வெள்ளி, 9 ஜூலை, 2010

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம்

நேற்று  இரவு  கடலில் மீன் பிடிக்கச் சென்ற  நாகப்பட்டினம்  மாவட்டம்,  வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த  செல்லப்பன்  என்ற  மீனவர்,  இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு  உயிரிழந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’7-7-2010  பிற்பகல்  12 மணி அளவில்  கடலுக்குள்  மீன் பிடிக்கச் சென்ற  நாகப்பட்டினம்  மாவட்டம்,  தலைஞாயிறு  காவல் சரகத்தைச் சேர்ந்த  வெல்லப்பள்ளம்  கிராமம்,  மீனவர் காலனியைச்  சேர்ந்த  செல்லப்பன்  உள்ளிட்ட  நான்கு  பேர்  கோடியக்கரைக்கு தென்கிழக்கே   சுமார்  இருபது  கடல்  மைல்  தொலைவில்  இரவு  பத்து  மணி அளவில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,
அங்கு  வந்த   இலங்கை  கடற்படையினர்  தமிழக  மீனவர்களைப் பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்த  மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும்,  அந்தத் தாக்குதலில்  செல்லப்பன்  என்ற  மீனவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,  வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை  செய்ததாகவும்  செய்தி வந்துள்ளது. 

  இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களை  இவ்வாறு  கொடுமை புரிவதென்பது  இது முதல் முறையல்ல.    தொடர்ந்து நடைபெறும்  தொடர்கதையாக உள்ளது. 

  தமிழக மீனவர்களின் இந்தத் துயர  நிலை குறித்து -  தமிழக அரசின் சார்பில்  மத்திய அரசுக்கும், பிரதமருக்கும்,  தொடர்புடைய அமைச்சர்களுக்கும்  இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும்  கோரிக்கைகளை விடுத்தும்  தமிழக மீனவர்களின் அவலம்   நின்ற பாடில்லை.

   தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை  சித்ரவதைக்கும் கொலைக்கும் ஆளாகும்போது  -  மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும்  நம்மைச் சமாதானப்படுத்துகின்ற  முயற்சியிலே  ஒரு கடிதமோ, வேண்டுகோளோ  இலங்கை அரசுக்கும் விடுப்பதும்  - ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும்  மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்றாகும்.

 இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே  பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று  ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட,  தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு  -  தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட,  அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும்,  முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இது போன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அதற்கு மாறாக,  தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும்  இக்கொடுமையைக் களைய  மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு  இது போன்ற  செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க  -  கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு   இந்த நிகழ்ச்சி  பற்றிய  உண்மை விபரமும்  தமிழக  மக்களுக்குத்  தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக