ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்திப்பு

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்கான உடனடி நிவாரணம் குறித்து தமிழீழ விடுதலைக் கழகத்தின் (புளொட்) கொழும்பு காரியாலயத்தில் நேற்று மாலை கூடிய தமிழ் கட்சிகள் அரங்கம் கலந்து உரை யாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ. இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப. உதயராசா மற்றும் சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலாளர் தி. ஸ்ரீதரன் மற்றும் வரதராஜபெருமாள், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க. சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட பத்து தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் இன்றும் கூடி மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக ஆராய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சி அரங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா இல்லையா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் கட்சிகள் அரங்கத்தில் கலந்துக் கொள்ளுமாறு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன் (தந்தை செல்வாவின் மகன்) சென்னையில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் ஒன்றிணைவது குறித்து விரைவில் கூட்டமைப்பு தீர்மானிக்க உள்ளதாகவும் ம.க. சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிகளின் ஒன்றிணைவு குறித்தும் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையையும் சம்பந்தன் ஏற்றுக் கொள்ளவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளிவிவகாரச் செயலர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் இரு வாரங்களுக்கு முன் கொழும்பில் ஒரு சந்திப்பொன்றை நடத்தியது.
இச்சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விடயங்களாவன;
1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.
2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்.
3. உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல்.
4. மக்களின் வாழ்விடங்களில் இராணுவ குடியேற்றங்களைத் தடுத்தல்.
5. முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.
6. யுத்தத்தில் உடைமைகளை உறவுகளை இழந்த அங்கவீனர்களான மக்களுக்கு நட்ட ஈட்டைப்பெற்றுக் கொடுத்தல்.
7. வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும்மக்களின் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தளாத்துதல்.
8. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.
9. மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச்செய்வதுடன் அதற்கு மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்.
10. தடுத்துவைக்கபட்டிருக்கின்ற அரசியல் கைதிகள், இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த, கைதுசெய்யப்பட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்தல்.
11. இனப்பிரச்சனைத் தீர்விற்கு மாகாண சபைக்கெனப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல்.
12. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் முஸ்லீம் மலையக கட்சிக்ளை இணைந்துசெயற்படுவது.
அச்சந்திப்பில் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் யதார்த்தபூர்வமாகச் செயற்படுதல், தமிழ் கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டை வலியுறுத்தியதுடன் வடக்கு கிழக்கின் சமூகபொருளாதார கலாச்சார அபிவிருத்திப்பணிகள் உட்பட இலங்கை வாழ் மக்களின் நலன்களில் இந்தியா கரிசனையுடன் அக்கறையுடன் செயற்படும் எனவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக