செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தமிழகத்தின் பலம் மிக்கவர்கள் 10 பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால்

மிழகத்தில் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்கவர்களின்- பலம் பொருந்தியவர்களின் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது இந்தியா டுடே பத்திரிக்கை.

இந்த  வருடமும்  அப்பட்டியலை  வெளியிட்டுள்ளது  இந்தியா டுடே.
தமிழகத்தின் பலம் மிக்கவர்கள்- செல்வாக்கு படைத்தவர்கள்-2010 பட்டியலில் 10 பேர் அடங்கியிருக்கிறார்கள். பத்து பேர் அடங்கிய அப்பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம் பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நக்கிரன் கோபால் குறித்து இந்தியா டுடே, ‘’ஒரு சாதாரண லே அவுட் ஆர்ட்டிஸ்டாகத் பத்திரிகை வாழ்க்கையை தொடங்கிய கோபால் இன்று பதிப்பாளராக ஜொலிக்கிறார்.
பெரும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் நடுவில் வளர்ந்த நக்கீரன் தமிழ் புலனாய்வு  இதழியலின் முதலும்  முடிவுமாகத் திகழ்கிறது.
வாரமிருமுறை இதழ், இணையதளம், பதிப்பகம் என இவரது குழுமம் கிளை பரப்பியுள்ளது. அரசியல் செய்திக்கு நக்கீரன் என்று அடையாளம் பெற்றிருக்கிறது.

இவரது நக்கீரன் இணையதளம் மூலம் தமிழகத்தின் பரபரப்புச் செய்திகள் உலகெங்கும் பரவுகிறது.
வீரப்பன் புலனாய்வு குறித்தும், சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் முதல் முறையாக நக்கீரன் கோபால் எழுதும் 'யுத்தம்' தொடர் நக்கீரனின் சமீபத்திய பரபரப்பாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேற்கண்டவாறு நக்கீரன் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடேயின் பட்டியலில் மேலும்,

டி.வி.எஸ். மோட்டார்ஸின் எம்.டி. வேணு ஸ்ரீநிவாசன், இந்தியா சிமெண்ட்ஸின் எம்.டி. என்.ஸ்ரீநிவாசன், பாப்பீஸ் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் ஏ.சக்திவேல், அப்போலோ குழுமத்தின் எம்.டி. ப்ரீத்தா ரெட்டி,

திரைப்பட தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி, நடிகர் கமல்ஹாசன், அடையாறு ஆனந்தபவனின் எம்.டி. கே.டி.ஸ்ரீநிவாச ராஜா, சந்திராயன் திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, உயிர்மை பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக