ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

அழகிரி: ஜெயலலிதா மதுரை வந்துவிட்டு செல்லட்டும்;அதன்பிறகு பேசுவோம்



மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உத்தங்குடி, மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய 3 இடங்களில் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக திருமண மண்டபங்களை கட்டிக் கொடுத்துள்ளார். அவற்றின் திறப்பு விழாக்கள் நடந்தன.

 இவ்விழாவில் மு.க.அழகிரி,   ‘’இந்தியாவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்திற்காக ஒதுக்கிய நிதியை அதிக அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு செலவழித்த முதல் எம்.பி.நான்தான் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள். அது உண்மைதான்.
 
நான் இன்னும் மதுரை மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். நாடு முழுவதற்கும் நான் மந்திரியாக இருந்தாலும் மதுரை மக்களுக்கு நான் நிறைய செய்து கொண்டே இருப்பேன். ஏனென்றால் உங்களால்தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். 
அரசு மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வந்தபோதிலும் தலைவர் கலைஞர் பிறந்த நாள், என்னுடைய பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகிய விழாக்களையொட்டி மதுரை மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஏழை எளியவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள்.

அதைப்போன்று ஆண்டிப்பட்டி தொகுதியில் வருசநாட்டிலும் மருத்துவ முகாம் நடத்தினோம். ஆனால் என் தொகுதியில் எப்படி நடத்தலாம் என்று ஜெயலலிதா கேட்கிறார்.

நீங்கள்தான் (ஜெயலலிதா) அந்த தொகுதிக்கு செல்வதில்லையே.  சட்டமன்றத்தில் உங்கள் தொகுதியை பற்றி எதுவும் பேசுவதில்லையே; ஆனால் நாங்கள் நடத்திய மருத்துவ முகாமில் 8ஆயிரத்து 700 பேருக்குத்தான் மருத்துவ பரிசோதனை நடத்த இருந்தோம். எனினும் அதற்கும் மேலாக 12 ஆயிரம் பேர் பயன்பெற்றார்கள்.

 கலைஞரின் பிறந்தநாளையொட்டி அங்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு 200 கிராம் ஆர்லிக்ஸ் டப்பா வழங்கினோம். ஆனால் அந்த ஆர்லிக்ஸ் டப்பா, ஒரு கம்பெனியிலிருந்து வாகனத்தில் வந்தபோது சோழவந்தான் அருகே திருடி மக்களுக்கு கொடுத்து விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார்.

நான் திருடியதாக ஒரு வாதத்திற்கு ஒத்துக்கொண்டாலும் கூட “ஆர்லிக்ஸ்” டப்பாவை மக்களுக்குத்தான் கொடுத்தேன்.

இந்த மாதம் மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் யாரோ கடிதம் எழுதியதாகக் கூறி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாகக்கூறி, அதனால் அடுத்த மாதம் 18-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருக்கிறார்.அந்த அம்மையார் இப்போது தானே வெளியே வருகிறார். தொண்டர்களை சந்திப்பது கிடையாது. மக்களை பார்ப்பது கிடையாது.

தலைவர் கலைஞர் தினமும் 4 மணி நேரம்தான் தூங்குகிறார். தலைமை செயலகம் செல்கிறார். கட்சி அலுவலகத்திற்கு செல்லுகிறார். அப்போதெல்லாம் எந்தவித ஆடம்பரமும் காட்டுவதில்லை. ஆனால் ஜெயலலிதா அவரது கட்சி அலுவலகத்திற்கு செல்வதையே ஒரு விழாவாக நடத்துகிறார்.

கோடநாட்டில் இருந்து சென்ற அவர் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது “வீரத்தாயே வருக”, “வெற்றித்திலகமே வருக”, “பராசக்தியே” என்றெல்லாம் விதவிதமாக போஸ்டர் அடித்து அவருக்கு வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.

நீங்கள் (ஜெயலலிதா) மதுரை வந்து விட்டுச்செல்லுங்கள். அதன்பிறகு பேசுவதற்கு நாங்கள் இன்னும் நிறைய வைத்திருக்கிறோம். அப்போது பேசுவோம்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக