ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

89000 விதவைகள் ஆண்களிடம் மனமாற்றம் ் ஏற்பட வேண்டும்

விதவைகள்
மனமாற்றம் ஆண்களிடம் ஏற்பட வேண்டும்
(வாசுகி சிவகுமார்)
தீபா மேத்தாவின்வோட்டர்திரைப்படம் வெளியாகி சில வருடங்களாகின்றன.வோட்டர்திரைப் படத்தில் இந்து விதவைகள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து வாதப்பிரதிவாதங்களை அந்தக் கால கட்டத்தில் வெளியான பத்திரிகைகள், ஊடகங்களில் காணக் கூடியதாகயிருந்தது. இந்தியாவின் சிறுபான்மையினரான பிராமணர்களிடையே ஒரு காலத்தில் வழக்கில் இருந்த விதவா நடைமுறைகளை இப்போது தீபா மேத்தா எதற்காகக் கிளற வேண்டும் என்றெல்லாம் கூட விமர்சனங்கள் எழுந்தன.
மொட்டையடிப்பதும், வெள்ளைப் புடவை அணிவித்து மூலையில் உட்கார வைப்பதும், எமது சமூகங்களில் இல்லை என்றாலும், கணவனை இழந்த பெண்ணுக்கு எமது சமூகம் தரும் விதவை என்ற பட்டமே அவளது ஆற்றல்களை எல்லாம் அடக்கி ஒரு மூலையில் முடக்கி போட்டு விடும் ஆயுதம்தான்.
இந்நிலையில் நம் நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் 89,000 விதவைகள் வாழ்வதாக தற்போது வெளியான புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இவற்றில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கிலும் 40,000 விதவைகள் வடக்கிலும் வாழ்கின்றனர். மட்டக்களப்பில் மாத்திரம் 25,000 விதவைகள் இருப்பதாக சிறுவர் மேம்பாடு மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.
வடக்கு, கிழக்கில் உள்ள விதவைகளின் மீள் எழுச்சிக்கென 250 மில்லியன் ரூபாவை இந்திய அரசு வழங்கி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் அதிக எண்ணிக்கையான விதவைகள் வாழ்வதால் இம்மீள் எழுச்சித் திட்டத்தின் முதற் கட்டம் மட்டக்களப்பில் இருந்தே ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த மீள் எழுச்சித் திட்டத்திற்கெனத் தெரிவு செய்யப்படும் விதவைப் பெண்களுக்கு தையல், விவசாயம், கணனி போன்றனவற்றில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அது மாத்திரமல்லாமல், அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள் தையல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.
யுத்தத்தின் போதோ இயற்கை அனர்த்தங்களின் போதோ அவற்றின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிப்பவர்கள் பெண்களும் சிறார்களும்தான்.
அவ்வாறு கணவனை இழக்கும் பெண்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் வழி தெரியாது தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மனோ நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று யாழ். பல்கலைக்கழக அறிக்கையொன்று கூறுகின்றது.
இந்நிலையில் கணவனை இழந்து வாழவழி தெரியாது விழிபிதுங்கி நிற்கும் அபலைப் பெண்களை இனம் கண்டு அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகளை வழங்குவதன் மூலமும் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சிகள் மூலமும் அவர்களைத் தங்களது சொந்தக் காலில் நிற்பதற்கான தைரியத்தையும், வழிகாட்டலையும் வழங்கும் அரசின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியவை. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
விதவைகளுக்கான இந்த மீள் எழுச்சித் திட்டத்தில் விதவா விவாகமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது பலரதும் அபிப்பிராயம். 89,000 விதவைகளுக்கும் மறுமணமா? என்று அவ்வாறான முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதவைகளைப் பொறுத்தளவில் பூவும், பொட்டும்தான் நாம் கண்ட அதிக பட்சப் புரட்சிகள். விதவா விவாகம் என்பது இன்னமும் எமக்குப் பேசாப் பொருள்தான். எனவே, விதவைகளுக்கென விடுக்கப்பட்டுள்ள இம்மீள் எழுச்சித் திட்டத்தில் விதவைகள் மறுமணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒட்டுமொத்த சமூக சிந்தனை மாற்றத்துக்கான திட்டங்களும் உள்வாங்கப்படுவது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவை.
ஐ.நா. அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் கிழக்கு மாகாணத்தில் விதவையாகியுள்ள 49,000 பெண்களில் 35,000 பேர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் எனக்குறிப்பிட்டுள்ளது. வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்துக்குச் சில காலத்துக்கு முன்னர் வரை 10 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகள் அமைப்பினரால் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தமது பிள்ளைகள் பலவந்தமாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆட்சேர்க்கப்படுவதைத் தடுக்க, அங்குள்ள பெற்றோர் மிகச் சிறிய வயதிலேயே அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் வட பகுதியில் கணவனை இழந்தவர்களில் அநேகர் மிகவும் இளவயதுப் பெண்களாக இருக்கின்றனர்.
கையில் குழந்தையுடன், கணவனைப் பறி கொடுத்து வாழவழி தெரியாது தத்தளிக்கும் இளம் பெண் பிள்ளைகளை வடக்கில் அதிகளவில் காணமுடியும். பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் பாரதூரமானவை அவர்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், தம்மைப் பாதுகாக்கின்ற கணவன்மாரை இழந்த நிலையில் விதவைகள் பாலியல் வல்லுறவுகளுக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே விதவைகளை ஒதுக்கி வைக்கும் சமூகம், இவ்வாறான சம்பவங்களால் அவர்களை இன்னமும் ஓரங்கட்டி வருகின்றது.
இந்நிலையில்தான் விதவைகள் தொடர்பான சிந்தனைப் போக்குகளில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. கணவனை இழந்த பெண்கள் சமூக, உளரீதியாகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். எந்நாளும் சமூகத்தின் பழிச்சொல்லுக்கு அஞ்சியே வாழ வேண்டிய அவலம் அவர்களுக்கு.
கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே
வேரில் பழுத்த பலா
மிகக் கொடிய தென்று பட்டதண்ணே
குளிர்கின்ற வட்டநிலா
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகள் இவை. இளம் வயதிலேயே பெண் விதவையானாலும் மறுமணம் செய்ய இந்துச் சட்டத்தில் அனுமதியில்லாத போது மனக்குமுறலுடன் அவர் பாடிய வரிகள் இவை. இந்தியாவில் இந்துச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதும் மறுமணங்கள் மிக அரிதாகவே அங்கு இடம்பெறுகின்றன.
இஸ்லாத்தில் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதியுண்டு. விதவைகளின் மறுவாழ்வு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இறுதித் தூதர் அண்ணல் முஹம்மது நபி அவர்கள் தன்னைவிட வயதில் மூத்தவரை மணம் முடித்து வழிகாட்டி இருக்கிறார். நான்கு விதவைகளை அவர் மணம் முடித்திருக்கின்றார்.
இந்து மதத்தவர்களின் விதவைச் சம்பிரதாயங்கள் எல்லாம் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததற்கான சான்றுகள் எவையும் இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தவிர, பொட்டு போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முகலாயப் படையெடுப்புக்குப் பின்னர் தோன்றியவையாகக் கருதப்படுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்திலேயே விதவைகள் இறந்த தமது கணவன்மாருடன் எரிகப்பட்டனர். இந்து தர்மமோ, வேதங்களோ, விதவைகள் உயிருடன் எரிக்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை. இந்து தர்மப்படி திருமணத்துக்கான உடற் தகுதி உள்ள பெண், கணவன் தகனம் செய்யப்பட்டு, அவனது சாம்பல் நீரில் கரைக்கப்பட்ட பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்குத் தகுதியான கன்னியாகின்றாள் என்றே கூறப்படுகின்றது. எனவே, 18 ஆம் நூற்றாண்டில் தான், உடன் கட்டையேறுதல் உள்ளிட்ட விதவா சம்பிரதாயங்கள், இந்து சமயத்தவர்கள் மத்தியில் தோன்றியிருக் கூடும்.
பெண்ணின் உடலும் மனமும் ஒருமுறை யாருக்கேனும் கொடுக்கப்பட்டால் அவள் சாகும் வரையில் அவ்வாறேதான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனைகளே அவற்றுக்கு வித்திட்டிருக்கின்றன. சாதி, மத, கற்புச் சித்தாந்தங்கள் அவற்றைத் தலைமுறை தலைமுறையாக வலியுறுத்தியும் வருகின்றன. இச்சிந்தனைகளால் இறுக்கமாகிக் கட்டுண்டு போயிருக்கும் எமது சமூகத்தில் நாம் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை விதவைகளுக்கு வலியுறுத்துவதோ விதவை மறுமணம் பற்றி ஆண்களிடம் பேசுவதோ இலகுவானதல்ல.
மேலைத்தேய நாடுகளில் சாதிபேதங்கள் இருப்பதில்லை. அங்கு மறுமணம் என்பது ஒரு புரட்சிகரமான நடைமுறையும் இல்லை.
இதற்காக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களில், திருமணம் என்பது ஆண் - பெண் இருபாலாருக்கும் அவசியமான ஒரு எளிய தேவை என்பது உணரச் செய்யப்பட வேண்டும். எமது தமிழ்ச் சூழலில், விதவை திருமணங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இடம்பெறுகின்றன. அதுவும் குழந்தைகள் இல்லாத விதவைகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை உள்ளவர்களுக்கு மறுமணம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக அரிதாக உள்ளன.
விதவைகள் மீள் எழுச்சித் திட்டத்தில் அவர்களது மறுமணம் குறித்த திட்டங்களோ விழிப்புணர்வு நடவடிக்கைகளோ இடம்பெற்றுள்ளனவா என்று பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டோம். மீள் எழுச்சித் திட்டம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிக்கப்பட்டதும் விதவைகளின் மறுமணத்துக்கான ஏற்பாடுகள் பற்றியும் சிந்திப்போம், திட்டங்கள் வகுப்போம் என்று பிரதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாம் ஏனையவர்களைப் போல சகல சந்தோஷங்களோடும் வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணம் விதவைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டிய அதே வேளையில், தாம் தியாகம் செய்ததாக அல்லாமல் முழுமனத்துடன் விதவைப் பெண்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் ஆண்கள் மத்தியில் வளர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக