சனி, 17 ஜூலை, 2010

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேரில்

இலங்கை முதலீட்டு சபையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டு அபிவிருத்தியில் பங்கேற்பதற்கென சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியுமுள்ளனர்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள பிரான்டெக்ஸ் மாஸ் ஹோல்டிங், டிமெக்ஸ் கார்மன்ட்ஸ் ஒமேகா லைன் ஓரிக் அப்பிரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமுகமாக வருகை தந்தவர்களாவர். இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜெயம்பதி பண்டாரநாயக்கா தலைமையில் வருகை தந்த மேற்படி முதலீட்டாளர்கள் இன்று காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். முதலீடுகள் மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக அச்சுவேலி மேற்கு பிரதேசம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேரடியாகவே அங்கு சென்று அப்பிரதேசத்தைப் பார்வையிட்ட முதலீட்டாளர்கள் தமது தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் கண்டனர்.

மேலும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் மோகன்ராஸ் இலங்கை மின்சார சபை வடபிராந்திய அத்தியட்சகர் முத்துரட்ணானந்தசிவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதம பொறியியலாளர் சுதாகரன் வீதி அபிவிருத்தி திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலகிருஷ்ணன் வலி.கிழக்கு காணி அதிகாரி என். நமசிவாயம் நீர் வழங்கல் அதிகார சபை மாவட்ட பொறியியலாளர் கே.செல்வகுமார் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

மேற்படி அரச உயரதிகாரிகளினால் முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய நீர் வழங்கல் மின்சார விநியோகம் காணி வழங்கீடு உட்பட அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தமது திருப்தியை வெளியிட்ட முதலீட்டாளர்கள் விரைவிலேயே தாம் முதலீடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரியப்படுத்தினார்கள். மேற்படி ஐந்து சர்வதேச நிறுவனங்களும் தமது முதலீட்டு நடவடிக்கைகளுக்கு அறுபத்துஐந்து ஏக்கர் நிலத்தினை கோரியுள்ள நிலையில் இன்றையதினம் முதற்கட்டமாக இருபத்து ஐந்து ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபையின் யாழ். கிளைக்காரியாலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை முதலீட்டுச் சபையினர்  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்குகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை ஆரம்பிக்க வருகை தந்துள்ள சர்வதேச முதலீட்டாளர்களை வரவேற்றதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால யுத்தத்தினால் அழிந்து போயுள்ள வடபிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச முதலீட்டாளர்கள் பிரதான பங்கை வகிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன் பெருமளவு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினையும் இம்முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வின் இறுதியில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜெயம்பதி பண்டாரநாயக்கா நன்றி தெரிவித்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக