ஞாயிறு, 4 ஜூலை, 2010

""ஸ்டாலின் - கனிமொழி ரகசியமாக துவக்கியுள்ள சாராய ஆலைகள் எங்கே உள்ளது என்பதை

""ஸ்டாலின் - கனிமொழி ரகசியமாக துவக்கியுள்ள சாராய ஆலைகள் எங்கே உள்ளது என்பதை ஜெயலலிதா தெரிவிக்க வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து 2001ம் ஆண்டு வரை தமிழகத்தில், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஐந்து தான் இருந்தன. கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தான், "மிடாஸ்' ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில், ஐந்து மதுபான ஆலை அதிபர்களும் தங்களுடைய ஆண்டு மதுபான உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்று கோரியபோது, நான் அதற்கு அனுமதிக்கவில்லை. அப்போது, "கோல்டன் டிஸ்டிலரீஸ்' நிறுவனம், தமிழகத்தில் மதுபானத் தேவைகள் அதிகமாக இருப்பதால், தங்களுக்கு மதுபானம் தயாரிக்க தனியாக உரிமம் தர வேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்தது. புதியதாக யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்பதால், அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. அந்நிறுவனம் கோர்ட்டுக்கு சென்று தங்களுக்கு சாதகமாக உத்தரவு பெற்றது. ஆனாலும், அந்நிறுவனத்திற்கு சிறப்பு உரிமம் வழங்காமல், மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால்,  2001ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்றவுடன்  அந்நிறுவனம் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் உடனுக்குடன் ஏற்கப்பட்டன.

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி, அந்நிறுவனம்,"மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ்' என பெயர் மாற்றிக் கொண்டதாக தெரிவித்தது அதையும் அரசு ஏற்றுக் கொண்டது. இந்த பெயர் மாற்றம் வெளியே வந்த பிறகு, அரசாங்கம் இவ்வளவு அவசர, அவசரமாக அந்நிறுவனத்திற்கு என்ன காரணத்தினால், இந்த அனுமதியை வழங்கியது என்ற விவரங்கள் எல்லாம் வெளி உலகத்திற்கு தெரியவந்தன. மற்ற நிறுவனங்களுக்கு இவ்வளவு மது தான் தயாரிக்க வேண்டும் என்ற அளவுகோல் உள்ள நிலையில், "மிடாஸ்' நிறுவனத்திற்கு மட்டும் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தவரை அளவுகோல் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் மது தயாரிக்கலாம் என விதிமுறை தளர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த மிடாஸ் நிறுவனத்திற்கும், ஜெயலலிதாவிற்கும் எந்தளவிற்கு தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. "மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா அரசு விற்பனை செய்தது ஏன்?  இதற்காகத்தான் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தியதா?  அரசின் வருவாயை பெருக்குவதாகக் கூறி, தனது பினாமி நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தது எப்படிப்பட்ட குற்றம்? இது பற்றியெல்லாம், கடந்த கால ஆட்சியில், நான் விடுத்த அறிக்கைக்கு அரசின் சார்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.
ஸ்டாலினும், கனிமொழியும் இணைந்து ரகசியமாக சாராய ஆலை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு அதிகளவில் ஆர்டர்கள் வழங்க இருப்பதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாள் தவறினாலும், அறிக்கை விடத் தவறாத அவர், கனிமொழியும், ஸ்டாலினும் சேர்ந்து துவங்கியுள்ள சாராய ஆலை எங்கே இருக்கிறது என்பதையும், அதற்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஆர்டரையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கருணாநிதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக