இதுதொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த மாதத்தில் இலங்கை பிரதமர் வருகை தந்தபோது அவருடன் விவாதங்களோடு, அண்மையில் வருகைபுரிந்த இலங்கை நாடாளுமன்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினரின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளேன்.
இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்கொள்ளும்.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்வதன்மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதில் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த மறுவாழ்வுப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதும், மேலும் அங்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் தொடர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.
இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சியில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான நடைமுறைகளில் தங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இன்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து முள் வேலி முகாம்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவித்து வந்த போது தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு இலங்கை சென்று அங்குள்ள நிலையைக் கண்டு வந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் ஒரு சிறப்புத் தூதரை அனுப்புமாறு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே மீண்டும் தமிழகத்திலிருந்து ஏதேனும் ஒரு குழு இலங்கை செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பதிவு செய்தது: 17 Jul 2010 6:59 pm
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிட்டது.. கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்க. பிரபாகரனால் கூட கண்டு கொள்ள முடியாத பிரச்சினைக்கு தமிழ் நாட்டு தங்கத்தலைவன் தீர்வினை பெற்றுக்கொடுத்துவிட்டான். இனிமேல் ஈழத்தமிழர் இங்கு வந்து ஓலம் இடுவதை நிறுத்தலாம். இனி கலைஞ்சரை வசைபாடுவதை நிறுத்தி தமிழ் நாட்டு பிரச்சினையில் தமிழ் நாட்டு தலைவனை ஈடுபடத்தி தமிழ்நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையினை கலைஞர் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக