வியாழன், 1 ஜூலை, 2010

தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே கூட்டணி தொடர்பான பூர்வாங்க பேச்சுகள்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறது. தற்போது அ.தி.மு.க.வில் ம.தி.மு.க.,   இந்திய கம்யூனிஸ்டு,   மார்க்சிஸ்டு உள்பட 7 கட்சி கள் கூட்டணியாக செயல்படுகின்றன.தே.மு.தி.க.வையும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
2005-ல் தே.மு.தி.க. கட்சி தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களையும், உள்ளாட்சி தேர்தல்களையும் தனியாக சந்தித்து கணிசமான ஓட்டுகளை பெற்றது.  வர இருக்கும் சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருமா? என்று கேட்டதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதில் அளிக்கையில் தேர்தலின் போது முடிவு செய்வோம் என்றார்.
தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே கூட்டணி தொடர்பான பூர்வாங்க பேச்சுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இரு கட்சிகளின் 2-வது மட்ட தலைவர்கள் மத்தியில் பேச்சுகள் நடைபெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணிக்கு அச்சாரமாக வருகிற 5-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணி தலைமையில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தே.மு.தி.க. வும் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க. வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே நெருக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நேருக்கு நேர் சந்தித்து பேச ஏற்பாடு நடக்கிறது. விரைவில் இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு 40 முதல் 45 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதற்கு இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசும்போது இதில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிகிறது. அ.தி.மு.க. மட்டும் 135 தொகுதிகளில் போட்டியிடும். மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் முடிவாகி உள்ளது.
இதுபற்றி தே.மு.தி.க. நிர்வாகிகள் கூறும்போது, எங்கள் கட்சி பலம் பெற்று வருகிறது. 15 சதவீத ஓட்டுகள் தே.மு.தி.க.விடம் உள்ளது. கவுரமான முறையில் எங்களை நடத்த வேண்டும் என்றும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறோம். 40 முதல் 45 தொகுதிகள் என்பதை ஏற்க முடியாது என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக