புதன், 25 ஆகஸ்ட், 2010

5 ஆண்டுகளில் யாழ். மீன்பிடி தொழில் வளம் 35 வருடத்துக்குமுன்னைய நிலை

யாழ். மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் வளம் இன்னும் ஐந்தாண்டுகளில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய நிலையை எட்டுமென்று யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வீ. நவரட்ணம் தெரிவித்தார். அரசாங்கம் மீனவர்களுக்கு அளிக்கும் உதவிகளை அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல், பண்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டால் 35 வருடங்களுக்கும் முன்னைய நிலையை அடைய முடியுமென்று அவர் கூறினார்.

1983 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மீன் பிடியின் 20வீதம் யாழ். மாவட்டத்தில் பிடிக்கப்பட்டது. மாதம் நான்காயிரம் மெற். தொன் வீதம் வருடத்திற்கு 48 ஆயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னைய காலத்தைப் போன்று அதிகரிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நவரட்ணம் தெரிவித்தார்.
‘யாழ்ப்பாணத்தில் மீன்வளம் கடந்த 20 ஆண்டுகளாக அழிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அழிக்கப்பட்டு வருகின்றது. சென்னையிலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி வரையிலான கடற் பிராந்தியத்தில் மீன் வளம் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது இலங்கையின் வடபகுதிக் கடலிலும் அழிக்கப்படுகிறது. முறையற்ற விதத்தில் மீன்பிடிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. கடந்த 20 வருடங்களாகத் தமிழக மீனவர்கள் வடபகுதிக் கடல் வளத்தை அனுபவித்தார்கள்.
அதேநேரம் வளத்தை அழித்தும் விட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர். இது குறித்து தமிழக மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பண்பான மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 24 மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியா சென்றிருப்பதாகவும் கூறினார். யாழ். மாவட்டத்தில் உள்ள 117 மீன்பிடிக் கிராம சங்கங்களும் 10 பிரதேச செயலகப் பிரிவுகளின் சமாஜங்களும் உள்ளன.
இவை அனைத்தின் சார்பிலும் தமிழகம் சென்றுள்ள பிரதிநிதிகள் அங்கு கலந்துரையாடிய விடயங்களை மக்களுடன் (மீனவர்களுடன்) பகிர்ந்து, அவர்களின் அபிப்பிராயங்களுடனே தீர்மானம் எடுத்து அரசுக்கு அறிவிக்க வேண்டும்.
முதலில் மக்களின் பிரச்சினைகளை அறிய வேண்டும் என்று குறிப்பிட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் நவரட்ணம், கடற் தொழில்துறை அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இழுவைப் படகுகளையும் தங்கூஸ் வலைகளையும் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டிருப்பதாகவும், அதன்படி மீனவர்களும் பண்பான முறையில் மீன்பிடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இவ்வாறு செயற்படுவதன் மூலமே யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக