வியாழன், 1 ஜூலை, 2010

சொத்தை அபகரிக்க சூழ்ச்சி: நித்யானந்தா பெண் சீடர்களின் தந்தை புகார்

நித்யானந்தா கைதான போது அவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண் சீடர்கள் பலரும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இது போல குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தோவாளையைச் சேர்ந்த பெண் சீடர்கள் கிருஷ்னேஸ்வரி என்ற நித்ய பிரீத்தானந்தா (வயது29), இவரது தங்கை சித்ரேஸ்வரி என்ற நித்ய பிராவனானந்தா(28) ஆகியோரும் பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு வந்தனர்.

இப்போது நித்யானந்தா ஜாமீனில் வெளி வந்து ஆசிரமத்துக்கு சென்றதையடுத்து இவர்களும் ஆசிரமத்திற்கு புறப்பட்டனர். அதற்கு முன்னதாக நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில் தாங்கள் இருவரும் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சொந்த விருப்பத்தின் பேரில் செல்கிறோம். ஆனால் எங்களின் பெற்றோர் இதை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

அதோடு ஆசிரமத்திற்கு சென்றால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என்றும், நித்யானந்தா எங்களை கடத்தி சென்று விட்டதாக புகாரில் தெரிவிப்பேன் என்றும் மிரட்டுகிறார்.

மேலும் எங்களை மதம் மாற்றி கட்டாய திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார். எனவே எங்களின் பெற்றோர் இது பற்றி புகார் செய்தால் அது பொய்யான புகார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த செய்தி இன்று பத்திரிகைகளில் வெளியானது. இது பற்றி பெண் சீடர்களின் தந்தை சிவபாலன் கூறியதாவது:

தமிழக அரசின் கால்நடை துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று உள்ளேன். எனக்கு 2 மகள்கள் மட்டுமே இருந்தனர். கிருஷ்னேஷ்வரி, சித்ரேஸ்வரி ஆகிய அவர்கள் இருவரும் நன்றாக படிப்பார்கள். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்கவும் அனுமதி கொடுத்தேன். மகள்களின் நலனுக்காக ஏராளமான சொத்துக்களையும் சேர்த்து வைத்தேன்.

எனது ஓய்வூதிய பணத்தையும் பாங்கிகளில் டெபாசிட் செய்து வைத்தேன். இந்த விவரங்கள் எனது உடன் பிறந்த தம்பியான கண்ணணுக்கு (விஸ்ரூபானந்தா) தெரியும்.

அவர் சென்னையில் மத்திய அரசு பணியில் இருக்கிறார். நித்யானந்தாவுடன் அவருக்கு பழக்கம் உண்டு. ஒரு முறை ஊருக்கு வந்த போது எனது மகள்களிடம் நித்யானந்தா பற்றி பேசினார்.

மேலும் எனது மகள்களை நித்தியானந்தாவின் சீடர்களாக்கி அவர்களுக்கு வெளிநாட்டில் ஆசிரமம் அமைத்து தருவதாகவும், ஆசைவார்த்தை கூறினார்.

இதில் மயங்கி போன மகள்களை அவர் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பிடதி ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். நன்றாக படித்து என்னோடு பாசமாக பழகி வந்த மகள்கள் இதன் மூலம் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.

ஆரம்பத்திலேயே இதை கண்டுகொள்ளாதது தான் எனக்கு வினையாக வந்து விட்டது. இப்போது அவர்கள் ஆசிரமமே கதி என்று இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? என்று நான் யோசித்த போது தான் அதன் பிறகு எனது குடும்பத்தில் நடந்த பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.

குறிப்பாக மகள்கள் இருவரும் ஆசிரமத்திற்கு சென்ற பின்பு எனது தம்பி என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். சமீபத்தில் கூட ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் உடனே வேண்டும் என்று நச்சரித்தார். அந்த பணத்தை இங்கிருந்து நான்தான் பாங்கி மூலம் மெயில் டிரான்ஸ்பர் செய்து அனுப்பி வைத்தேன். இப்போது என் சொத்துக்களை குறி வைத்து கேட்டு வருகிறார்.

மகள்களுக்காக டெபாசிட் செய்த ஓய்வூதிய பணத்தையும் கேட்கிறார். அவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களை நன்றாக படிக்க வைக்கும் தம்பி எனது மகள்களை என்னிடம் இருந்து பிரித்து சொத்துக்களை அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார்.

நித்யானந்தா மீது புகார் கிளம்பி அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த என் மகள்கள் இருவரும் இங்கு வரவில்லை. அவர்கள் சென்னையில் என் தம்பி வீட்டில் தான் இருந்தனர்.

இப்போது அவர்கள் இங்கு வந்ததாகவும், நான் அவர்களை கட்டாய படுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், வேண்டும் என்றே பொய் புகார் கொடுத்துள்ளனர்.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலையில் இருந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் முடங்கி கிடக்கிறேன். இதற்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். விரைவில் எனது வக்கீல் மூலம் இதற்கு பதில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக