திங்கள், 5 ஜூலை, 2010

மட்டக்குளி , பழிவாங்கும் நோக்கத்துடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் தங்கள் உடைமைகளை அடித்து

மட்டக்குளி பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் பதற்றம் நிலவியது.  நேற்று முன்தினம் இரவு பொலிஸ் நிலையத்தை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில்  31இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.    மேலும் பொலிஸார் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் புகார் தெவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு போதைப்பொருள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின்  பிடியில் இருந்த சமயம் அவரது கையில் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தை  சூழ்ந்து  கொண்ட குழுவினர்   பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதுடன் பெருமளவு பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு  கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலை 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களுள் பலர் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை எனவும் தெரிவிக்கும் பிரதேசவாசிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் பொலிஸாரும்   இராணுவத்தினரும் தங்கள் உடைமைகளை  அடித்து   நொருக்கி   சேதம்   விளைவித்ததாகவும்   தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. பியந்த சாந்த ஜயக்கொடி    இந்த புகாரை நிராகரித்ததுடன், பொதுமக்களின் உடைமைகளை சூறையாடும் அவசியம்   எதுவும்   பொலிஸாருக்கோ,    இராணுவத்தினருக்கோ  கிடையாது என்றும் தெரிவித்தார்.   மேலும்  இராணுவத்தின்  உதவியுடன்   நிலைமையைக் கட்டுப்பாட்டின்   கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினமிரவு கைது செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் விநியோகஸ்தர்  எனக்கருதப்படும் நபர்,  பொலிஸாரின் பிடியில் இருக்கையில் காயமுற்றதாகப் பரவிய தகவலையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் இரும்புகள், கற்கள் கொண்டு மட்டக்குளி பொலிஸ் நிலையத்தை  தாக்கியதாகக்   கூறப்படுகிறது.
இதேவேளை, இச்சம்பவத்தில் ஒரு சில இளைஞர்களும் காயத்துக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் பொலிஸ் நிலையத்திலுள்ள கண்ணாடி ஜன்னல்களை தாக்கியபோதே காயங்களுக்குள்ளானதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை என்பவற்றை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் பரந்த அளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் மாளிகாவத்தைப் பகுதியில் போதைவஸ்து விற்பனையாளர்கள் சல்லடைபோடப்பட்டனர்.     அதன் தொடர்ச்சியாகவே  மட்டக்குளி  பிரதேசத்தில் போதைவஸ்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது   என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாட்டுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவோர் மற்றும் விற்பனை செய்வோர் விடயத்தில் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதே வேளை கைது செய்யப்பட்ட  31 இளைஞர்களும் நேற்று பிற்பகல் கொழும்பு நீதிவான் எம்.எம். மொஹமட் முன்னிலையில் பொலிஸாரினால் ஆயர்படுத்தப்பட்டனர் .     இவர்களை    48 மணி நேரம் பொலிஸ்   காவலில் தடுத்து வைத்து   விசாரணை நடத்துவதற்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக