ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பாலச்சந்தர் புகழாரம்,சினிமா வாழும் வரை மதராசப்பட்டினம் படம் பேசப்படும்

இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் சாராம்சம்...

அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.

இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.

உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.

மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.

நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.

உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.

உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.

சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.

படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.

படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி
அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.

படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.

உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.

விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.

அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.

இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக