ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வெல்வானோ தெரியாது, 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும், தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.


ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.
கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.
2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.
1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக