வெள்ளி, 2 ஜூலை, 2010

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்

எத்தனையோ இந்தியர்கள் இலங்கைக்கு போகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார். அப்படி இருக்கையில் நான் படப்பிடிப்புக்கு போனதை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் ஆசின்.

இலங்கைக்கு இந்தியத் திரையுலகினர் யாரும் போகக் கூடாது என திரைப்படக் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. அப்படி போவோருக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகை ஆசின் தற்போது சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டு ரெடி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கடுப்படைந்துள்ளனர். இவ்வளவு சொல்லியும் ஆசின் போயிருப்பதால்அவருக்கு தடை விதிக்கப்படும் என ராதாரவி கூறியுள்ளார்.

ஆசின் தற்போது விஜய்யுடன் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆசின் கூறுகையில்,

நான் ஒரு நடிகை. படப்பிடிப்பு லொகேஷனை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தயாரிப்பாளரும், இயக்குனரும்தான் அதை முடிவு செய்கிறார்கள். ஆனாலும் தற்போதைய நிலைமைகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன், அவர்கள் கேட்கவில்லை.

ரெடி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி விட்டேன். எனவே படம் எடுப்பவர்களின் முடிவுகளை என்னால் மீற முடியாது. நான் வெறும் நடிகை. அரசியல்வாதி அல்ல. என்னை பிரச்சினைகளுக்குள் சிக்க வைப்பது சரியல்ல.

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். இந்திய கப்பல் படை தலைமை அட்மிரல் நிர்மல் வர்மா ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்திருக்கிறார். தினமும் சென்னையில் இருந்து ஆறு விமானங்கள் இலங்கை செல்கின்றன.

அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை போகிறார்கள். என்னை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன்? நடிப்பு என்பது எனது பணி. அதை செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளேன். சினிமாவையும் விளையாட்டையும் அரசியல் ஆக்க கூடாது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னை சந்தித்தனர். எனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றார் ஆசின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக