறைக்கு சென்று, நெடுஞசெழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரையும் சந்தித்து பேசினர்.



பின்னர் அவர்களின் சார்பில் தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு சமர்ப்பிக்கும் மனுவில் கையெழுத்திட்டனர்.


தொடர்ந்து இம்மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிகிறது. மேலும் டெல்லியில் அதிமுகவினர் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் இம்மனுவை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனிக்கோர்ட்டு தண்டனை வழங்கியது.


இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் நடந்த போராட்டத்தின்போது, கோவை வேளாண்மை கல்லூரி பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் ஹேமலதா, கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக