வியாழன், 12 ஆகஸ்ட், 2010

200 இலங்கை அகதிகளுடன் செல்லும் கப்பல் தற்போது கனடாவின் 200 மைல்

அகதிகள் கப்பல் கனடா பொருளாதார எல்லையை அடைந்துவிட்டது

200 இலங்கை அகதிகளுடன் செல்லும் கப்பல் தற்போது கனடாவின் 200 மைல் பிரத்தியேக பொருளாதார வலய கடலுக்குள் நுழைந்துவிட்டது. அக்கப்பலை கனேடிய கடற்படை பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்குக் கொண்டு செல்கிறார்கள். தற்போது இக்கப்பலில் 500 அகதிகள் வரை இருக்கலாம் என நம்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இக்கப்பல் இன்று மாலை அல்லது நாளை காலை கரையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கப்பல் குறித்து கனேடிய கடற்படை அதிகாரிகளும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்றாலும் கூட, 188 அடி நீளமான இந்த சரக்குக் கப்பலைத் தாம் நேற்று புதன்கிழமை காலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையிலிருந்து 300 மைல் அப்பால் கண்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவற்படையின் தளபதி மார்க் மக்கட்டன் தெரிவித்துள்ளார். இக்கப்பல் கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் நுழைந்தபோது கனடா கடற்படையால் மறிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்னும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ளநிலையில், விக்ரோறியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக