புதன், 25 ஆகஸ்ட், 2010

கேட்பாரற்று கிடக்கும் தமிழ்மக்களின் காணிகள் யாருக்குப் பயன்படும்?.

கேட்பாரற்று கிடக்கும் தமிழ்மக்களின் காணிகள் யாருக்குப் பயன்படும்?.
வாயைக்கட்டி வயித்தைக்கட்டி சேர்த்த காசில் தமிழர்கள் காணி வாங்கி வீடுகட்டி வாழ்ந்தார்கள். பொண்டாட்டிமாரின் தகப்பன் அல்லது அண்ணன்மாரிடம் சீதனமாக வறுகி வாங்கிய காசில் வீடுகட்டினவர்களும் சீதனமாக வாங்கிய வீடுகளையும் காணிகளையும் விட்டிட்டு வெளிநாடுகளுக்கு ஓடி தஞ்சம் புகுந்த தமிழர்களின் பல காணிகளும் வீடுகளும் யாழ்குடாநாட்டில் கறையான் புற்றெடுத்து பாழடைந்த பேய் வீடுகளாக கிடக்கின்றன. வெளிநாட்டிற்கு வந்த வீரத்தமிழர்கள் புலம்பெயர்நாடுகளின் நகரங்களில் நின்று கொண்டு தமிழீழம் மலரும் என்று புலிக்கொடிகளுடன் கத்தினார்களே ஒழிய ஒரு பயலுக்கும் நாட்டில் போய் வாழ்வதற்கான எண்ணம் துளி கூட இல்லை.
சரி கேட்பாரற்று கிடக்கும் இந்தக்காணிகளையும் வீடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடுத்தால்
என்ன என யாரும் கேட்டால் சண்டைக்கு வந்து விடுவார்கள். நீயும் போயிருக்கமாட்டாய் பாதிக்கப்பட்ட மக்களையும் தங்க விடமாட்டாய் ஆனால் வாய் கிழிய அரசாங்கம் இந்த மக்களை முகாம்களில் வைத்து கொடுமை செய்கிறது என புலம்புவாய். இது தான் தமிழின் வைக்கோற்பட்ட நாயின் குணம். எல்லாம் பம்மாத்து. சுயநலம்.  மக்களுக்காக குரல் கொடுப்பது எல்லாம் வெறும் பித்தலாட்டம் தவிர வேறென்ன.
குடாநாட்டில் 40வீததற்கு அதிகமான காணிகள் வீடுகள் இப்படி கிடக்கின்றன. வித்துக்காசாக்குவதற்கு காத்திருக்கிறார்கள். சிங்களவர்கள் வந்து குடியேறக்கூடாது. காசுள்ள தமிழன் காணி வாங்கலாம். வசதியற்ற தமிழர்களுக்கு குறைந்த விலையில் அந்தக்காணிகளை விற்கவும் மனமில்லை. வெளிநாடுகளில் கள்ள மட்டை போட்டவன், சீட்டுக்காசு சுத்தினவன், போராட்டத்தின் பெயரால் மக்களைச்சுத்தி சம்பாதித்தவன், குறக்குவழியில் பணம் சம்பாதித்தவன் எல்லாம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து காணிகள் வாங்குகிறார்கள். இவ்வளவு காலமும் புலிகள் நடாத்திய சண்டையிலும் யுத்தக்கெடுபிடிகளில் சிக்கி சீரழிந்த தமிழர்களுக்கு மிஞ்சியிருப்பது கொட்டில் வீடுகளும் அரசாங்கம் நிவாரணமாக கொடுத்திருக்கின்ற சில காணிகளும் தான்.
இத்தகைய மக்கள் தற்போது வாழுகின்ற இடங்களைப் போய்ப்பார்த்தால் எதுவித வசதிகளுமற்ற புறம்போக்கு நிலங்கள். விடுமுறையில் புலம்பெயர்நாடுகளில் இருந்து போய்வருபவர்கள் பெரும்பகுதியினர் யாழ்குடாநாட்டைச்சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்கத்தினர். தங்கள் காணிகளையும் வீடுகளையும் பார்க்க்போகிறார்கள். காசிருப்பவர்கள் அதிகவிலை கொடுத்து இருக்கிற காணிகளையும் வாங்குகிறார்கள். ஏன் வாங்குகிறீர்கள் எனக்கேட்டால்.´இன்னும் கொஞ்சக்காலத்தில் காணி விலை இன்னும் ஏறிவிடும். அப்போது அதிக விலைக்கு விற்கலாம் எனப் பதில் வருகிறது.
என்னவொரு உயர்ந்த சிந்தனை?. எப்பவும் அதிகம் சம்பாதிக்கவேணும். அதுவும் சொந்த இனத்திடமே எதுவித நியாயமின்றி சுண்டுவது. இந்த இனம் எப்படி உருப்படும்?.
சிங்களவர்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுகிறார்கள் எனக் கூக்குரலிடுபவர்களும் இவர்கள்தான். சரி அவர்கள் குடியேறுகிறார்கள் என்றால் தமிழர்களை விரட்டிவிட்டு எந்த சிங்களவர்களும் தற்போது குடியேறுகிறார்களா என்ன?. வெள்வளத்தையிலும் nதிகவளையிலும் வத்தளையிலும் தமிழர்கள் வீடுகள் வாங்கி குடியேறியபோது சிங்களவர்கள் ஐயோ தமிழர்கள் இங்கு வந்து குடியேறுகிறார்கள் என எப்போதாவது ஆர்ப்பார்ட்டம் நடாத்தினர்களா? இல்லையே!
தாங்கள் எங்கும் குடியேறலாம். ஆனால் தமது பகுதிகளில் சிங்களவர்கள் வரக்கூடாது. இது ஒரு குறகிய வரட்டுச் சிந்தனை. இத்தகைய சிந்தனை இருந்தபடியால்தான் தமிழ்மக்களை சீரழிக்கவென்றே புலி இயக்கம் உருவாகியது. அது தமிழர்களை 30வருடமாக மலட்டுச் சமூகமாக மாற்றிவிட்டு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சொந்த மண்ணில் அகதிகளாகவும் பலிகொண்டும் தானும் அழிந்து போனது.
தமிழர்களிடையே சிந்தனைகள் மாறவேண்டும். தமிழ்த்தலைமைகள் மாற்றப்பட வேண்டும். இத்தலைமைகள் காலாதியாகிவிட்ட தலைமைகள். புதிய சிந்தனைகளுடன் சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய முற்போக்கான தலைமை வரவேண்டும்.
எந்த சமூகம் தன்னை காலமாற்றத்தோடு தன்னையும் மாற்றிக்கொள்கிறதோ அதுவே வளர்ச்சியடைகின்ற சமூகமாக உருவெடுக்கும். இல்லாவிட்டால் அது வாழ்வதற்கே லாயக்கற்ற சமூகமாக சீரழிந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக