இரவு விடுதிகளுக்குச் சென்ற பதின்மர் வயதினரை குறித்த இரவு விடுதிகள் இனங்காணத் தவறியமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு விடுதிகளுக்கு குறைந்த வயதானவர்கள் செல்ல அனுமதிப்பது சட்டவிரோதமாகும். இந்நிலையில், இரவு விடுதிகளுக்கு குறைந்த வயதுடையவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் அவர்கள் மதுபானம் வாங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவ்விடுதிகளில் போதைப் பொருட்களும் தாராளமாக விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் இளம் பருவத்தினர் மத்தியில் போதைப் பாவனை அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். மேற்படி சம்பவங்கள் தொடர்ந்தால் நாம் திடீர் சோதனைகளை மேற்கொள்வோம் என அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்;. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் இது தொடர்பாக கருத்து கேட்டபோது, பதின்மர் பருவத்தினர் இரவு விடுதிகளுக்குச் சென்று சுதந்திரமாக போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் கொள்வனவு செய்வது கரிசனைக்குரிய ஒரு விடயம் எனத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் பொலிஸாருக்குரியவை. நாம் இதை அவதானித்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக