புதன், 25 ஆகஸ்ட், 2010

என்ன நடக்கிறது காஷ் மீரில்? அதற்கு காஷ்மீரின் வரலாறு கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்.

காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார். அந்த நிலையில், பாகிஸ்தானின் பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர். அதைச் சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். இப்படித்தான் காஷ் மீர் இந்தியாவுக்கு வந்தது. பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப் பில் மிக முக்கியமான அம்சம் என்பது 'காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என்பது தான். ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெ டுப்பு நடத்தப்படவில்லை. நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை. காஷ் மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி 'சுதந்திர காஷ்மீர்' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டு கள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடி வம் எடுத்தது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ப தாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திர மாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ் தான். அதன்பிறகு போராட்டம், தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இது தான்.
காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளருமான கோ.சுகுமாரனிடம் பேசியபோது, "இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்று இந்தியா சொல்கிறது. கீழ்ப் பகுதியை 'இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. 'ஆனால், உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன' என்பதே பூர்வீக காஷ் மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம் கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப் படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந் தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் 'சூஃபி' வகையைச் சேர்ந்தவர்கள். தங்களைத் தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் 'சுதந்திர காஷ்மீர்' கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரி களைப் பிரதிநிதிகளாகக்கூட அழைப்பது இல்லை. ஆனால், இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகள் கொல் லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் விளக்கு ஏற்றக் கூடாது. அங்கு பயன்படுத்தப்படும் செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. (ஏனெனில், எஸ்.எம்.எஸ் தகவல்களைக் கண்காணிக்க முடியாது). எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோத னையிடும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. சித்ரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர் திடீரென வீசப்படும். எல்லைக்கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால், பாஸ்போர்ட்டும் விசாவும் வாங்க வேண்டும். அங்கு துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாள் என ஒருநாள்கூட இல்லை!" என்கிறார்.
தற்போதைய பிரச்னையின் தொடக்கம் எது? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் அதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினோம். "கடந்த ஏப்ரல் மாதம் மச்சில் என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர். 'அவர்கள் தீவிரவாதிகள்' என வழக்கம்போல ராணுவம் அறிவித்தது. ஆனால், அது அப் பட்டமான கொலை என்பதும், தங்களின் பதவி உயர்வுக்காக ராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் முன்னணியில் இருந்து ஆக்ரோஷத்துடன் போராடினார்கள். ஆனால், ஆயுதப் போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதாகவோ இல்லை. போராட்டம், தன்னெழுச்சியான தெருச் சண்டையாக இருந்தது. இளைஞர்கள் திரண்டு நின்று, ஆயுதம் தாங்கிய படை வீரர்கள் மீது கற் களை வீசித் தாக்கினார்கள். அவர்கள் மீது துணை ராணுவப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட் டில், கடந்த 60 நாட்களில் மட்டும் 52 பேர் கொல் லப்பட்டு இருக்கின்றனர். அதில் சிறுவர்களும் அடக்கம். இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும், கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர். காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர். போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக்கூடங்களை அமைத்துள்ளனர். காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.
விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி, கடும் அடக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோஷமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி. ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. 'வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது, லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது' என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச் னையைத் தீர்க்காது. அங்கு நடப்பது அரசியல் போராட்டம். முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண் டும்.
தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்தத் திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடி யாது. ஏனெனில், அது யார் சொல்லியும் தொடங் கியது அல்ல; இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது? ஒரே வழி, அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்ப்பதுதான்!" என்கிறார் மார்க்ஸ்.
அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படி யேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக