புதன், 29 செப்டம்பர், 2010

கண்ணீர் விடும் விபச்சார பெண்கள்

விபச்சார வழக்கில் கைதான வெளிமாநில பெண்களில் பலர், கோவையிலுள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் பல மாதங்களாக அடைபட்டுள்ளனர். தங்களை மீட்டுச் செல்ல உறவினர் வராததாலும், கோர்ட்டில் இருந்து மறுஉத்தரவு பிறப்பிக்கப்படாததாலும், விடுதலை நாளை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

கோவை மாநகரில் விபச்சாரத்தில் ஈடுபடும் கும்பல் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மசாஜ் சென்டர் நடத்தியும், இன்டர்நெட்டில் அழைப்பு விடுத்தும் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிமாநில பெண்கள், புரோக்கர்கள் கடந்த இரு மாதத்தில் 32 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கார், பைக், மொபட், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்படும் விபச்சார கும்பலைச் சேர்ந்த புரோக்கர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பிடிபடும் பெண்களில் பலர், வழக்கை கோர்ட்டில் எதிர்கொள்வதாக கூறி சிறைக்குச் செல்கின்றனர். அடுத்த சில நாட்களில் புரோக்கர் உதவியுடன் கோர்ட்டில் ஆஜராகி, அபராதம் செலுத்திய பின் விடுதலையாகின்றனர்; இது ஒரு வகையான சட்ட நடவடிக்கை.

மற்றொரு வகையான நடவடிக்கையில், விபச்சார வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள், சிறையில் அடைக்கப்படாமல் அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு, பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்படும் பெண்கள், அவ்வளவு எளிதாக விடுதலை பெற்று வெளியேறிவிட முடியாது. கோர்ட்டில் இருந்து மறுஉத்தரவு வரும் வரை தொடர்ந்து பாதுகாப்பு இல்லத்திலேயே தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த எண்ணற்ற பெண்கள், கோவை நகரிலுள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு இல்ல நிர்வாகிகளை அணுகி, தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க உதவுமாறு மன்றாடுகின்றனர். எனினும், கோர்ட்டில் இருந்து மறுஉத்தரவு வந்தால் மட்டுமே விடுவிக்க முடியுமென, பாதுகாப்பு இல்ல நிர்வாகிகள் கைவிரித்துவிடுகின்றனர்.

இதுகுறித்து பாதுகாப்பு இல்ல நிர்வாகிகள், கோவை சட்ட மையத்துக்கு சமீபத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவை தொடர்ந்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி மகிழேந்தியும், சட்டப்பணிகள் குழு உறுப்பினர் வக்கீல் கலையரசனும் சமீபத்தில் சங்கனூரிலுள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட விபச்சார வழக்கு பெண்கள், தங்களை விடுவித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றாடினர். "விபச்சார வழக்கில் சிறை சென்ற பெண்கள் கூட அபராதம் செலுத்தி தங்களை வழக்கில் இருந்து விடுவித் துக்கொள்ள முடிகிறது. அதே வேளையில், பாதுகாப்பு இல் லத்துக்கு அனுப்பப்பட்ட பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது' என, புலம்பியுள்ளனர்.

இதுகுறித்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வக்கீல் கலையரசன் கூறியதாவது: விபச்சார வழக்கில் பிடிபடும் பெண்களில் சிலர், சிறையில் அடைக்கப்படாமல் அரசு பாதுகாப்பு இல்லத் துக்கு அனுப்பப்படுகின்றனர். கோர்ட்டில் இருந்து மறுஉத்தரவு வரும் வரை இல்லத்திலேயேதான் இருக்க வேண்டும்; அதுவரை, கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள். இவர்களது உறவினரோ அல்லது நம்பத்தகுந்த நபர்களோ சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மனு செய்தால் மட்டுமே விடிவு காலம் பிறக்கும். விபச்சார வழக்கில் தாங்கள் சிக்கியிருப்பது உறவினருக்கு தெரிந்தால் அவமானம் எனக்கருதி, பெண்களில் பலரும் தகவல் தெரிவிக்காமல் தவிர்த்துவிடுகின்றனர்.

மைனர் பெண்களுக்கு மட்டும் தான் யாராவது உத்தரவாதம் அளித்து மீட்டுச் செல்ல முடியும். ஆனால், பாதுகாப்பு இல்லத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் மேஜர் தகுதியை கடந்தவர்கள். அவ்வாறு இருக்கையில், பாதுகாப்பு இல்லத்தில் இவர்களை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்பது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால்கூட தண்டனை முடிந்தோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியோ வழக்கில் இருந்து விடுதலையாகியிருக்க முடியும். பாதுகாப்பு இல்லத்தில் சிறந்த பராமரிப்புடன் நல்ல உணவு வழங்கப்படுகிறது. மேலும், சுயதொழிலுக்கான தையல், பொம்மை தயாரிப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு, அங்கு தங்கியிருப்பதும் ஒரு வகையான சிறை வாழ்க்கையாகவே அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு, கலையரசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக