சனி, 11 செப்டம்பர், 2010

பழநி அருகே 2500 ஆண்டு பழமையான ஓவியக் குறியீடு

பழநி அருகே மலைக் குகையில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து சமவெளி நாகரீக ஓவியக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரடிக் கூட்டம் மலையில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கரடிக்கூட்ட மலையில் மூன்று குகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு குகையில் தான் 2,500 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருப்பது தெரிகிறது.
கிழக்கு நோக்கி திரும்பியுள்ள இந்த குகை, மனிதன் எளிதாக ஏறிச் செல்ல இயலாத வழுக்கலான பாறை. இந்த குகையின் உட்தாழ் வாரத்தில் இரண்டு ஓவியங்கள் உள்ளன. இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதைவிட ஓவியக் குறியீடுகள் என்று கூறுவதே பொருத்தமாகும். இடது புறம் உள்ள ஓவியக் குறியீடு வெள்ளை நிறத்தில் எளிமையான சதுரமாக வரையப்பட்டுள்ளது.
11 செ. மீ. நீளத்திலும் 11 செ.மீ. உயரத்திலும் உள்ளது. இதையடுத்து வலது புறம் உள்ள ஓவியக் குறியீடு 10 செ.மீ. நீளத்திலும் 9 செ.மீ உயரத்திலும் உள்ளது. இந்தக் குறியீடு உட்புறம் நான்கு சம சதுரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு குறியீடுகளும் எதற்காக இந்த குகையில் வரையப்பட்டன என்பது புதிராக உள்ளது.
இந்த இரண்டு ஓவியக் குறியீடுகளும் சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட ஓவியக் குறியீடுகளை போல உள்ளன. சிந்து வெளி அகழாய்வில் 417 ஓவியக் குறியீடுகள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. குகையில் கண்டறியப்பட்ட இடது வெள்ளைச் சதுரம் சிந்து வெளிக் குறியீட்டின் 240வது வடிவத்துடனும் வலதுபுற நாற்சதுரம் சிந்து வெளிக் குறியீட்டின் 247வது வடிவத்து டனும் பெருமளவு ஒத்துப் போகின்றன.
சிந்து வெளிக் குறியீடுகளை படிக்க முயன்றவர்கள் இடது புறம் உள்ள வடிவத்தை வீடு என்றும், வலது புறம் உள்ள வடிவத்தை இடம் என்றும் படித்துள்ளார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மலைக் குகையில் கிடைத்துள்ள ஓவியக் குறியீடுகள் சிந்து சமவெளி குறியீடுகளை ஒத்து இருப்பது, சிந்து வெளி நாகரிகம், தமிழர் நாகரிகமே என்று உறுதியாக்க உதவுகின்றது.
இதே மலையின் ஒரு பகுதியில் சங்க காலத்தை சேர்ந்த 2,500 ஆண்டுகள் பழமையான 3 பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பல்லாங்குழிகள் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன. இதில் ஒரு பல்லாங்குழி முழுமையாக உள்ளது. மற்ற இரண்டு பல்லாங்குழிகளும் தோண்டப்பட்டு பின்பு முற்றுப் பெறாமல் நின்று விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக