திங்கள், 13 செப்டம்பர், 2010
மருமகள் தற்கொலை வழக்கு:கோர்ட் தீர்ப்புக்கு பயந்து மாமியார் தற்கொலை
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பெரியமுத்து தெருவை சேர்ந்தவர் அருணா சலம் (45). விவசாயி. இவருக்கும் கடையா நல்லுருட்டியை சேர்ந்த பாலையா மகள் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 2 மாதத்திலேயே மகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. இதில் வரதட்சணை கொடுமை காரணமாக மகேஸ்வரி தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அருணாசலம் மீதும், அவரது தாய் களஞ்சியம் (70) என்பவர் மீதும் சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடை பெற்றது. இந்த வழக்கில் அருணாசலத்துக்கும், களஞ்சியத்துக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அருணாசலம் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப் பட்டது. இதில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு தண்டனை காலத்தை 7 ஆண்டாக குறைத்து கீழ் கோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது.
இதனால் அருணாசலமும், களங்சியமும் மன வேதனை அடைந்தனர். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி நேற்று விஷத்தை குடித்துவிட்டு வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர். வெகு நேரம் அவர்களை காணாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு களஞ்சியம் இறந்து கிடந்தார். அருணாசலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அருணாசலத்தை மீட்டு சுரண்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து களங்சியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக