திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழல்பந்து வீச்சில் சாதனை படைத்த ஒரே ஒரு பவுலராக முரளி


முத்தையா முரளீதரனின் பெயர் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்று சொன்னால், உண்மையிலேயே அதில் மிகை இல்லை.தன் பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 800 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளையும் 515 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளையும் முரளீதரன்  சாய்த்திருப்பது சாதாரணமான சாதனை இல்லை. இது முரளியின் தனிப்பட்ட சாதனை மட்டும் அல்ல, இதனால் இலங்கை என்கிற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியே உலக அரங்கில் எழுந்து நின்றது.

முன்பெல்லாம் ரஞ்சி டிராஃபி போட்டி போல இலங்கை அணியும் இந்தியாவுக்கு வந்து லோக்கல் அணிகளோடு சோப்ளாங்கியாக விளையாடி விட்டுப் போகும்.1992-ம் வருடம் முரளீதரன் இலங்கை டெஸ்ட் அணிக்கு வந்த பிறகு எல்லாமே மாறிப்போனது. அதற்கு முன்னால் இலங்கை அணி 38 டெஸ்ட் மாட்சுகளில் விளையாடி இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும்தான் ஜெயித்திருந்தது. முரளி வந்து எல்லாவற்றையும் மாற்றிக் காட்டினார்.ஒவ்வொரு டெஸ்ட் மாட்சிலும் சராசரியாக ஆறு விக்கெட்டுகளை எடுத்தவர் முரளீதரன்.

அவர் ஒரு மாட்ச் வின்னர்.இலங்கை அணியின் 54 டெஸ்ட் வெற்றிகளின் ஹீரோவாக அவர் விளையாடி இருக்கிறார்.இலங்கை இதுவரை வெற்றி பெற்ற ஆட்டங்களில் 40 சதவீத விக்கெட்டுகளை அவர் சாய்த்திருக்கிறார். தன்னுடைய கடைசி டெஸ்ட் மாட்சிலும் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவை தோல்வி காண வைத்தார். தமிழர்களை எல்லா வகையிலும் புறக்கணிக்கும் ஒரு நாட்டில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக கடைசி வரை வலம் வந்த முரளியின் பலம் ஒன்றே ஒன்றுதான், பிறரால் காப்பியடிக்க முடியாத அவருடைய திறமை.
ஆரம்ப காலங்களில் கண்டி பகுதியில் தமிழ் கிரிக்கெட் யூனியன் என்கிற அணிக்காக விளையாடியவர் முரளீதரன். இவருடைய கை அமைப்பே கொஞ்சம் வித்தியாசமானதுதான்.பவுலிங் போடும் போது பார்த்தால் மாங்காய் அடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் அது த்ரோ அல்ல என்பதை பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான் தீர்ப்பளித்தார்கள். இரண்டு ஆஸ்திரேலிய அம்பயர்கள் இது போங்கு பவுலிங் என்று புகார் எழுப்பினார்கள். முரளியின் தூஸ்ரா எனப்படும் பந்து வீச்சு உலகப்புகழ் பெற்றது. அதைத்தான் அந்த அம்பயர்கள் பொய் என்று சொன்னார்கள்.
1995-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் ஆடியபோது முரளீதரனுக்கு வயது 23. அம்பயர் டாரல் ஹேர் முரளியின் பந்து வீச்சைத் தவறு என்று சொல்லி ஏழு முறை “நோ பால்’ கொடுத்தார். சுற்றிலும் இருந்த 50000 கிரிக்கெட் ரசிகர்கள் முரளியை கிண்டல் செய்தார்கள்.முரளியின் பவுலிங்கையே ரத்து செய்யும் நெருக்கடிக்கு உள்ளானார் ரணதுங்கா. போட்டி முடியும் வரை பொறுமையாக இருந்த இலங்கை அணியினர் பிறகு ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தனர்.ஐ.சி.சி.யும் முரளியை ஹாங்காங்கிற்கு அனுப்பி பயோமெகானிக்கல் சோதனை செய்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார் முரளீதரன். நிறவெறி கொண்ட ஆஸ்திரேலிய ரசிகர் கூட்டத்தை அமைதியாக எதிர் கொண்டார் முரளீதரன்.
உலக கிரிக்கெட் ஸ்பின் பவுலிங் விதிப்படி ஐந்து டிகிரி வரை ஸ்பின்னர்கள் தங்கள் கையை இழுத்து வீசலாம். ஆனால், முரளியின் கை ஒன்பது டிகிரி வரை நீண்டது.ஐ.சி.சி.யே சற்று அரண்டுதான் போனது. ஆனாலும் மற்ற ஸ்பின்னர்களின் பவுலிங் பாணியை ஆராய்ந்த போது அவர்கள் எல்லோருமே ஐந்து டிகிரிக்கு மேலேயே பந்து வீசியது தெரிய வந்தது. அதற்குப் பின் தன் ஐந்து டிகிரி விதியையே தளர்த்தியது ஐ.சி.சி. அதன் புதிய விதிப்படி முரளியின் தூஸ்ராவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆராய்ச்சி முடிவில் பார்க்கும் போது ‘தூக்கி வீசுவது போலத் தோன்றும்’ (optical illusion) என்று முரளிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளிவந்தது. அதற்குப் பிறகு நடந்தது சரித்திரம்.
முரளி¢யின் தூஸ்ராவைப் பார்ப்பது என்பதே ஒரு பரவச அனுபவம். ஆடுபவருக்கோ நைட்மேர். முரளிக்கு தூஸ்ரா எப்படியோ அதே போல் ஷேன் வார்னேவுக்கு ‘ஸ்லைடர்’. ஆனாலும் ‘ஸ்லைடரா’ல்  ‘தூஸ்ராவை வெற்றி காண முடியவில்லை.“எனக்குத் தெரிந்து முரளியின் சாதனையை யாராலும் எட்ட முடியாது”என்று சொல்லியிருக்கிறார் வார்னே.டெஸ்ட் கிரிக்கெட் என்பதே அஸ்தமன நிலையில் இருக்கும் காலத்தில் அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழல்பந்து வீச்சில் சாதனை படைத்த ஒரே ஒரு பவுலராக முரளி பாராட்டப்படுகிறார். ( நம்மூர் சந்திரசேகரும் அந்த வகைப்பட்டவர்தான்) பந்து வீசும் கடைசி நொடியில் முரளியின் முக பாவத்தைப் பார்த்தால் குழந்தைகள் பூச்சாண்டியோ என்பது போல் மிரண்டு அலறும். அந்த அளவுக்குத் தீவிரம். கடைசி நொடியில் மணிக்கட்டைத் திருப்பி தூஸ்ராவைச் செலுத்துவதில் இன்னொரு முரளியை இனி பார்ப்பது சாத்தியமில்லை.
முரளீதரன் ஒரு ஹாஃப் ஸ்பின்னர்தான். ஆனால், தேர்ந்த ஆட்டக்காரரான ஆலன் பார்டரே முதலில் அவரை ஒரு லெக் ஸ்பின்னராகத் தவறாகக் குறிப்பிட்டார். காரணம், முரளியின் குழப்பும் பவுலிங்பாணி. இவருடைய பந்து வீச்சின் வித்தியாசமான தன்மை காரணமாகவே,டெஸ்ட் கிரிக்கெட்டின் சம்பிரதாயமான ஃபீல்டிங் அமைப்பை மாற்றி அமைத்து பல போட்டிகளில் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார், இலங்கையின் வெற்றிகரமான காப்டனான அர்ஜுனா ரணதுங்கா. ஒரு தனிமனிதனின் வெற்றிக்குத் தலைவனின் துணை அவசியம் என்பதற்கு எடுத்துக்காட்டு ரணதுங்கா.முரளியின் பவுலிங் ஆக்ஷன் காரணமாக எல்லோரும் சந்தேகப்பட்ட போது முரளி என் அணியில் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றவர் அவர்.
லோக்கல் கிரிக்கெட், உலக கிரிக்கெட், இங்கிலாந்து கவுண்டி மாட்சுகள் என்று எங்கே ஆடினாலும் முரளி விக்கெட்டுகளை அள்ளிச் சாய்ப்பார். இலங்கை லோக்கல் மாட்சுகளில் 46 போட்டிகளில் 234 விக்கெட்டுகளை அள்ளினார். இங்கிலாந்து கவுண்டி மாட்சுகளில் 33 போட்டிகளில் 236 விக்கெட்டுகள். சென்ற இடமெல்லாம் விக்கெட்டுகள்! இலங்கை அணி வெளிநாடுகளில் ஆடி வென்றே இருக்காத சூழலில் நியூஸிலாந்திலும் பாகிஸ்தானிலும் ஜெயிக்கக் காரணமாக இருந்தவர் முரளீதரன்தான். முரளியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தங்களுடைய அரசின் கொள்கைகளை எதிர்த்து ஜிம்பாப்வே அணியில் ராஜினாமா செய்து புரட்சி செய்தார்கள் பல வீரர்கள். முரளி ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது பலருடைய கேள்வி. விளையாட்டு வீரன் இதைப் போன்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் என்கிற சாமர்த்தியமான பதிலை நாம் முரளீதரனுக்கும் சொல்லிக் கொள்ளலாம். உலக சாதனை படைத்த தமிழன் முரளீதரன் என்று சற்று சங்கடமாகவே சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி, ராஜபக்ஷேயின் கையால் விருது பெற்றாலும், முரளியின் சாதனை மலைக்க வைப்பதுதான்!. அபூர்வமான பவுலர் முரளி!.
- கிருஷ்ணா டாவின்ஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக