செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ரஷ்ய பெண் வைணவ மதம் மாறி புகழ் பரப்ப முடிவு

ராமநாதபுரம் : நடனம் கற்க இந்தியா வந்த ரஷ்ய யூதர் இன இளம்பெண், பெருமாளின் பெருமைகளால் வைணவத்திற்கு தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்தவர் தார்யா(20). எம்.ஏ., உளவியல் படித்து வரும் இவருக்கு, "குச்சுப்புடி' நடனம் மீது மோகம் ஏற்பட்டது. இதற்காக இந்தியா வந்த தார்யா, கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் கலைமாமணி சைலஜாவிடம் குச்சுப்புடி நடனம் கற்று வருகிறார். இந்த காலகட்டத்தில், நடனத்தில் வரும் அபிநயங்களை அறிய முயன்ற போது, பெருமாளின் பெருமைகள் தெரிய நேர்ந்தது. அதில் கவரப்பட்ட தார்யா, வைணவத்தில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பினார். இதற்காக தமிழகத்திலுள்ள பல்வேறு வைணவ தலங்களுக்கு சென்று, பெருமாளை வழிபட்ட பின், தன் முறையான இணைப்பை சென்னை அகோபிலா மடம் ஜீயர்கள் முன்னிலையில் நடத்தவிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் வந்த தார்யா, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், சேதுக்கரை, ராமநாதபுரம் கோதண்டராமர் கோவில்களில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் தார்யாவின் குச்சுப்புடி நடனம் நடந்தது. இதை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தார்யா கூறியதாவது: நடனம் மீது எழுந்த ஆசையில் இந்தியா வந்த என்னை, பெருமாளின் பெருமைகள் கவர்ந்தன. அவர் சார்ந்த வைணவ மதத்தை பின்பற்றி, நடனம் மூலம், அவரது புகழை பரப்புவதே என் எதிர்கால திட்டம். இதற்காக, அனைத்து வைணவ தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறேன். அகோபிலா மடம் ஜீயர்களிடம் முறைப்படி முத்திரை தானம் பெற்று, வைணவத்தில் முறையாக இணைய உள்ளேன். இவ்வாறு தார்யா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக