ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கருணாஸ், சீமான் தன் சுயநலத்துக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறா

நான் ஒரு சாதாரண நடிகன். அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. தமது அரசியல் இலாபத்துக்காக சீமான் என்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்” என்று ஆவேசப்படுகிறார் நடிகர் கருணாஸ் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கருணாநிதி.

இவர் தன் மனைவி மற்றும் மகனுடன் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரியன் எப்.எம்.மின் ஆண்டு விழாவில் சமூகமளிப்பதும் பின்னர் கதிர்காமத்துக்குச் சென்று மகனுக்கு மொட்டை போடுவதுமே அவரது இலங்கை நிகழ்ச்சி நிரல். சூரியன் எப்.எம்.மின் அஷ்ரஃப் இவருக்கு நண்பர். கருணாஸின் பேட்டிகள் சூரியனில் ஒரிபரப்பாக காரணமாக இருந்த அஷ்ரஃப் விடுத்த வேண்டுகோளை கருணாஸ் ஏற்றிருக்கிறார். அதன் பிரகாரம் நடிகர் சங்கத்திடமும் முறைப்படி அனுமதி கேட்டு பயண ஏற்பாடுகளைச் செய்த சமயத்தில்தான் கரடி புகுந்த மாதிரி சீமானின் ஆட்கள் புகுந்து கருணாஸ¤க்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவரைப் பற்றிய அவதூறு குறுந்தகவல்களையும் அனுப்பி இலங்கைப் பயணத்தைக் குலைத்திருக்கிறார்கள். இப்போது மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கருணாஸ்.

தனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கருணாஸ் தொலைபேசி ஊடாக வாரமஞ்சரிக்கு விவரமாகத் தெரிவித்தார். மலேசிய தலைநகரில் நடைபெறவுள்ள எந்திரன் பாடல் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் போதே அவர் வாரமஞ்சரியுடன் தொடர்பு கொண்டார்..

மஞ்சரி: உண்மையில் என்ன நடந்தது?

கருணாஸ்: சூரியன் அஷ்ரஃப் ஒரு நல்ல பையன். அடிக்கடி என்னுடன் பேசுவார். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அவர் தனது சூரியன் எப்.எம்.மின் ஆண்டு விழா ஜுலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வாருங்களேன் என்றும் அன்புடன் அழைப்பு விடுத்தார். என் மகனுக்கு எட்டு வயதாகிறது. இன்னும் மொட்டை போடவில்லை. முருகன் எங்களுக்கு இஷ்ட தெய்வம். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். எங்கள் உறவினர்கள் இலங்கையில் இருந்திருக்கிறார்கள். போய் வருவார்கள். என் ஆயா கதிர்காமக் கந்தனைப் பற்றி அடிக்கடி சொல்வார். முருகனை வணங்குவார். எனவே நானும் என் மகனுக்கு கதிர்காமத்தில் மொட்டை போடலாம் என்று தீர்மானித்தேன்.

நாங்கள் எங்கள் செலவிலேயே வருகிறோம். சூரியன் வைபவம் முடிந்ததும் எங்களை கதிர்காமத்துக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினேன். இலங்கையில் செலவுகள் சூரியன் பொறுப்பேற்கும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஏற்பாடுகளை நான் செய்தேன்.

நாங்கள் பயணிப்பதற்கு இரண்டு நாள் இருக்கையில் காலை 9.49 க்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறு முனையில் பேசியவர் தன்னை மகேந்திரவர்மன் என அறிமுகம் செய்து கொண்டதோடு தான் ‘நாம் தமிழர்’ கட்சிப் பிரமுகர் என்றார். என்ன விஷயம் என்று கேட்டேன். நீங்கள் இலங்கைக்குப் போகக் கூடாது என்றார். இலங்கையில் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே உலக விசாரணை வரவிருக்கிறது. இப்படியான ஒரு நாட்டுக்கு நீங்கள் போவதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே இலங்கைக்குப் போகக்கூடாது. பயணத்தைக் கைவிடுங்கள் என்றார் அந்த நபர்.

எனக்கு இதைக்கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான்கு தினங்களுக்கு முன்னரேயே நான் இலங்கைக்கு பயணப்படுவதாகவும் அதற்கான காரணத்தையும் கைப்பட எழுதி திரைப்படச் சங்கத்தின் ராதாரவியிடம் கொடுத்து அவர் அனுமதியையும் வாங்கி இருந்தேன். அதில் நான் எந்தவொரு பொது நிகழ்விலோ, படப்பிடிப்பிலோ அல்லது கலை நிகழ்ச்சியிலோ கலந்து கொள்ளப்போவதில்லை என்றும்விளக்கமாகக் கூறியிருந்தேன். அலுவலகம் ஒன்றில் நடைபெறும் ஆண்டு விழாவிலும் பின்னர் கதிர்காம பூஜை வழிபாட்டிலும் கலந்து கொள்ளவே செல்கிறேன் என்று சொன்னதும் ராதாரவி அதற்கு சம்மதம் தந்து வழியனுப்பினார். எனது நிலை இப்படித் தெளிவாக இருக்க என்னைத் தடுக்க இவர் யார்? அதுவும் தொலைபேசியில் மிரட்டுவதற்கு? என்ற எரிச்சல் என்னில் ஏற்பட்டது.

நான் என்பக்க நியாயத்தைச் சொன்னேன். அவர் அதைக் கேட்கவில்லை. கொழும்பில் உங்கள் வருகைபற்றி போஸ்டர் போட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது தோழர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னார்.

அதற்கு நான், அங்கே ஒரு தமிழ் ரேடியோ பல வருடங்களாக தமிழ் மொழியில் ஒலிபரப்பு சேவையை நடத்தி வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமிழ் சேவை நடக்கிறது என்பதே நமக்கெல்லாம் ஒரு பெருமைதானே! நான் ஒரு கலைஞன் என்ற வகையில் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றியே தீருவேன். நான் வருவதாக அவர்களிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். வாக்கை மீற முடியாது என்று நான் பதில் சொன்னதும் மறுமுனையில் பேசியவருக்கு ஆத்திரம் வந்தது. சரி போவதாக இருந்தால் அதன் பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

மஞ்சரி: அதன் பின்னர் என்ன நடந்தது?

கருணாஸ்: அன்றிரவே அவர்கள் என்னைப்பற்றி அவதூறான எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். நான் திரட்டிய தகவலில் 254 பேருக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிங்கள அரசு விடுத்த அழைப்பை ஏற்று பத்து இலட்சம் ரூபா தொகை பேசி உளவாளியாக இலங்கை செல்கிறார் கருணாஸ், அவரை வாழ்த்தி அனுப்புங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. எனது தாய் ஒரு சிங்களப் பெண் என்றும் தகவல் பரப்பப்பட்டிருந்தது.

மறு தினம் நான் ஸ்டூடியோவில் உத்தமபுத்திரன் படப்பிடிப்பில் இருந்தேன். எனக்கு வந்த ஒரு அழைப்பு இலங்கைக்கு செல்லாதே! உயிரோடு திருப்பமாட்டாய் என்றது. இன்னொரு அழைப்பில் வந்தவர் ஈழத் தமிழர் இறப்பைக் கொண்டாடவா போகிறாய்? என்று சிடுசிடுத்தார். அப்போதுதான் இவர்கள் என்னைப்பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பி இருப்பதை புரிந்து கொண்டேன். நான் இலங்கைக்கு போக நினைத்தது நல்ல காரியத்துக்காக. அதை அப்படியே இவர்களின் சுயநலத்துக்காக மாற்றி விட்டார்கள் என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது.

அன்றைய தினம் இரவு என் வீட்டுக்கு மூவர் வந்தார்கள். இலங்கைக்குப் போகக்கூடாது என்றார்கள்.

மஞ்சரி: நீங்கள் என்ன சொன்னீர்கள்?

கருணாஸ்: என்னைப் பற்றி அவர்களிடம் சொன்னேன், 1985 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடிவிற்று 25 ஆயிரம் ரூபா நிதி சேகரித்து இலங்கை அகதிகளுக்காக அனுப்பி வைத்த தமிழ் உணர்வாளன் நான். அன்று முதல் இன்று வரை நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நாம்செய்யக்கூடிய உருப்படியான உதவி என்றால் அது அவர்களுக்கு கல்வியூட்டுவதுதான். சூர்யா, விஜய் போன்ற நடிகர்களிடம் சொல்லி இலங்கை அகதி மாணவர்கள் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணங்களை செலுத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நானும் 25 மாணவர்களை தத்து எடுத்து படிப்பித்து வருகிறேன்.

ஈழப் பிரச்சினை இன்று நேற்று வந்தது அல்ல. 40 வருடங்களுக்கு மேலாக இருந்துவரும் பிரச்சினை அப்போது இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள்? கடந்த காலங்களில் இங்கிருக்கும் தமிழ் அகதிகள் பல நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறார்கள். அப்படித் தகவல் வரும் போதெல்லாம் நான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, கையைக் காலைப் பிடித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நான் உண்மையாகவே ஒரு தமிழ் உணர்வாளன். என்னிடம் கோடிக்கணக்காக பணம் இருக்குமானால் 25 என்ன, அகதி முகாம்களில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி அளித்திருப்பேன். எனவே எனக்கு ஆத்திரம் வருவது நியாயம்தானே?

மஞ்சரி: அவர்களிடம் என்ன கூறினீர்கள்?

கருணாஸ்: தமிழகத்தில் மூன்று இலட்சம் அகதிகள் இருக்கிறார்களே உங்களில் ஒருவராவது அவர்களைச் சென்று பார்த்திருப்பீர்களா என்று கேட்டேன். நான் அரசியல்வாதியல்ல எம்.பி, எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது என்றேன். முன்னர் பர்மா அகதிகள் தமிழகத்தில் இருந்தார்கள். இப்போது பர்மா அகதி முகாம் இங்கே கிடையாது. அவர்களின் பிள்ளைகள் எல்லாம் படித்து பெரிய மனிதர்களாகி விட்டார்கள். கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். நான் அவர்களிடம் சென்று இந்த இலங்கை அகதிகளின் கல்விக்கு, உயர் கல்விக்கு உதவும்படி கேட்டிருக்கிறேன்.

மாணவர்களிடம் காசு தர வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கற்கும் கல்லூரிகளில் அவர்கள் பெயரில் பணம் கட்டிவிட்டால் போதுமானது. இப்படி தமிழ்ப் பற்றாளனாக என்னால் முடிந்த உதவிகளை காதும் காதும் வைத்தமாதிரி செய்து வருகிறேன். என்னைப்போய் இவர்கள் மிரட்டுவதா? மறுநாளே நான் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் போய் மனு கொடுத்தேன். என் துயரத்தையும் மனக் கஷ்டத்தையும் சொன்னேன். இப்போது அந்த நபர் வர்மன் முன்ஜாமின் வாங்கியிருப்பதாக கேள்விப்படுகிறேன்.

மஞ்சரி: இப்போது நிலை என்ன?

கருணாஸ்: இலங்கை அரசிடம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் ஐந்து இலட்சம் அட்வான்ஸ் வாங்கியதாகவும் சொன்னது மிகப்பெரும் மோசடி. இந்தப் பிரசாரம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. செய்ததை சொல்லிக் காட்டுவது தமிழ் மரபு அல்ல. நான் செய்த சின்னச் சின்ன உதவிகளை எல்லாம் வெளியே சொல்ல வைத்துவிட்டார்களே என்ற உணர்வு என்னில் இருக்கிறது. மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நான் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டிய தினத்தன்று நடிகர் சங்கத்தில் கூட்டம் வைத்திருந்தார்கள். கூட்டம் இருக்கும்போது நான் அங்கே இருக்க வேண்டும் அல்லவா? அதனால் கொழும்பு செல்லவில்லை.

மஞ்சரி: கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?

கருணாஸ்: சாதகமாகத்தான். நட்சத்திரங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியாக வெளிநாடு செல்லலாம். அவர்கள் செல்லாமா வேண்டாமா என்பதை நடிகர் சங்கம் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். நடிகர்களை வெளி அமைப்புகள், தனிநபர்கள் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ அனுமதிக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சரி: இப்படி மிரட்டுவதும் ஒரு வகையான பயங்கரவாதம் அல்லவா?

கருணாஸ்: நடிகர் சங்கம் நல்ல முடிவெடுத்திருப்பது நிறைவைத்தருகிறது. இவர்கள் தமது இருப்புக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க முயல்கிறார்கள். கலையை அரசியலாக்க வேண்டாம் என்பதே என் கோரிக்கை. எப்படி எல்லாம் என்னைப்பற்றி பொய்ப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்? இன்று தமிழ் உணர்வு தனக்கு மட்டுமே இருப்பதாகக் கூறும் சீமான் எப்படி தம்பி படத்தில் பூஜா என்ற சிலோன் நடிகையை நடிக்க வைத்தார்? சீமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 15 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். இலங்கை அகதிகளுக்காகத் துடிக்கும் இவர்கள் இலங்கை அகதிகளுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?

மஞ்சரி: அசின் விவகாரம் எப்படி?

கருணாஸ்: அவர் ஒரு மலையாளி, தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார்கள். இப்போது ஹிந்திப்படவுலகில் இருக்கிறார். அவர் ஒரு சாதாரண நடிகை. தமிழ் நடிகை அல்ல. அவரிடம் தமிழ் உணர்வை எதிர்பார்க்க முடியாது. அவர் தான் விடுத்த அறிக்கையில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் எனினும் நடிகர் சங்கத்துக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறி இருக்கிறார். அவரது பிரச்சினை மறுபரிசீலனைக்காக உயர் மட்டக் குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சரி: எந்திரன் படம் எப்படி வந்திருக்கிறது?

கருணாஸ்: சுப்பராக வந்திருக்கிறது. ஒரு பிராந்திய மொழிப்படத்துக்காக அதிக செலவு செய்யப்பட்டிருப்பது எந்திரனுக்குத்தான். மொத்தம் 140 கோடி ரூபா செலவு செய்து உலக தரத்துக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழன் என்ற வகையில் நாம் அனைவரும் இப்படி ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதற்காக பெருமைப்பட வேண்டும்.
Thinakaran -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக